search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கொஞ்ச நேரம் கொஞ்சலாமே
    X
    கொஞ்ச நேரம் கொஞ்சலாமே

    கொஞ்ச நேரம் கொஞ்சலாமே

    கணவன், மனைவி இருவருமே தங்கள் பாலியல் தேவைகளை தங்களுக்குள் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும்.
    இனிமை நிறைந்தது, இல்லறம். அந்த இனிமையை அனுபவிக்காமல் முட்டி மோதிக்கொண்டிருக்கும் ஜோடிகள் மிக அதிகம். இல்லறத்தின் இனிமை அனுபவிக்க கணவன்- மனைவி இருவரும் பரஸ்பரம் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கையின் பாதிவெற்றி விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது. மீதி வெற்றி கணவனிடமிருந்து மனைவியும், மனைவியிடமிருந்து கணவனும் இன்பத்தை கேட்டுப் பெறுவதில் உள்ளது. இதில் முழுவெற்றியை பெறவேண்டுமானால் கணவன்- மனைவி இருவரும் எல்லாவற்றையும் மனம்விட்டுப் பேசவேண்டும். அதுவும் இருவரும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகள் அனைத்தும் தானே ஒதுங்கிப்போய்விடும்.

    நிறைய ஆண்கள் தங்கள் அலுவலக பிரச்சினைகளை மனைவியிடம் கூறுவதில்லை. ஆனால் கூறுவதில் தப்பில்லை. தனது உடல் -மனநல பிரச்சினைகளை மனைவி கணவரிடம் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கலாம். இப்படி பகிர்ந்து கொள்வது ஆறுதல் அளிப்பதுடன், அன்பை வலுப்படுத்தும். ஒருவர் மீது இன்னொருவருக்கு நம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கையை வளப்படுத்தும்.

    தம்பதிகளுக்கு இடையே பிரச்சினைகள் எப்படியாவது முளைத்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால் ஏதோ காரணத்தால் பிரச்சினை பெரிதாகும்போது யாராவது ஒருவர் மவுனம் காத்தால் நல்ல தீர்வு கிடைத்துவிடும். ஒருவர் மவுனத்தை இன்னொருவர் புரிந்துகொண்டு தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கலாம். பிறகு அந்த மவுனமே இருவரையும் சிந்திக்கத்தூண்டும். அதுவே தவறு யார் பக்கம் என்பதை புரிய வைத்துவிடும். தவறுகள் உணரப்பட்டால் சமாதானம் மலரும்.

    கர்வம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகிவிட்டால் தம்பதியருக்குள் பிரச்சினைகள் மறைந்துவிடும். ‘தவறு செய்தது அவர்தான் அவரே இறங்கிவரட்டும்’ என்று மனைவி வீராப்புடன் இருப்பதும், ‘நான் ஆண், அவள்தான் இறங்கி வர வேண்டும்’ என்று கணவன் தலைக்கனத்துடன் இருப்பதும் பிரச்சினையின் வீரியத்தை அதிகரித்துவிடும். இருவருக்குமே தன்மான உணர்வுஉண்டு என்பதால் விட்டுக்கொடுப்பதில் இருவரும் போட்டிபோட்டு பிரச்சினைகளை தீர்க்கமுன்வரவேண்டும்.

    துணைவரிடம் மரியாதை காட்டுங்கள். ஒருவர் மற்றவரை ஏளனமாக எண்ணக்கூடாது. பிறரின் முன்பும் தன் துணைவரைப் பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது. தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டால் அவர்களுக்குள் பேசி தீர்வு காணவேண்டும். இல்லாவிட்டால் சிறிது இடைவெளி விட்டு பின்பு கூடிக்கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக பேசுவது கூடாது.

    மனம்விட்டு பேசுவதாக எண்ணிக் கொண்டு உடன்பிறந்தவர்கள், உறவுகளைப் பற்றிய ரகசியங்கள், அந்தரங்க பிரச்சினைகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்கா விட்டால் அது தம்பதியருக்குள் மட்டுமல்லாமல், உறவுகளுக்கு மத்தியிலும் கடைசி வரை பிரிவை வளர்த்துவிடும். மேலும் திருமணத்திற்கு முந்தைய காதல் பற்றியோ, ஆண் - பெண் நண்பர்கள் பற்றியோ பகிர்ந்து கொண்டு, பிரச்சினைகளின்போது அதை தோண்டி எடுத்து பேசுவதை இருவருமே தவிர்க்கவேண்டும்.

    மனைவி, கணவரிடம் பாலுணர்வு பற்றி வெளிப்படையாக பேசினால் தவறு என்ற கருத்து ஆண்கள் மத்தியிலும், நம் சமூகத்திலும் உள்ளது. அது தவறு. தாம்பத்யம் தம்பதியரின் அடிப்படை உரிமை. தாம்பத்யம் ஆரோக்கியமாக இருந்தால், ஜோடிகளுக்குள் ஏற்படும் பெரிய பிரச்சினைகள்கூட தானாக ஓடி மறைந்துவிடும். கோபம், பொறாமை, தலைக்கனம் போன்ற எல்லாவற்றையும் வெளியேற்றும் ஆற்றல் தாம்பத்யத்திற்கு உண்டு. கணவன், மனைவி இருவருமே தங்கள் பாலியல் தேவைகளை தங்களுக்குள் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும். பேசித்தான் பாருங்களேன்.
    Next Story
    ×