என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குறைந்த செலவில் பிரமாண்டம்.. திருமணத்தை பசுமையாக்குவது எப்படி? - கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
    X

    குறைந்த செலவில் பிரமாண்டம்.. திருமணத்தை பசுமையாக்குவது எப்படி? - கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

    • கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதற்கு அவை உபயோகமாக இருக்கும்.
    • பசுமை திருமணத்திற்கு ஏற்ப விருந்து உபசரிப்பிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை இடம் பெற செய்யலாம்.

    இன்றைய இளைஞர்கள் திருமணத்தை பிரமாண்டமாக, அதேவேளையில் அதிக செலவில்லாமல் விமரிசையாக நடத்துவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். மணமேடை அமைந்திருக்கும் இடம் உள் அரங்கமாக இல்லாமல் பசுமை சூழ்ந்த திறந்தவெளியாக இருக்க விரும்புகிறார்கள். அதற்கேற்ற இயற்கை எழில் கொஞ்சும் பசுமை சூழ்ந்த இடங்களை தேர்வு செய்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், திருமணத்திற்கு வருகை தருபவர்கள் திறந்தவெளி பகுதியில் இயற்கை அழகை ரசித்தபடியும், இதமான காற்றை சுவாசித்தபடியும் உறவினர்களோடு பேசி மகிழும் அம்சத்தையும் பசுமை திருமணங்கள் கொண்டிருக்கின்றன. அப்படி நடைபெறும் 'பசுமை' திருமணங்களை நடத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    அலங்காரம்

    பசுமை திருமணத்துக்கு அலங்கார வேலைப்பாடுகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்காது. இயற்கை சூழலும், எளிய அலங்காரமுமே பிரமாண்ட தோற்றத்தை தரும். இருப்பினும் அலங்காரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க விரும்புபவர்கள் வண்ணமயமான காகித விளக்குகளை பயன்படுத்தலாம்.

    அவை அலங்காரமாக மாறி பசுமை சூழலுக்கு கூடுதல் அழகு சேர்க்கும். மண் பானைகள், கண்ணாடி பாட்டில்கள், கொட்டாங்குச்சிகள் போன்றவற்றில் அலங்காரங்களை செய்து ஆங்காங்கே தொங்கவிட்டு அசத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக காகிதம் மற்றும் துணி அலங்காரங்களை அழகுற வடிவமைக்கலாம்.

    தாம்பூலம்

    திருமணத்திற்கு வருகை புரிந்தவர்களுக்கு கொடுக்கும் தாம்பூலம், சணல் பையாகவோ, துணிப் பையாகவோ அமைவது சிறப்பு. கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதற்கு அவை உபயோகமாக இருக்கும். பசுமை திருமணத்தை நினைவூட்டும் வகையில் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கலாம். விதை பந்து, காய்கறி விதைகள் வழங்கவும் செய்யலாம்.

    விருந்து

    பசுமை திருமணத்திற்கு ஏற்ப விருந்து உபசரிப்பிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை இடம் பெற செய்யலாம். திருமண விருந்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இடம் பெறுவதை தவிர்த்து அதற்கு மாற்றாக கண்ணாடி டம்ளர், மண் குவளை போன்றவற்றை இடம் பெற செய்யலாம். திருமண விருந்தில் பசுமை நிறத்திலான பொருட்களை இடம் பெற செய்வதும் அழகு சேர்க்கும்.

    திறந்த வெளி

    பசுமை திருமணம் என்றாலே திறந்தவெளி இடம்தான் என்ற நியதிக்கு ஏற்ப இயற்கை எழில் கொஞ்சும் விசாலமான திறந்தவெளி பரப்பளவு கொண்ட பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அந்த திறந்தவெளி இடத்தில் மண மேடை அலங்காரமும் இயற்கை அலங்கார பொருட்களாக அமைந்திருக்க வேண்டும்.

