search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாதவிலக்கின் போது நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள்
    X
    மாதவிலக்கின் போது நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள்

    மாதவிலக்கின் போது நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள்

    மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை நடைபெறும். இந்த உதிரப்போக்கு நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    பருவமடைந்த ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதமும் (28 நாட்கள்) சினைப்பையிலிருந்து ஒரு கருமுட்டை முதிர்ச்சியடைந்து, சினைக்குழாய்க்கு வரும். இரண்டு சினைப்பைகள் இருந்தாலும் ஒரு மாதம் ஒரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை மட்டுமே வெளிவரும், அடுத்த மாதம் மற்றொரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை வெளிவரும். 

    கருப்பையில் இருந்து வெளியேறும் இந்த கருமுட்டையானது ஆணுடைய விந்துடன் இணைந்தால் கருப்பையில் தங்கி குழந்தையை உருவாக்கும். கருவின் வளர்ச்சிக்காகக் கருப்பையின் உட்புறத்தில் ரத்த நாளங்களான மெல்லிய உள்ளுறை ஒன்றும் ஒவ்வொரு மாதமும் உருவாகும். கருமுட்டை கருவுறாதபோது, அத்துடன் சேர்ந்து கருப்பையில் இருக்கும் இந்த ரத்த நாளங்களான உள்ளுறையும் சிதைந்து கருப்பை வாய் வழியே வெளியாகிவிடும். இந்த உதிரப்போக்கையே மாதவிலக்கு என்கிறோம்.

    ஒரு பெண்ணின் இளம் வயதில் முதன்முதலாய் இந்த நிகழ்வு ஏற்பட்டு உதிரப்போக்கு ஆவதையே பூப்பெய்தல், பருவமடைதல், வயதிற்கு வருதல் என்று அழைக்கிறார்கள். இது 10-ல் இருந்து 16 வயதிற்குள் நிகழ்கிறது. 18 வயதிற்கும் மேலும் ஒரு பெண் பூப்படையவில்லை என்றால் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து ஆலோசிப்பது அவசியம். மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை நடைபெறும். இந்த உதிரப்போக்கு நாட்கள் அதிகமானாலும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது. 

    * மாதவிலக்கு நாட்களில் சுத்தமான நீரில் தினசரி குளிப்பது அவசியம், தீட்டு என நினைத்துக்கொண்டு குளிக்காமல், மேலாடை மற்றும் உள்ளாடைகளை மாற்றாமல் இருப்பது சுகாதாரமல்ல.

    * அந்நாட்களில் தேங்கிய நீர் நிலைகளான ஆறு , ஏரி, குளம், குட்டை, கிணறுகளில் குளிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மாதவிலக்கின் போது கருப்பையின் வாய்ப் பகுதி திறந்து இருக்கும், அப்போது சுத்தமில்லாமல் நீரில் குளிப்பது தொற்று கிறுமிகள் பிறப்புறுப்பை பாதிக்க வழிவகுக்கும்.

    * மாதவிலக்கு நாட்களில் தினமும் இரு முறையாவது பிறப்புறுப்பை சோப்புப் போட்டு நன்கு கழுவ வேண்டும். சுத்தமான பருத்தி உள்ளாடைகளையே பயன்படுத்த வேண்டும். உதிரப்போக்கை உறிஞ்சுதற்கு நாப்கின்களை பயன்படுத்தலாம், துணிகளைப் பயன்படுத்துவது என்றால் அவற்றை நன்கு துவைத்து வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தி உபயோகிக்க வேண்டும், அழுக்குத் துணிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. 

    * சானிடரி நாப்கின்களை ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது மாற்ற வேண்டும். உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை நிச்சயம் மாற்ற வேண்டும். 

    * மாதவிலக்கின் போது பள்ளி, கல்லூரி அல்லது வேறு விசேஷங்களுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ஓரிரு நாப்கின்களை எடுத்துச்செல்வது அவசியம்.
    Next Story
    ×