என் மலர்

  ஆரோக்கியம்

  நட்பு காதலாகலாம் காதல் நட்பாகக்கூடாது
  X

  நட்பு காதலாகலாம் காதல் நட்பாகக்கூடாது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நட்பு என்ற முகமூடியுடன் பழகும் ஆண்- பெண் யாராக இருந்தாலும் குற்றவாளிகள்தான்.
  நட்பு என்பது உன்னத உறவுதான். ஆனால் ஆண்- பெண் நட்புக்கு ஒரு எல்லை இருக்கிறது. அத்துமீறிய ஆண்-பெண் நட்பால் அபாயமான விளைவுகள் ஏற்படும். இந்த எல்லை மீறல்களால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதற்கு சமீபத்தில் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன.

  ஒன்றாக திரையரங்கு சென்று படம் பார்ப்பது, ஊர் சுற்றுவது, கொளுத்தும் வெயிலில் கடற்கரை மணலில் உரசிக்கொண்டு பல மணி நேரம் பேசிக் கொண்டிருப்பது, மணிக்கணக்கில் போனில் பேசிக் கொண்டிருப்பது, பரிசுகளை பரிமாறிக் கொள்வது இதையெல்லாம் வெறும் நட்பாக பெண் களால் பார்க்க முடிகிறது. அப்படி சில ஆண்களால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை. அதனால் ‘நான் நட்பாகத்தான் பழகினேன்’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு பிரியும்போது மற்றவருக்கு வலி ஏற்பட்டுவிடுகிறது. கூடவே அவ மானத்தையும், ஏமாற்றத்தையும் தருகிறது. விபரீத விளைவுகளை உருவாக்குகிறது.

  தொட்டு தொட்டுப் பேசுவது, தோள்மீது கைபோட்டுக் கொண்டு போவது, ரகசியமாக சந்தித்துப் பேசுவது இதெல்லாம் நட்பு எல்லைக்குள் வராது. அத்து மீறல்களே. இதெல்லாம் மிகப்பெரிய சிக்கலில் போய் முடியும்.

  நட்பு என்ற முகமூடியுடன் பழகும் ஆண்- பெண் யாராக இருந்தாலும் குற்றவாளிகள்தான். இது அவர்களுக்கு அவர்களே ஆபத்தை தேடிக் கொள்ளும் செயல். ஒரு ஆண் எந்த எல்லைக்கும் போய்விட்டு, இது வெறும் நட்பு என்று சொல்லிவிட்டால் சரியாகிவிடுமா? போன மானம், மரியாதை, கற்பு திரும்ப கிடைத்துவிடுமா? அதேபோல ஒரு பெண்ணும் நெருங்கி பழகிவிட்டு, நான் நட்போடுதான் பழகினேன் என்று சொன்னால் சரியாகுமா?

  ஒரு பெண், ஆணோடு பழகினால் காதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நல்ல நட்பாகவும் இருக்கலாம். ஆனால் அந்த நட்பின் இலக்கணம் தெரிந்த வர்களுடன், எல்லை மீறல் நடக்காத வகையில் பழக வேண்டும். இன்றைய இளைய சமுதாயம் நட்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பழகிவிட்டு, தன்னைத்தானே ஆபத்தில் சிக்கவைத்துக்கொள் கிறது.

  ஒரு ஆண், மற்றொரு ஆண் நண்பனை அழைத்துக் கொண்டு தனியாக சினிமா பார்க்க செல்லலாம். பெண் நட்போடு அதை எதிர்பார்க்கும்போது கவனம் தேவை. பெண்ணிடம் நட்பு பாராட்டும்போது இடைவெளி மிக அவசியம். அந்த இடைவெளிதான் நட்பிற்கு மரியாதை தரும். ஒரு பெண்ணின் அறியாமையை பயன்படுத்தி, நட்பு முறையில் பழகி உணர்வுகளை புண்படுத்திவிட்டு, பின் எல்லாம் ஒரு நட்பு முறையில்தான் நடந்தது என்றால் ஏற்க முடியுமா? கூடா நட்பு வகையில்தான், இந்த வகை நட்பு இடம்பெறும்.

  நட்பு காதலாக மாறலாம். ஆனால் காதல், நட்பு என்று முடிந்துவிடக் கூடாது. அப்படி முடியுமானால் அதுவே போலி நட்பு. எல்லை மீறும் கூடா நட்பு.

