search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முதுகு வலியில் இருந்து பெண்கள் மீளும் வழி
    X

    முதுகு வலியில் இருந்து பெண்கள் மீளும் வழி

    60 வயதிற்கு மேல் பெண்களுக்கு எலும்பு பலகீனத்தால் முதுகு வலி அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.
    பெண்கள் நிமிர்ந்து நிற்கவும்– அவர்கள் நினைத்தபடி எல்லாம் குனிந்து, வளைந்து செயல்படவும்– அடிப்படையாக அமைந்திருப்பது முதுகு. இதன் மையமாக திகழ்வது முதுகுத்தண்டு வடம்.

    கருவாக தாயின் வயிற்றுக்குள் சிசு உருவாகும் முதல் மாதத்திலே முதுகுத்தண்டுவட கட்டமைப்பும், மூளை கட்டமைப்பும் தோன்றிவிடுகிறது. மூளைக்கும்– முதுகுத் தண்டுக்கும் நரம்பு இணைப்பு இருக்கிறது. மூளையில் தொடங்கும் நரம்புகள் முதுகுத்தண்டின் இறுதிப்பகுதியில் நிறைவடைகிறது.

    ஒருசில குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு வளர்ச்சி சரியாக அமைவதில்லை. கீழ்ப்பகுதியில் வளர்ச்சி குன்றி, சேதமடைந்தது போல் தோன்றும். இந்த குறைபாட்டை மெனின்கோ மைலுசில் (Meningo myelucele) என்கிறோம். இயற்கை கொடுத்த வரப்பிரசாதமாக கருவில் முதலிலே முதுகுத்தண்டுப் பகுதி உருவாகிவிடுவதால், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு முதுகுத்தண்டுப் பகுதி சரியாக அமைந்திருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். இது மனித இயக்கத்திற்கு மிக முக்கியமான உறுப்பாக இருப்பதால், சரியாக அமைந்திருக்காவிட்டால் கருவிலே கண்டறிந்து கருக்கலைப்பு செய்துவிடலாம்.

    கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றின் பின்புறம் உள்ள 5 எலும்புகள், இதர 9 எலும்புகள் சேர்ந்து, 33 எலும்புகளை கொண்டிருக்கிறது, முதுகுத்தண்டு வடம். இந்த எலும்புகளோடு மூளையும், நரம்புகளும் இணைக்கப்பட்டிருப்பதால் சிறிதாகவோ, பெரிதாகவோ பிரச்சினைகள் ஏற்படும்போது வலி தோன்றுகிறது. அதைதான் முதுகு வலி என்கிறோம்.

    பொதுவாக முதுகுத்தண்டுவட எலும்புகள், பெண் என்றால் 17 வயது வரையும், ஆண் என்றால் கிட்டத்தட்ட 20 வயது வரையும் வளரும் வாய்ப்புள்ளது.

    பெண்கள் வயதுக்கு வரும் தருணத்தில் அவர்களின் முதுகெலும்பை சரியாக கவனித்துப்பார்க்கவேண்டும். ஒரு சிலருக்கு ‘கோலியோசிஸ்’ என்ற பாதிப்பு ஏற்படுகிறது. இது முதுகுத்தண்டை வளையவைக்கும் ஒருவித நோய். தோள்பட்டையும் இறங்கும். இந்த பாதிப்பு கேரளாவை சேர்ந்த பெண்களுக்கு அதிகம் இருக்கிறது. இதை தொடக்கத்திலே கண்டுபிடித்துவிட்டால் கட்டுப்போட்டு சரிசெய்திடலாம். கவனிக்காமல் விட்டுவிட்டால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

    பெரும்பாலும் கல்லூரிப் பருவத்தில்தான் பெண்கள் முதல் முறையாக முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் காலை உணவை முழுமையாக, முறையாக சாப்பிடாமல் இருப்பது அதற்கான முதல் காரணம். அவர்கள் மீது வெயில் படாததால், வைட்டமின்– டி பற்றாக்குறை ஏற்படுவது இரண்டாவது காரணம்.

    கல்லூரிப் பருவத்தில் பெரும்பாலான மாணவிகள் வீட்டில் படிக்கும் அறை, படுக்கை அறை, வகுப்பு அறை என்று அறைகளுக்குள்ளே வாழ்க்கையை சுருக்கிக்கொள்வதால் வைட்டமின்– டி பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் அவர்கள் வீட்டில் உட்காரும்போதும், படிக்கும்போதும், படுக்கும்போதும், வேலைபார்க்கும் போதும் சரியான ‘நிலையில்’ செயல்படுவதில்லை. வளைந்து நெளிந்து உட்காருவது, படுத்துக்கொண்டே படிப்பது, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வது போன்றவைகளால் முதுகுத்தண்டுக்கு அழுத்தம் ஏற்பட்டு முதுகு வலி தோன்றுகிறது.

