search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீடு வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை
    X

    வீடு வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை

    வீடு வாங்கும்போது சில விஷயங்களில் காட்டுகிற அலட்சியங்களும் கவனப் பிசகுகளும் வருங்காலத்தில் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக்கிவிடும்.
    வீடு வாங்கும்போது சில விஷயங்களில் காட்டுகிற அலட்சியங்களும் கவனப் பிசகுகளும் வருங்காலத்தில் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக்கிவிடும். அத்தகைய தவறுகளை தவிர்ப்பதற்கான வழி முறைகளைப் பற்றி பார்க்கலாம்..

    வங்கிக்கடன் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு முன்பணம் கொடுக்கக்கூடாது :

    பிடித்தமான வடிவமைப்பில் அல்லது வளர்ந்து வரும் பகுதிகளில் ஒரு வீடு அமைந்துவிட்டால் உடனே அதை உறுதிசெய்வதற்காக முன்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் வங்கிக்கடன் பெற்று வீடு வாங்கும்போது கடனுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட பிறகே முன்பணம் கொடுக்க வேண்டும். சொத்துரிமை, கட்டிட அனுமதி போன்ற சட்டரீதியான காரணங்களால் வங்கிக்கடன் மறுக்கப்பட்டால் முன்பணத்தை திரும்பப் பெறுவது சிக்கலானதாகிவிடும்.

    விற்பனைப் பத்திரத்தை கவனமாக சரிபார்க்க வேண்டும் :

    வீட்டை வாங்குவதைப் பற்றி பேசும்போதும் அக்ரிமெண்ட் என்ற ஒப்பந்தம் செய்துகொள்ளும்போதும் நிலம் மற்றும் வீடு பற்றி இடம்பெற்றுள்ள தகவல்கள் சரியானவையா என்று ஒன்றுக்கு பல தடவை பார்ப்பதுண்டு. அதே கவனம் கடைசியில் வீட்டு விற்பனை பத்திரம் எழுதப்படும்போதும் இருந்தாகவேண்டும். சர்வே எண், உப பிரிவுகள், பெயர்கள், முகவரி ஆகியவற்றை எழுத்துக்கு எழுத்து சரிபார்க்க வேண்டியது அவசியம். வழக்கறிஞர் உதவியோடு ஆவணங்களை சரிபார்ப்பது நம்பகமானது.

    அடிப்படை வசதிகளின் நிலையை அறிந்துகொள்ள வேண்டும் :


    வீட்டின் அமைவிடம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கொண்டுள்ளதா என்ற கணிப்புகள் ஒருபக்கம் இருந்தாலும் தற்போதைய நிலையில் அடிப்படை வசதிகள் எந்த நிலையில் உள்ளன என்று அறிந்துகொள்வதும் முக்கியம். அடிக்கடி மின்தடை ஏற்படுகின்ற பகுதியா?, குடிநீர் பிரச்சினைகள் உள்ளதா? நிலத்தடி நீர் மட்டம் எத்தனை அடியில் உள்ளது? கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகள் ஒழுங்காக உள்ளதா? ஆகிய விவரங்களை அறிந்துகொள்வது அவசியமாகும்.

    விலையைப் போலவே பராமரிப்பு செலவுகளும் முக்கியம் :

    அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்தவரை சில கட்டுமான நிறுவனங்கள் தொழில் போட்டியை சமாளிப்பதற்காக விலையை சற்று குறைத்து விற்பனை செய்யும். ஆனால் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்பட்ட விலையில் குறைக்கப்பட்ட தொகை ஈடுசெய்யப்படும். எனவே வீடு வாங்கும்போதே தோராயமாக பராமரிப்புக் கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படும் என்பதையும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

    பரப்பளவு வேறுபாடுகளை புரிந்துகொள்ள வேண்டும் :

    அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டின் அளவு கார்பெட் ஏரியா, பிளிந்த் ஏரியா, சூப்பர் பில்டப் ஏரியா என்ற பல வகைகளில் குறிப்பிடப்படுகின்றன. கார்பெட் ஏரியா என்பது வீட்டிற்குள் பயன்படுத்தக்கூடிய பரப்பளவாகும். பிளிந்த் ஏரியா என்பது சுவர்களையும் உள்ளடக்கிய பரப்பளவு. சூப்பர் பில்டப் ஏரியா என்பது வீட்டின் பரப்பளவோடு பொதுவாக பயன்படுத்தக்கூடிய பகுதிகளின் பரப்பளவையும் சேர்த்து கணக்கிடப்படுகிறது.

    எனவே இவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வீட்டை வாங்கும்போது அதன் பரப்பளவுக்கு ஏற்றபடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.
    Next Story
    ×