search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பவள நகைகள்
    X
    பவள நகைகள்

    பவள நகைகள் பாதுகாப்பும், பராமரிப்பும்

    பவள நகைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நவரத்தின நகைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தோமானால் அவை பல வருடங்கள் நம்முடனேயே பயணித்து குடும்ப நகைகளாக என்றும் நம் குடும்பங்களில் வலம் வரும்.
    பவள நகைகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் எளிதான ஒன்றே. மற்ற விலை உயர்ந்த கற்கள் பதித்த நகைகள் மற்றும்  நவரத்தினக் கற்கள் பதித்த நகைகளை எவ்வளவு கவனத்துடன் சுத்தம் செய்து பராமரிக்கின்றோமோ அதேபோல் பவள நகைகளுக்கும் சிறிது கவனத்துடன் சுத்தப்படுத்தி பராமரிப்பது அவசியமானதாகும்.

    பவளம் இயற்கையாகவே மென்மையாக இருப்பதால் சிறிய உராய்வும் அதில் கீறலை ஏற்படுத்தி விடும். மேலும், சட்டென்று சேதமாகி உடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பவளத்தை கவனத்துடன் பாதுகாத்துப் பராமரித்தால் அவை பல காலம் நீண்டு உழைக்கும் தன்மை கொண்டவையாகும்.

    பவள நகைகளில் அழுக்கு படிந்திருந்தால் மென்மையான சோப்பினை துணி அல்லது மென்மையான பிரஷ்ஷை உபயோகப்படுத்தி அழுக்கை அகற்றலாம். மிகவும் கடினமான பிரஷ் மற்றும் துணி துவைக்கும் சோப்பைக் கொண்டு சுத்தப்படுத்தக்கூடாது. அவை, பவள நகைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி விடும். அவற்றை நீரில் நன்கு அலசி மென்மையான துணியால் ஒற்றி எடுத்து நன்கு உலர்ந்த பிறகே உள்ளே எடுத்து வைக்கவேண்டும்.

    பவள நகைகளைச் சுத்தப்படுத்த அதீத ஒலிச்சுத்தி (அல்ட்ராசானிக் கிளீனர்ஸ்) போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.  ஆழமான அதிர்வுகள் பவளத்தில் சேதத்தை ஏற்படுத்துவதோடு பவளத்தை உடைத்து விடும் வாய்ப்பும் உள்ளது.

    நேரடியான சூரிய வெயில் மற்றும் அதிகப்படியான சூடினால் பவளமானது நிறம் மாறும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் அதிகப்படியான சூடினால் அது முற்றிலுமாக நிறத்தை இழந்துவிடும். பல நாட்கள் சூரிய வெயிலில் படும் பொழுது சிறிது சிறிதாக நிறம் மங்கும் வாய்ப்பும் உள்ளது.

    நாம் நிகழ்ச்சிகளுக்கு பவள நகைகளை அணிந்து வந்த பிறகு அவற்றை துவைத்து நன்றாக ஆறவைத்து அதில் சிறிதளவும் ஈரத்தன்மை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தனியான நகைப்பெட்டிகள் அல்லது மென்மையான துணியால் தைக்கப்பட்ட பைகளில் வைக்கவேண்டும். வேறு நகைகளுடன் பவள நகைகளை சேர்த்து வைத்தால் அவை பவள நகைகளுக்கு சேதத்தை ஏற்படுத்திவிடும்.

    நாம் உபயோகிக்கும் அழகு சாதனப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், கூந்தல் எண்ணெய் மற்றும் ஸ்பிரே, துணிகளுக்கு உபயோகிக்கும் சோப்பு மற்றும் ரசாயனங்கள் பவள நகைகளில் படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் வெளியில் நிகழ்ச்சிகளுக்குக் கிளம்பும் பொழுது மொத்த அலங்காரத்தையும் முடித்த பிறகு கடைசியாக பவள நகைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    அதேபோல் இந்த நகைகளை அணிந்த பின்னர் வாசனைத் திரவியங்களை ஆடைகளின் மேல் தெளிக்கக்கூடாது. மேலும் பவள வளையல்களை அணிந்து கொண்டே துணிகளைத் துவைப்பது, அலசுவது, பாத்திரங்களைக் கழுவுவது மற்றும் பவள நகைகளைப் போடுவதும் கழற்றுவதும் கடினமாக இருக்கும் பட்சத்தில் துணி துவைக்கும் சோப்பினைப் பயன்படுத்துவது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    பவள நகைகளை அணிந்து கொண்டே நீச்சலடிப்பது, தோட்ட வேலைகளில் ஈடுபடுவது மற்றும் நடைப்பயணம் மேற்கொள்வது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

    இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பவள நகைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நவரத்தின நகைகள்  மற்றும் விலை உயர்ந்த நகைகளுக்கும் கடைபிடித்தோமானால் அவை பல வருடங்கள் நம்முடனேயே பயணித்து குடும்ப நகைகளாக என்றும் நம் குடும்பங்களில் வலம் வரும்.

    பவளம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்:-

    * பவளப் பாறைகள் என்பவை செடிகளால் உருவாக்கப்படுபவை அல்ல. கடல் விலங்குகளால் உருவாக்கப்படுபவையாகும்.

    * மூன்று வித்தியமாசமான பவளப்பாறை வகைகள் உள்ளன.

    * பவளங்கள் வளர்வதற்கு சூரியஒளி அவசியமான ஒன்றாகும்.

    * ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரேட் பேரியர் பவளப்பாறைகள் போன்று அளவில் மிகப்பெரியதாக இருக்கும். பவளப்பாறைகள் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானவையாகும்.

    * பவளப் பாறைகள் இருக்கும் இடங்களில் கடல் நீரானது மிகவும் சுத்தமானதாக இருக்கும். அவை சுத்தமாக

    இருப்பதற்கும், கடல் புற்கள் மற்றும் பிற கடல் தாவரங்கள் வளர்ச்சிக்கும் பவளப் பாறைகள் உதவுகின்றன.

    * பவளப் பாறைகளில் இருக்கும் உயிரினங்கள் கேன்சர் மற்றும் ஒருசில நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றது.

    * சுற்றுச்சூழல் பாதுகாப்பை நிர்வகிப்பதிலும் பெரும் பங்கை பவளப்பாறைகள் அளிக்கின்றன.

    * பச்சை பிரவுன், பிங்க், மஞ்சள், சிவப்பு, நீலம் மற்றும் ஃப்ளோரசன்ட் நிறங்களிலும் பவளங்கள் உள்ளன என்பது கூடுதல் தகவலாகும்.
    Next Story
    ×