    அடுத்து பெண்கள் கவனிக்கத் தகுந்தது கர்ப்பக் காலம். தாயின் உடலுக்குள் இன்னொரு உடல் (உயிர்) வளரும் அந்த காலகட்டத்தில் இருவருக்கான கால்சிய சத்து தேவை. மீன், முட்டை, கீரை வகைகள், பழங்கள், தரமான பாலில் கால்சிய சத்து இருக்கிறது. கால்சிய சத்து குறைபாடு ஏற்பட்டால் எலும்பு வளர்ச்சியும், எலும்பு பலமும் குறையும். முதுகு வலி தோன்றும். கர்ப்ப காலத்தில் ‘வாக்கிங்’ செல்வது முதுகுத்தண்டு இயக்கத்திற்கு சரியான பயிற்சியாக அமையும். பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு குறிப்பிட்ட சில யோகாசனங்களையும் செய்யலாம்.

    குழந்தை பிறந்து, பால் புகட்டும்போது பெண்கள் ஒரே நிலையில் அவ்வப்போது அமரவேண்டியதிருக்கிறது. அப்போது அனேக தாய்மார்கள் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். கர்ப்ப காலத்திலே முறையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், பால் புகட்டும் காலத்தில் முதுகுவலியால் அவதிப்படவேண்டிய சூழ்நிலையை தவிர்த்துவிடலாம்.

    30 முதல் 40 வயது பருவத்தில் பெண்கள் முதுகு வலியால் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த பருவத்தில் தாய்மை, பிரசவத்தால் உடல் எடை கூடிவிடுகிறது. இதனால் முதுகுத்தண்டுக்கும் சுமை கூடும். அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரித்து, ஓய்வற்ற உழைப்பிற்கும், பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கும் உள்ளாகிறார்கள்.

    அப்போது அவர்கள் தன் உடலை நினைத்துப்பார்ப்பதில்லை. சரியாக உடலை பராமரிப்பதும் இல்லை. உணவு, உடற்பயிற்சி, ஓய்வு போன்றவை சரியாக இல்லாததால் இந்த பருவத்தில் முதுகுவலி அவர்களுக்கு தோன்றுகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பெண்களை இந்த வலி பாடாய்படுத்துகிறது.

    40 முதல் 50 வயது வரையிலான பருவம் பெண்களை பொறுத்த வரையில் மிக முக்கிய காலகட்டம். அப்போது அவர்கள் மாதவிலக்கு நின்றுவிடும் ‘மனோபாஸ்’ காலகட்டத்தை அடைந்திருப்பார்கள். அதுவரை அவர்கள் உடலை பாதுகாத்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அப்போது சுரக்காது. அதனால் உடல் எடை அதிகரிக்கும்.

    உடலில் இருக்கும் கால்சிய சத்தும் சிறுநீர் மூலம் வெளியேறிக்கொண்டிருக்கும். அதனால் எலும்பு அடர்த்தி குறைபாடான ‘ஆஸ்டியோபேராசிஸ்’ பாதிப்பு ஏற்படுகிறது. அப்போது வலி தோன்றும். 3 அங்குலம் உயரம் குறைந்து உடல் கூன் விழுந்ததுபோல் தோன்றும். இந்த பாதிப்பு தற்போது 30 சதவீத பெண்களுக்கு ஏற்படுகிறது.

    60 வயதிற்கு மேல் பெண்களுக்கு எலும்பு பலகீனத்தால் முதுகு வலி அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. அப்போது ‘டீஜெனரேட்டிவ் கோலியோசிஸ்’ என்ற பாதிப்பு ஏற்படலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபக்கமாக சரிந்து நடப்பார்கள். சிலர் முன்னோக்கி இழுத்த நிலையில் நடப்பார்கள். அதனால் மூட்டுகள் மடங்கும். உடல் வலி அதிகரிக்கும். இதற்கும் தேவையான சிகிச்சையை பெறவேண்டும்.

    ஓய்வற்ற வேலை, அடிபடுதல், அடிபட்டதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமை, தவறான முறையில் பொருட்களை தூக்குவது, எலும்பு பலகீனம், எலும்பு தேய்மானம், கர்ப்பப்பை மற்றும் சிறுநீர்ப் பையில் ஏற்படும் கிருமித் தொற்று, குடலில் ஏற்பட்டிருக்கும் நோய்கள், கால்சிய சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் முதுகுவலி வரலாம்.

    முதலில் முதுகுவலிக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அதற்கு பரிசோதனைகள் அவசியம். பெரும்பாலான வலிகள் மருந்து, மாத்திரை மற்றும் பிசியோதெரபி மூலம் தீர்ந்துவிடும். ஒரு சிலருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும்.

    உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

    கட்டுரை :
    டாக்டர் எஸ். சிவமுருகன்,
    M.B.B.S., D.Orth., Dip. N.B. (Orth)
    எலும்பு –மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்,
    சென்னை–40.
    Next Story
    ×