  வேலைக்காக வெளியே செல்லும் பெண்கள் இது போன்ற நட்புகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நட்பு என்பது எதுவரை என்ற எல்லைக் கோட்டை அவர்கள்தான் வகுக்க வேண்டும். நட்பு என்ற பெயரில் சுற்றித் திரிந்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் விடுதிக்கு திரும்புவது கூடாது. நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் கண்விழித்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

  சுற்றி நின்று பார்ப்பவர்கள் கண்ணுக்கு விருந்தாகவும், விவகாரமாகவும் ஆகும் அளவுக்கு நட்பு வைக்கக் கூடாது. இப்படிப்பட்ட நட்பைப் பற்றி, நமக்கு பின்னால் மற்றவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவரை காதலிப்பது வேறு, நட்பு என்ற பெயரில் ஏமாறுவது, ஏமாற்றப் படுவது வேறு.

  ஆணுக்கு நிகராக, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, சமூக அந்தஸ்து பெற்றிருக்கும் பெண்களுக்கு வெளியுலக நட்பு தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த நட்பால் சமூக அந்தஸ்து பாதிக்காமல் இருக்க எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு உண்மைச் சம்பவம்...

  திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர், அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றும் அழகிய பெண்ணுடன் நட்பு என்ற போர்வையில் பழகி வந்தார். அந்தப் பெண் வாழ்க்கையில் நடந்த சோகங்கள், ஏமாற்றங்களை நட்பு ரீதியாக பரிமாறிக் கொள்ள ஆறுதல் சொன்னார் அவர். பலவித ஆசைகள் அவள் மனதில் இருந்ததையும் புரிந்து கொண்டார். ஒருநாள் ‘என் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று உறுதியளித்தார் அந்த ஆண். இதை நம்பிய அவள், அவருடன் ஒன்றாக வாழ ஆரம்பித்தாள். சிறிது நாட்களிலேயே அவர்களது நட்பு கசந்தது. பிரச்சினைகள் வெடித்தது.

  மனைவியை நாடிய அவர், ‘அது வெறும் அலுவலக நட்புதான், இனி அவளுடன் பழக மாட்டேன்’ என்று மனைவியை சமாதானப்படுத்தி குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்துவிட்டார். ஆனால் நட்பென்ற பெயரில் வாழ்க்கையை பலிகொடுத்த அந்தப் பெண்ணோ செய்வதறியாது பரிதவித்து நின்றாள்.

  அவள் மேலதிகாரியிடம் முறையிட்டும் பயனில்லை. ‘நான் நட்போடு ஒரு சக ஊழியர் என்ற முறையில்தான் பழகினேன். அதை அந்தப் பெண் தப்பாக எடுத்துக் கொண்டாள். என்னை காப்பாற்றுங்கள். நான் பிள்ளை குட்டிக்காரன்’ என்று சரணடைந்து தப்பித்துவிட்டார். கடைசியில் அந்தப் பெண் நிர்கதியாகி நின்றாள். அதற்கு காரணம் கூடா நட்பு.

  சுயநலத்திற்காக ஆழமாக பழகிவிட்டு இது வெறும் நட்புதான் என்று சொல்லிவிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் உறவுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுதான் ஆண்களின் மனதை அதிகம் பாதிக்கச் செய்கிறது என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். தகாத சம்பவங்களுக்கு இதுவும் ஒருவகையில் மூல காரணமாகிவிடுகிறது.

  எப்படிப் பார்த்தாலும் இந்த வகை நட்பு வாழ்க்கையில் எந்த பலனையும் தராது. சலசலப்பு வந்ததும் துண்டித்துக் கொள்ளும் இந்த நட்பு ஒரு சந்தர்ப்பவாத நட்பு. நல்ல புரிதல் இல்லாத நட்பு, தவறான பின் விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல நட்பு என்பது ஆபத்தில் உதவுவது, ஆனந்தம் தருவது, மற்றவர் கவுரவத்தை காப்பது போன்றவைதான். ஆனால் மனதில் உள்ளதை மறைத்து, ஆசையைத் தூண்டி வளர்க்கும் நட்பு கடைசியில் கற்பையும், உயிரையும் பலிவாங்கி விடுவது உண்டு. நம்மை காத்துக் கொள்ள நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உணர்வுகள் காக்கப்பட வேண்டும். பெண்கள் ஆண்களை அலைக்கழிப்பதும், ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதும் ஒரு சமூக சீர்கேடு. நட்பு என்ற உன்னத உறவு சமூகத்திற்கு அவசியம். நட்பு என்ற போர்வையில் போலிநட்பு கூடாது. அது அவ மானங்களையும், அபத்தங்களையுமே தேடித்தரும்.

  எல்லையை உணர்ந்து பழகினால் நட்பு என்றும் இனிக்கும்! எல்லை மீறி பழகினால் எல்லாவிதத்திலும் கசக்கும்! 
  Next Story
  ×