search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வேலைக்கு உரிய தகுதிகள்
    X
    வேலைக்கு உரிய தகுதிகள்

    வேலைக்கு உரிய தகுதிகள்

    ஒருபுறம் வேலை கிடைக்கவில்லை என்கிற கூக்குரல்கள். மற்றொருபுறம் வேலையைச் செய்யத்தக்க சரியான நபர்கள் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம்.
    இன்றைக்கு படிக்கும் வாய்ப்புகளுக்கு குறைவில்லை. படித்து முடித்து வெளிவரும் இளையோர்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. ஆனால், எல்லோருக்கும் திருப்தியான வேலைகள் கிடைக்கவில்லை.

    ஏன் இந்த நிலை?

    நாட்டில் நிலவும் பொருளாதார சுணக்கம், பெரிய அளவுகளில் உருவாகாத புதிய வேலைவாய்ப்புகள் என்று இதற்கு பலவற்றை காரணங்களாக சொல்லலாம். அவையெல்லாம் நிச்சயமாக சரி செய்யப்பட வேண்டும். அரசாங்கங்கள் இன்னும் பல முயற்சிகள் எடுக்க வேண்டும்.

    சரி, அவை மட்டும்தான் காரணம் என்று விட்டுவிடலாமா?

    நான்கு ஆண்டுகள் தொழில்முறை படிப்பான பி.இ. அதன்பின் இரண்டு ஆண்டுகள் மேல் எம்.எஸ்சி., எம்.இ. படிப்பெல்லாம் படித்துவிட்டு, கலாசி, பாயிண்ட்ஸ்மேன், உதவியாளர் போன்ற படிப்புக்கு தொடர்பில்லாத வேலைகளுக்கு முயற்சிக்கும் நிலை வந்திருப்பதற்கு வேறு எவை காரணங்களாக இருக்கக்கூடும் என்றும் ஆராய வேண்டும் அல்லவா?

    படித்து முடித்த எவருக்குமே வேலை கிடைக்கவில்லை என்பதல்ல நிலை என்பதும் எப்படிப்பட்ட சுமாரான சூழ்நிலையிலும் நல்ல வேலைகளை பெறுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதும், பல்வேறு நிறுவனங்கள், அவர்களுக்கு தேவைப்படும் திறன்வாய்ந்த ஊழியர்கள் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பனவும் கூட உண்மைதான்.

    ஆம், வேலைக்கு தேர்வு செய்யும் நிறுவனங்களின் அதிகாரிகள், “கல்லூரி படிப்பு முடித்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்தான். ஆனால், அவர்களில் வேலை செய்ய பொருத்தமானவர்களாக நூற்றுக்கு 20 பேர் கூட இல்லை” என்று தெரிவிக்கிறார்கள்.

    ஆக, ஒருபுறம் வேலை கிடைக்கவில்லை என்கிற கூக்குரல்கள். மற்றொருபுறம் வேலையைச் செய்யத்தக்க சரியான நபர்கள் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம்.

    ‘படிப்பு முடித்து வெளிவரும் பலரும் வேலைக்கு தகுதியானவர்களாக, அதாவது ‘எம்ப்ளாய்பிள்’ ஆக இல்லை’ என்று சொல்லப்படுவது ஏன்?

    வேலைக்கு தகுதியானவர்கள் என்றால் என்ன? அதென்ன தனி தகுதி? அதென்ன ‘எம்பிளாய்பிள்’? அதுதான் பட்டப்படிப்பில் அல்லது முதுகலையில் பெற்ற உயர் மதிப்பெண்கள் இருக்கிறதே. அந்த தகுதி போதாதா? என்று திருப்பிக்கேட்கலாம்.

    இங்கே ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்க வேண்டும். உயர்ந்த மதிப்பெண் என்பது மட்டுமே வேலைக்கான தகுதி அல்ல. கல்லூரியில் படித்து, உயர்ந்த மதிப்பெண் பெற்று வெளிவரும் பலரும் செய்திருப்பது என்ன?

    குறிப்பிட்ட பாடத்திட்டத்தை படித்து, அவற்றை தேர்வுகளில் சரியாக எழுதியதுதான். அதை மட்டும்தான் மதிப்பெண்கள் பிரதிபலிக்கின்றன. வேலைகளை செய்வதற்கு அது மட்டுமே போதுமா என்ன?

    எதைக் கற்றுக்கொள்வதிலும் ஆறு நிலைகள் இருக்கின்றன.

    ஆரம்ப நிலை நினைவில் வைத்து கொள்வது. இரண்டாவது நிலை, புரிந்துகொள்வது. மூன்றாம் நிலை, தெரிந்துகொண்டதை பயன்படுத்த முடிவது. நான்காம் நிலை, அதை அலசி ஆராய முடிவது. ஐந்தாம் நிலை, அப்படிப்பட்டவற்றை எடைபோட, மதிப்பீடு செய்ய முடிவது. ஆறாம் நிலை, அப்படிப்பட்ட புதியவைகளை உருவாக்க முடிவது.

    உதாரணத்திற்கு, திரை இசை கற்றுக்கொள்ளும் ஒரு மாணவரால் பாடல்களை மனப்பாடமாக சொல்லமுடிந்தால் அது, இசையமைப்பில் ஆரம்ப நிலை. அவரே மெட்டுகள் உருவாக்கினால் அது ஆறாம் நிலை.

    இதை ‘டேக்சோனமி ஆப் லேர்னிங்’ என்கிறார்கள். கீழிருந்து மேல் படிநிலைகளாக இதைப் பார்த்தால் இப்படி இருக்கும்.

