search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்களின் முதுகு, மூட்டு வலி பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்
    X

    பெண்களின் முதுகு, மூட்டு வலி பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்

    • உடல் எடை கண்காணிப்பது என்பது மூட்டு வாத நோய்களுக்கு மிக அவசியம்.
    • முதுமை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு மூட்டுகளை பாதிக்கிறது.

    மூட்டுவலியும், முதுகுவலியும் பெண்களின் ஆரோக்கியத்தினை பாதிக்கும் ஒரு அங்கமாகவே உள்ளன. பிரசவத்திற்கு பின்னர் பெண்களில் பெரும்பாலானவர்கள் முதுகு வலி அனுபவிக்காத நாட்களே இல்லை எனலாம். முதுகு வலி ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஏனெனில் மகப்பேற்றின் போது அளவில் பெரிதாகும் கருப்பையானது கீழ் முதுகு மற்றும் இடுப்பு மூட்டுகளில் ஏற்படுத்தும் அழுத்தத்தின் விளைவாக முதுகுவலி உண்டாகக்கூடும்.

    மகவை சுமக்கும் அனைத்து பெண்களும் இத்தகைய வலியினையும் சுமந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் வருத்தமான ஒன்று. இயற்கையாக ஏற்படும் இத்தகைய மாறுதல்களால் உண்டாகும் முதுகு தண்டுவட வலி ஒருபுறமிருக்க, மாறிப்போன வாழ்வியல் நெறிமுறைகளால் இது போன்ற தொந்தரவுகள் இன்னும் சற்று கூடுதலாகி, பெண்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து, ஆரோக்கியத்திற்கான பாதையைக் கடினமாக்குகிறது.

    முதுகு தண்டுவடப் பகுதியில் தண்டுவட எலும்புகளின் இடையே உள்ள சவ்வு வீக்கம், சவ்வு சரிவு போன்ற பல்வேறு நோய்நிலைகள் இன்றைய நவீன காலத்தில் பெண்களை அதிகம் தாக்கி அவர்களை துன்புறுத்துவது இயல்பாகிவிட்டது. அதுமட்டுமின்றி தண்டுவட எலும்புப் பகுதியில் ஏற்படும் கட்டிகளும் முதுகு வலிக்கு காரணமாகின்றன.

    ஆகவே பெண்கள் நாட்பட்ட முதுகு வலியில், ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று எண்ணி அலட்சியம் காட்டாமல், ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனுக்கும் அவர்கள் தான் ஆணி வேர். முதுகுவலி ஒருபுறமிருக்க, பெண்களுக்கு வயோதிகப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் எனும் கீல்வாதம் அவர்களை அதிகம் துன்புறுத்தும். இந்த மூட்டு வாத நோயை 45 வயது கடந்த பெண்கள் அனைவரும் அனுபவிக்க தயாராக வேண்டிய நிலை உள்ளது வருத்தம் தான். ஏனெனில் பெண்களில் மூன்றில் இருவருக்கு இந்த மூட்டு வாதம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வாழ்வியலை பாதிக்கிறது.

    பொதுவாக இரு முழங்கால் மூட்டுகளில் உண்டாகும் இந்த முதுமை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு மூட்டுகளை பாதிக்கிறது. மூட்டுகளில் வீக்கம், வேதனை, நடப்பதில் சிரமம், உட்கார்ந்து எழுவதில் சிரமம், கால்களை நீட்டி மடக்குவதில் சிரமம், தாங்கி தாங்கி நடத்தல் போன்ற மூட்டு வாத நோயின் பல குறிகுணங்களைக் கொண்டு பெண்கள் பலர் அன்றாட வாழ்க்கையைக் கடக்கின்றனர். பல்வேறு நோய் நிலைகள் பெண்களின் மூட்டுக்களை பாதிக்கும் தன்மையுடையதால் மருத்துவரை அணுகி நோய்நிலையைக் கணித்து சிகிச்சையை துவங்குவது நல்லது.

