என் மலர்
அழகுக் குறிப்புகள்

தோலை பளபளப்பாக்கும் குளியல் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
- அழுக்குகள் நீங்கி தோல் பளபளப்பாக மாறும்.
- வெளிநாடுகளில் 'பாத் ஆயில்' என்று அழைக்கின்றனர்.
உடல் சூட்டை தணிக்கவும், கண்ணெரிச்சல், வயிற்றுவலி ஆகியவற்றை நீக்கவும், உடல் அழகுக்காகவும் எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். பொதுவாக எந்த தாவர எண்ணெயையும் உடம்பில் தேய்த்து ஊறவிட்டால், அது வியர்வை நாளங்களில் அடைத்துள்ள அழுக்குகளை கரைத்து வெளியேற்றுகிறது. இதனால் அழுக்குகள் நீங்கி தோல் பளபளப்பாக மாறும். வியர்வை சுரப்பு அதிகரிக்கும். இது தான் விஞ்ஞான ரீதியாக எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஆகும்.
குளியலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் தயாரிப்பை ஒரு தொழிலாக கொள்ளலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
நம்முடைய பராம்பரியமிக்க நல்லெண்ணெய்யை 1/2 கிலோ எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் 1/2 கிலோ சோற்றுக்கற்றாழையை சிறு துண்டுகளாக வெட்டி போட வேண்டும். பின்னர் அவற்றை வெயிலில் வைத்து விட வேண்டும். 30 நாட்களுக்கு பிறகு பார்த்தால் பசுமை நிறத்தில் நல்லெண்ணெய் மாறி இருக்கும். இது தான் மூலிகை குளியல் எண்ணெய் ஆகும். இதேபோல் மரிக்கொழுந்து, தாழம்பூ, மகிழம்பூ, ஆவாரம்பூ போன்றவற்றை தனித்தனியாக கற்றாழையுடன் கலந்து குளியல் எண்ணெய் தயாரிக்கலாம். தேவையில்லாத கண்ட கண்ட தைலங்களை குளியலுக்காக பயன்படுத்தும் இந்த நாளில் தரமானதொரு குளியல் எண்ணெய்க்கு நல்ல மார்க்கெட் உள்ளது.
இதனை, வெளிநாடுகளில் 'பாத் ஆயில்' என்று அழைக்கின்றனர்.
காலையில் 5 மணிவாக்கில் எண்ணெய்க் குளியல் எடுப்பது சிறந்தது. உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை எண்ணெய் தடவி (சொதசொதவென எண்ணெய் தடவத் தேவையில்லை. உடல் முழுக்க எண்ணெய் ஒட்டியிருக்கும் அளவுக்குத் தடவினால் போதும்). அரை மணிநேரம் வெயிலில் இருந்துவிட்டு பின்னர் குளிப்பதே முறையான எண்ணெய்க் குளியல் ஆகும்.
நடைமுறையில் எனக்கு இது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைத்தால் உச்சந்தலை, உள்ளங்கால், உள்ளங்கை, தொப்புள், முதுகின் பின்புறம், கழுத்தின் பின்புறம், தோள்பட்டை, முட்டி போன்ற உடலின் மூட்டு இணைப்புகளில் எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் முதல் அரை மணிநேரம் ஊறவிட்டுப் பின்னர் குளிக்கலாம். இது ஓரளவுக்குப் பலன் கொடுக்கும் என்றாலும் உடல் முழுக்க எண்ணெய் தடவிக் குளிப்பதே சிறந்தது.
சிலர் எண்ணெய் தேய்த்துக்கொண்டு பச்சைத் தண்ணீரில் குளித்துவிடுவார்கள். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, எப்போது எண்ணெய் தேய்த்துக்கொண்டாலும் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். `
சிலர் எண்ணெய் நன்றாக ஊற வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்நாள் இரவே தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு தூங்கிவிட்டு மறுநாள் குளிப்பார்கள். இப்படிச் செய்தால் காய்ச்சல் வருவதோடு, குளிர்ச்சி அதிகமாவதால் சில நேரங்களில் வலிப்பும் வந்துவிடும் என்பதால் இச்செயலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.