    மாணவர்களால் படித்ததை நினைவில் வைத்துக்கொண்டு தேர்வுகள் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட முடியும்.

    ஆனால், கற்றலில் அது வெறும் தொடக்க நிலைதான். மதிப்பெண் பெற இந்த ஆரம்ப நிலையே போதும். ஆனால், சிறப்பாக பணியாற்ற இது போதாது.

    குறிபிட்ட வேலையைச் செய்து முடிக்க, ஒருவர் அதில் குறைந்தபட்சம் மூன்றாவது நிலையையாவது எட்டியிருக்க வேண்டும்.

    பல கல்லூரிகளின் தேர்வு முறைகள் முதல் அல்லது இரண்டாம் நிலை வரை மட்டுமே சோதிப்பனவாக இருக்கின்றன. அதனால்தான் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றும் சிலர் வேலை செய்ய தகுதி பெறாதவர்களாக வேலை கொடுப்பவர்களால் கணிக்கப்படுகிறார்கள், நிராகரிக்கப்படுகிறார்கள்.

    ஆக, மாணவர்கள் தேர்வு செய்திருக்கும் பாடங்களில், அடுத்தடுத்த நிலைகளுக்கு போகவேண்டும். அப்படி நகர்ந்தால், உயர் நிலைகளை அடைந்தால் அது பல்வேறு அற்புதமான வேலைகளை, வாய்ப்புகளை அவர்கள் வசம் இழுத்து வந்து சேர்க்கும். அதை கல்லூரிகளே செய்யவேண்டும். இல்லையேல் மாணவர்கள் அவர்கள் சுயமுயற்சியிலாவது அந்த நிலையை அடைய வேண்டும்.

    வேலைக்கான தகுதியில் படிப்பும், மதிப்பெண்களும் மட்டுமே போதாது என்பதை இன்னொரு விதமாகவும் உணர்ந்துகொள்ள முடியும்.

    எந்த வேலையை சரியாக செய்வதற்கும் சில தகுதிகள் தேவை. அதை ஆங்கிலத்தில் ‘காம்பிடென்ஸ்’ என்கிறார்கள்.

    உதாரணத்திற்கு ஒரு பெரிய சிமெண்டு தொழிற்சாலையில் லாரி ஓட்டுனர் வேலை. லாரியை ஓட்டும் தகுதி யாருக்கு இருக்கிறது, எவர் ஓட்டலாம்? என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? அதற்குரிய லைசென்ஸ் பெற்ற எவரும் ஓட்டலாம் என்றுதானே.

    அந்த நிறுவனம் தேர்வுக்கு வரும் ஓட்டுனர்களிடம் என்ன தகுதிகளை எதிர்பாக்கும்?

    1. பல்வேறு வகை லாரிகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஓட்டவேண்டிய ஊர் பற்றி தெரிந்திருக்க வேண்டும். சாலைவிதிகள் மற்றும் வண்டி ஓட்டுவது தொடர்பான சட்ட விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

    2. பல்வேறு விதமான லாரிகளை ஓட்ட இயல வேண்டும். உயர்ந்த ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

    3. எரிச்சல் படாமல், கோபம் கொள்ளாமல், நெரிசல்களில், சிக்கலான நேரங்களில் ஓட்ட முடிய வேண்டும். சாலை விதிகளை அலட்சியம் செய்யாமல் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.

    கவனித்திருக்கலாம். தேவைப்படும் தகுதியில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. முதலாவது செய்ய வேண்டிய வேலை குறித்த அறிவு, ‘நாலெட்ஜ்’. அடுத்தது செய்யும் திறன், ‘ஸ்கில்’. மூன்றாவது அந்த வேலையைச் செய்ய பொருத்தமான மனோபாவம் எனப்படும் ‘ஆட்டிடூட்’.

    பத்தாவது மட்டுமே படித்த ஒருவரும், எம்.இ. படித்த ஒருவரும் இந்த வேலைக்கு முயற்சித்தால், கூடுதல் படிப்பு என்பதற்காக எம்.இ. படித்தவருக்கு இந்த வேலையைக் கொடுப்பார்களா அல்லது இருவரில் எவருக்கு மேற்சொன்ன மூன்று தகுதிகளும் இருக்கிறதா என்று பார்ப்பார்களா?

    ஆக, படிப்பு, மதிப்பெண்கள் ஆகியவை தேவைதான். ஓரளவிற்கு. அவை மட்டுமே போதாது.

    லாரி ஒட்டுவதற்கு மட்டுமல்ல. இந்த தகுதி தேவை என்பது எல்லாவிதமான வேலைகளுக்கும் உண்டு. போலீஸ் வேலை, கணக்காளர், மேலாளர், மேற்பார்வையாளர், மென் பொறியாளர், வங்கிப் பணியாளர், ஆசிரியர், பேராசிரியர் என்று எந்த வேலைக்கும் வேறுபடும் தகுதிகள் உண்டு.

    எந்த வேலைக்கு ஆளெடுக்கும் போதும் மூன்றையும் பார்ப்பார்கள். படிப்பு, ‘நாலெட்ஜ்’ என்ற முதலாவதைக் கொடுக்கும். பயிற்சி, திறன் என்ற இரண்டாவதைக் கொடுக்கும். மூன்றாவதான மனோபாவம் இயல்பிலேயே இருக்கும். தனது மனோபாவத்திற்கு பொருத்தமான வேலைகளுக்கு முயற்சிப்பதும், சேர்வதும் உதவும். அல்லது முயற்சிக்கும் விரும்பும் வேலைக்கு உரிய மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

    டாக்டர் சோம வள்ளியப்பன்
    Next Story
    ×