    சித்த மருத்துவ மூலிகைகள் பல பெண்களின் மூட்டுக்களின் வாதம் சார்ந்த அனைத்து நோய் நிலையிலும் நல்ல பலன் தருவதாக உள்ளன. தசமூலம், ஓமம், முருங்கை, முடக்கறுத்தான், மூக்கிரட்டை, பிரண்டை, மஞ்சள், இஞ்சி, ஆமணக்கு, நொச்சி, குந்திரிக்கம், அரத்தை, குறுந்தொட்டி, அமுக்கரா, நிலவேம்பு, திரிபலை,திரிகடுகு, குங்கிலியம் போன்ற மூலிகைகள் அவற்றில் சில. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வலி நிவாரணி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

    மூட்டுக்கள் சார்ந்த வலி நோய்களுக்கு சித்த மருத்துவம் எளிமையாக வலியுறுத்துவது முருங்கையைத் தான். நவீன உலகத்தில் எதெற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை நாட துவங்கி விட்டதால், முருங்கை போன்ற மருத்துவ குணமிக்க எளிய மூலிகை மருந்துகள் பல நம் நாட்டினருக்கு மறந்தே போய்விட்டது.

    முருங்கை கீரையுடன் மூட்டு வலியை குறைக்கும் மருத்துவகுணமுள்ள, இஞ்சி, பூண்டு, மிளகு, பெருங்காயம், மஞ்சள், சீரகம் இவற்றுடன் சிறிது உப்பிட்டு சூப் வைத்து அருந்தினால் மூட்டுகளுக்கு வலிமை கிடைக்கும். அடிக்கடி இதனை எடுத்து வர பெண்கள் வயோதிக பருவத்தில் கூட மூட்டு நோயில் இருந்து விடுபட்டு வீறு நடை கொள்ள முடியும்.

    சித்த மருத்துவ மருந்தான 'குந்திரிக்க தைலம்' எனும் மருந்தினை மூட்டுகளின் வீக்கத்தின் மீது தடவி வெந்நீரில் ஒத்தடமிட வீக்கம் குறைந்து நிவாரணம் தரும். பிண்ட தைலம் எனும் சித்த மருந்தையும் இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

    மூட்டு வலியால் அவதியுறும் பெண்கள் பாலில், மஞ்சள்பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து தொடர்ந்து எடுக்க நிச்சயம் நல்ல பலன் தரும்.

    சர்வ ரோக நிவாரணியான அமுக்கராக் கிழங்கு சேர்ந்த அமுக்கரா சூரணம் எனும் சித்த மருந்தை பாலில் கலந்து எடுப்பதன் மூலம் மூட்டு வலி, முதுகு வலி சார்ந்த நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதை வீக்கமான இடத்தில் முட்டை வெண்கருவுடன் சேர்த்து பற்று போட்டாலும் வீக்கம் குறைந்து வலி குறையும்.

    மூட்டு வாதத்திற்கென தனிச்சிறப்பு மிக்க கீரை முடக்கறுத்தான். முடக்கறுத்தான் கீரையில் உள்ள லுடியோலின் மற்றும் அபிஜெனின் குளுகுரோனிட் ஆகிய முக்கிய வேதிப்பொருட்கள் மூட்டு வீக்கத்தை குறைப்பதோடு, தேய்ந்த குருத்தெலும்புகளுக்கு புத்துணர்வு தந்து மீண்டும் வளர்ச்சி பெற உதவுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சூடு தன்மையுள்ள முடக்கறுத்தான் கீரை நோய்க்கு காரணமாகும் சித்த மருத்துவம் கூறும் வாதம்,கபம் இவற்றை குறைத்து மூட்டு வலியை குறைக்கும். அவ்வப்போது முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டாலும், சூப் வைத்து குடித்தாலும் வாதத்தை குறைக்கும்.

    மூட்டு சார்ந்த நோய்களுக்கு வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களில் வாதம் பாதிப்படைவதே முதன்மைக் காரணம் என்கிறது சித்த மருத்துவம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வதும். அவ்வப்போது மலச்சிக்கலை போக்கிக் கொள்வதும் வாதத்தை குறைக்கும் எளிமையான வழிமுறைகள்.