    அடர்ந்த மரங்கள் சூழ்ந்திருக்கும் பகுதியாகவும் அமைந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் திருமணத்திற்கு வருகை தரும் நண்பர்கள், உறவினர்களுக்கு சவுகரியமானதாக இருக்கும். அதிலும் பூத்துக்குலுங்கும் மரங்களாக இருந்தால் மலர்கள் அலங்கார செலவும் குறையும். திருமண பந்தத்தை என்றென்றும் நினைவில் கொள்ளும் அம்சம் கொண்ட இடமாக அமைந்திருக்க வேண்டும்.

    முகூர்த்த நேரம்

    திருமணம் என்றாலே காலை வேளையில் முகூர்த்த நேரம் குறிக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இரவில் திருமண வரவேற்பு அரங்கேறும். பசுமை திருமணத்திற்கும் காலை நேரத்தையே தேர்வு செய்யலாம். காலை 10 மணிக்குள் திருமணத்தை நடத்தும் விதமாக திட்டமிட்டால் வெயிலின் தாக்கம் அதிகமிருக்காது.

    அப்படி இருந்தாலும் மரங்களும், இயற்கை சூழலும் இதமான சூழலை உருவாக்கி கொடுக்கும். அந்த இடத்திலேயே இரவில் திருமண வரவேற்பை நடத்தினால் மின்னொளியும், இயற்கை அழகும் ஒருசேர மிளிர்ந்து பிரமாண்ட திருமண வைபவமாக மாற்றிவிடும்.

    திருமண ஆடை

    திருமண பந்ததத்தை என்றென்றும் நினைவுபடுத்தக்கூடிய அம்சம் கொண்டது என்பதால் திருமண ஆடை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மண மேடை திறந்தவெளி பரப்பளவில் அமைந்திருப்பதால் திருமணத்திற்கு வந்திருப்பவர்கள் தூரத்தில் இருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரியும் வகையிலும், அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ற வகையிலும் வண்ணங்களை கொண்ட ஆடைகளாக அமைந்திருப்பது சிறப்பானது.

    அழைப்பிதழ் தேர்வு

    பசுமை திருமணங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சத்தை கொண்டிருப்பதால் திருமண அழைப்பிதழிலும் அது பிரதிபலிக்க வேண்டும். காகிதத்தில் திருமண அழைப்பிதழை அச்சடிக்கும் நடைமுறைக்கு மாற்றாக இளந்தலைமுறையினர் பலரும் டிஜிட்டல் மின் அழைப்பிதழ்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அது காகித பயன்பாட்டை குறைக்கும் அம்சத்தை கொண்டிருப்பதால் பசுமை திருமணத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. டிஜிட்டல் வழியாக சில நொடிகளில் அழைப்பிதழ்களை அனுப்பிவிடலாம் என்பதால் அதற்கு ஆகும் செலவும் குறைவும்.

    அதேவேளையில் டிஜிட்டலில் அழைப்பிதழ் அனுப்பியதும் சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு திருமணத்திற்கு வருமாறு அழைப்புவிடுப்பது முக்கியமானது. நாம்தான் டிஜிட்டலில் அழைப்பிதழ் அனுப்பிவிட்டோமே என்று நினைப்பது ஏற்புடையதல்ல. அது திருமணத்திற்கு அழைப்பதற்கு உகந்த முறையும் அல்ல.

    அழைப்பிதழ் அடித்து அழைப்புவிடுக்க விரும்புபவர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களை கொண்டு அழைப்பிதழ் அச்சடிக்க முயற்சிக்கலாம். அந்த அழைப்பிதழுடன் விதை பதித்தும் கொடுக்கலாம். அவை குப்பைக்கு சென்றடைந்தாலும் அதிலிருக்கும் விதை துளிர்த்து செடியாகி பசுமை திருமணத்திற்கு பலம் சேர்க்கும்.

    Next Story
    ×