search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    வெயிலில் இருந்து சருமத்தினைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
    X

    வெயிலில் இருந்து சருமத்தினைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

    • கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம் தான்.
    • தினமும் கோடையில் பழச்சாறினை அருந்துவது நல்லது.

    தினமும் இருமுறையாவது குளிக்கலாம். காலையில் குளித்த பின்பு மாலையில் தான் அடுத்த குளியல் அமைய வேண்டும். மாலைக் குளியலால் நாள் முழுவதும் ஏற்பட்ட வெயிலின் தாக்கம், அசதி, அலுப்பு குறையும். நாட்டு மருந்து கடையில் சந்தனாதி தைலம், பிருங்காமலாதி தைலம், திரிபலா தைலம் போன்ற தைல எண்ணெய்கள் கிடைக்கும். மேற்கூறிய தைல எண்ணெய்களில் ஏதாவது ஒன்றினைத் ( நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஓ.கே தான் ) தலையில் தடவிக் குளித்து வரலாம். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு வெயிலில் அலைந்தால் தலைவலி ஏற்படும். மாலையில் செய்யும் எண்ணெய்க் குளியலால் தூக்கம் நன்றாக வரும். பாலில் அரைத்த வெள்ளை மிளகு, தேங்காய்ப் பாலில் அரைத்த சீரகம், நீரில் அரைத்த கசகசா இவற்றையும் உடலில் தேய்த்துக் கொண்டு குளிக்கலாம்.

    கோடைக் காலத்திற்கு ஏற்ற உணவுகளான இளநீர், பனை நுங்கு, தர்ப்பூசணி, முலாம்பழம், வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை பகல் உணவுக்குப் பின் ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து உண்பது நல்லது. இந்த உணவுகள் கோடையில் உடலுக்கு நன்மை செய்வதால் தோலுக்கும் ( சருமம் ) மிகுந்த ஆரோக்கியத்தினை, பளபளப்பினைத் தருகின்றது. தினமும் கோடையில் பழச்சாறினை அருந்துவது நல்லது.

    தினமும் நீராவி முகருவதினைச் செய்தால் முகத்துவாரங்கள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் 5 நிமிடமும், எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் 10 நிமிடமும் கொதிக்கும் நீரிலிருந்து எழும் நீராவியை நுகருவது நல்லது.

    கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம் தான். வெப்பத்தால் ஏற்படும் சரும அலர்ஜி, சருமம் வறண்டு போவதற்கு காரணங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளாதது, மாங்காய், மாம்பழம் அதிகம் உண்பது போன்றவற்றாலும் சரும பாதிப்புகள் உருவாகும். இவற்றுக்கு சீரகம், ஓமம், கார்போக அரிசி இவற்றைத் தேங்காய் பாலில் அரைத்து உடலில் தடவி சிறிது நேரம் குளித்தால் நல்லது.

    கோடையில் தோலில் அரிப்பும், சினப்பும் ஏற்பட்டால் முன்னிரவில் கசகசாவை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தேய்த்துக் குளித்தால் அரிப்பு குறையும்.

    அருகம்புல் சாறு கொண்டு தயாரிக்கப்படும் அருகம் புல் தைலம் மேல் பூச்சாக பயன்படுத்தினால் அரிப்பு, உடல் சூடு குறையும்.

    வெயிலில் பயன்படுத்த சில முகத் தேய்ப்புகள் (Scrubs):

    1. உலர்ந்த ஆரஞ்சுத் தோல், சமைத்த ஓட்ஸ் + பாதாம் பருப்பு இவை ஒவ்வொன்றும் ஒரு கப் எடுத்து மிக்ஸியில் பொடித்து கலந்து கொள்ளவும். பொடியை சிறிது எடுத்து வெதுவெதுப்பான நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் அல்லது அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் அழுக்குகள் நீங்கும்.

    2. உலர்ந்த சருமத்திற்கேற்ற 'மாஸ்க்': இரண்டு தேக்கரண்டி அளவு பால் எடுத்துக் கொண்டு அத்துடன் இரண்டு மேஜைக் கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவவும். சம அளவு ரோஜா பன்னீர், கிளிசரின் எடுத்து இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் Moisturiser ஆக பயன்படுத்தலாம்.

    3. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்திற்கு ஒரு தக்காளியிலிருந்து எடுக்கப்பட்ட கூழுடன், முல்தானி மட்டி சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவிக் கொள்ளவும். முகத்தில் இந்த கலவை உலர்ந்து போகும் வரை விட்டு, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.

    4. இயல்பான ( நார்மல் ) சருமத்திற்கு மஞ்சள் பொடியை பாலில் குழைத்துத் தடவி, அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கழித்துத் கழுவவும். சந்தனப் பொடியுடன் ரோஜா பன்னீர் சேர்த்து குழைத்து தடவி வரவும். கருமை திட்டுக்களையும் இந்த கலவை போக்கும். இரவு முழுவதும் இந்த கலவை முகத்தில் இருக்கட்டும்.

    Next Story
    ×