    சாதாரணமாக ஏற்படும் இடுப்பு வலி, முதுகு தண்டுவட எலும்பு பகுதிகளில் வலி, மூட்டு வலி மற்றும் வீக்கங்களுக்கு நொச்சி, ஆமணக்கு இலை, எருக்கு இலை, வாதமடக்கி எனும் தழுதாழை இலை, வாத நாராயணன் இலை இவைகளில் ஒன்றை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றடமிட நல்ல பலன் தரும். அல்லது இவை சேர்ந்த சித்த மருந்துகளை பயன்படுத்தலாம். இவற்றில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் வீக்கத்தை உண்டாக்கும் காரணிகளை தடுக்க கூடியதாக உள்ளன.

    நொச்சி இலையை குளிக்கின்ற வெந்நீரில் போட்டு குளிக்க இடுப்பு வலி, மூட்டு வலிகளை குறைக்கும். அல்லது யூகலிப்டஸ் இலைகளை போட்டு குளித்தாலும் வலி குறையும். மூட்டுகளில் சேரும் கபமாகிய குளிர்ச்சியும், வாதமாகிய வாயுவும் வலியை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுவதால் குளிர்ச்சி, வாயுவை அதிகரிக்கும் உணவு வகைகளையும், பழக்கவழக்கங்களையும் மூட்டுகளில் வாதம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    வலிகளை குறைக்க மருந்துகளை உட்கொண்டு சளைத்தவர்கள், வலியைக் குறைக்க தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் சிறிது கற்பூரம், கொஞ்சம் ஓமம் சேர்த்து காய்ச்சி பதமான சூட்டில் மேலே தடவி வர நிவாரணம் தரும். மூட்டு வீக்கங்களுக்கு சோற்றுக்கற்றாழை மடலை சூடாக்கி ஒத்தடம் இடுவது நல்லது. இயற்கையாக வீக்கமுருக்கி செய்கை தன்மையுள்ள மஞ்சளையும், கல்லுப்பையும் சேர்த்து வறுத்து துணியில் முடிந்து ஒத்தடம் இடுவதும் வீக்கம் குறைய வழிவகை ஆகும்.

    ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாதம், ருமட்டாய்டு எனும் முடக்கு வாதம், யூரிக் அமிலம் உப்பு படிவதால் ஏற்படும் கீல்வாதம் ஆகிய மூன்று முக்கிய வகைகளுமே பெண்களை அதிகம் பாதிப்பதாக உள்ளது. கருவில் பிள்ளையை சுமந்து உச்சக்கட்ட வலியான பிரசவ வலியை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளும் பெண்கள், இத்தகைய மூட்டு வலிகளை தாங்க முடியாமல் தவிப்பது ஒட்டு மொத்த குடும்பத்தையும் அவலநிலைக்கு ஆளாக்கும். நோயின் தன்மையை பிரித்தறிந்து துவக்கத்திலேயே சித்த மருத்துவத்தை நாடுவது நோயின் தீவிரத்தை குறைத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட உதவும்.

    சித்த மருத்துவத்தின் தனி சிறப்பு வெளி மருத்துவ முறைகள் 32 என்பதும் தான். சித்த மருத்துவத்தின் புற மருத்துவ முறைகளில் சிறப்பு மிக்க ஒன்று பற்று போடும் முறை. மூட்டு வலி,முதுகு தண்டுவட வலி போன்ற நோய் நிலைகளில் வீக்கத்தை குறைக்கவும், எலும்புகளை வன்மைப்படுத்தவும் ஆவாரை இலை,முருங்கை இலை, கருப்பு உளுந்து இவற்றுடன் சேர்த்து முட்டை வெண்கருவுடன் பற்று போட்டு வர சிறந்த பயன் தரும். சித்த மருத்துவம் கூறும் உள்மருந்துகளை மட்டும் பயன்படுத்துவதை விடுத்து வெளி மருந்துகளையும் பயன்படுத்தினால் ஆரோக்கியம் விரைவில் கிட்டும்.

    உடல் எடை கண்காணிப்பது என்பது மூட்டு வாத நோய்களுக்கு மிக அவசியம். அதனைக் கருத்தில் கொண்டு பெண்கள் உடல் எடையை அதிகரிக்காமல் பேணிக்காக்க வேண்டும். அத்துடன் உணவே மருந்து எனும் சித்த மருத்துவ அடிப்படையினை பின்பற்ற துவங்கினால் மூட்டு வலி மாத்திரம் அல்ல, இன்னும் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளையும் தடுத்து நலமான வாழ்க்கையை வாழ முடியும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×