search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப கால மனநிலை மாற்றங்களும் அதை கையாளும் வழிமுறையும்
    X
    கர்ப்ப கால மனநிலை மாற்றங்களும் அதை கையாளும் வழிமுறையும்

    கர்ப்ப கால மனநிலை மாற்றங்களும் அதை கையாளும் வழிமுறையும்

    கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். அதனை சரிசெய்ய உதவிகள் தேவைப்பட்டால் யோசிக்காமல் கணவரிடமோ, குடும்பத்தினரிடமோ கேட்பதில் தவறில்லை.
    பெண்களின் கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் என்பது மிகவும் பொதுவான பிரச்சினை ஆகும். இதற்கு காரணம் உடலில் வேகமாக மாறி வரும் ஹார்மோன்கள், உடல் உபாதைகள் மற்றும் அடுத்தடுத்து ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள் தான். மேலும், கர்ப்பிணிகள் ஒரே நேரத்தில் உடல் மாற்றங்களுடன் பல்வேறு உணர்ச்சி மாற்றங்களையும் சந்திக்கிறார்கள். பொதுவாக பெண்களின் உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் மனக் கண்ணோட்டம் கர்ப்ப காலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் குறிப்பாக அவை குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    மனநிலை மாற்றங்களை சமாளிக்க கர்ப்பிணிகள் பின்வரும் சில வழிகளை முயற்சி செய்யலாம்:

    கர்ப்ப காலத்தில் உங்கள் மனதில் ஏற்படும் கோபம் மற்றும் எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் குறித்து பகிர்ந்து கொள்வது நல்லது. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது குறித்து உங்கள் கணவர், குடும்பத்தினர், நண்பர்களிடம் வெளிப்படையாக கூறுவது மனஅமைதியை தரும்.

    நீங்கள் சோர்வாக இருந்தால் உங்கள் மனநிலையை நிர்வகிப்பது சற்று கடினமாக இருக்கும். எனவே உங்களுக்கு போதுமான தூக்கம் வருவதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பகலில் சிறிது நேரம் தூங்குவதால் உங்கள் உடல் அதிக ஆற்றலைப் பெறவும், உங்கள் உணர்ச்சிகளை அமைதிப்படுத்தவும் உதவும். பகலில் தூங்குவது மனநிலை மாற்றங்களை நிவர்த்தி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

    உங்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கும், மனதை சுறுசுறுப்புடன் வைத்திருக்கவும் உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் சோர்வாக இருப்பது போன்று உணர்ந்தால், நடைபயிற்சி அல்லது நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து எண்டோர்பின்கள் வெளியேறும், இதனால் மனதில் நேர்மறை மற்றும் மகிழ்ச்சியான உணர்வுகள் அதிகரிக்கும். மேலும் தினமும் யோகா, தியானம் போன்றவற்றையும் கடைபிடிப்பது நல்லது.

    எப்போதும் உங்களுக்காக சில மணி நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். அந்த நேரத்தில் ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்கலாம், உங்கள் நண்பர்களிடம் பேசலாம், பூங்கா அல்லது சுற்றுலாவிற்கு செல்லலாம். அல்லது உங்கள் தோட்டத்தில் அமர்ந்து ஒரு நல்ல புத்தகம் படித்துக்கொண்டே ஓய்வெடுக்கலாம். உங்கள் கணவர் உதவியுடன் கை, கால்களை மசாஜ் செய்து கொள்ளலாம். நீங்கள் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இருக்க இதுபோன்று நேரங்களை செலவிடுவது நல்லது.
    Next Story
    ×