search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்
    X
    மாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்

    மாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்

    மாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.
    மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி, அசவுகரியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். அத்துடன் மனநிலை மாற்றம், தசைப்பிடிப்பு போன்றவை பொதுவாக பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளாகும். அதேவேளையில் மாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.

    சில பெண்கள் மட்டுமே, சில மாதங்களில் இத்தகைய சிரமங்களை அனுபவிப்பார்கள். அதாவது ஒவ்வொரு மாதமும் காய்ச்சல், குமட்டல் ஏற்படாது. இந்த பீரியட் காய்ச்சலுக்கு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான் காரணம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். சிலருக்கு மாதவிடாய் காலத்திற்கு முன்பும், மாதவிடாயின் போதும் காய்ச்சல், உடல் சோர்வு, சோம்பல், தலைவலி, தசைப்பிடிப்பு, வயிற்று பிடிப்பு, குமட்டல், வாந்தி, மந்தமான நிலை, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.

    இந்த அறிகுறிகளில் பெரும்பாலானவை கருத்தரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகளை ஒத்திருக்கும். அதனால் பல பெண்கள் மாதவிடாய்க்கு முன்பு தோன்றும் இந்த அறிகுறிகளை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். உடனே பீதியடையாமல் ஓரிரு நாட்கள் அமைதி காப்பது நல்லது. எந்தவொரு மருந்து, மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் பாதுகாப்பானது. கர்ப்பமாக இருப்பதாக தோன்றினால் வீட்டிலேயே பரி சோதித்து பார்க்கலாம். உண்மையில் கர்ப்பமாக இருக்கும்பட்சத்தில் அவசரப்பட்டு மருந்து உட்கொள்வது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

    கர்ப்பம் தரித்திருக்காவிட்டால் ‘பீரியட் காய்ச்சல்’தான் என்பதை உறுதிபடுத்திவிடலாம். இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஒருசில வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

    * அடி வயிற்றில் வலியோ, பிடிப்போ ஏற்பட்டால் ‘ஹீட்டிங் பேடு’ பயன்படுத்தலாம்.

    * மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் அதிக வேலை செய்வதற்கு முயற்சிக்காதீர்கள். கடுமையான வேலைகளைச் செய்தால் பீரியட் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அதிகமாகிவிடும். கூடுமானவரை ஓய்வு எடுப்பது நல்லது.

    * வாந்தியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் உடலில் நீர் இழப்பு ஏற்படக்கூடும். எனவே அதிக தண்ணீர் பருகுவது நல்லது. திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெதுவெதுப்பான வெந்நீர் பருகுவது நல்லது.

    * துரித உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். அதிக நார்ச்சத்து கொண்ட பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

    * மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கு பிடித்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டலாம்.

    * தூக்கமின்மை பிரச்சினையை அதிகரிக்கும் என்பதால் நன்றாக தூங்க வேண்டும். டி.வி பார்ப்பது, செல்போன் பார்ப்பது போன்றவை தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும் என்பதால் மாதவிடாய் சமயத்தில் அவற்றை தவிர்த்துவிட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.
    Next Story
    ×