என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான பனானா பான் கேக்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான பனானா பான் கேக்

    பான்கேக்குகளை சாதாரணமாகவோ அல்லது சர்க்கரைத் தூள் தூவப்பட்ட வெண்ணையுடன் சேர்த்தோ அல்லது க்ரீம் வகையுடன் சேர்த்தோ அல்லது சீஸ், பழம் போன்றவற்றை சேர்த்ததோ சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 2 கப்
    முட்டை - 2
    பால் - 1 1/2 கப்
    பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
    வெண்ணெய்/எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
    வாழைப்பழம் - 3

    செய்முறை :

    * ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு பொங்கி வரும் படி அடித்துக் கலக்குங்கள்.

    * வெண்ணெயை உருக்கவும். வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்

    * பின் அத்துடன், மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, மசித்த வாழைப்பழம், வெண்ணெய் மற்றும் சிறிது பாலையும் சேர்த்து நன்கு கலக்குங்கள்.

    * ரொம்பவும் மென்மையாகும் வரை கலக்கக்கூடாது. கட்டி கட்டியாக துண்டுகள் இருந்தால், அது அப்படியே இருக்கட்டும். அப்போது தான் பான்கேக் நன்கு உப்பி வரும், இல்லையேல் கடினமாக தட்டையாக வரும்.

    * தட்டையான நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் வெண்ணையை வாணலியில் தடவிக் கொள்ளவும். பின்னர் அதில் கால் கப் மாவை எடுத்து, வாணலியில் ஊற்றி வட்டமாக தேய்க்கவும்.

    * அந்த பான்கேக்கை 2 நிமிடங்களுக்கு அல்லது பான்கேக் பொன்னிறத்தில் வரும் வரை வேக வைக்கவும். பான்கேக்கின் ஒரத்தில் முறுகலாக வரும் போது கவனமாக திருப்பி போடவும். அவ்வாறு திருப்பியதும், அதன் மறுபக்கமும் பொன்னிறமாக முறுகலாக வரும் போது எடுத்துக் கொள்ளவும்.

    * இதோ சுவையான பான் கேக் தயார்!!!

    * வெண்ணெய், வேர்க்கடலை வெண்ணெய், சிரப், ஜெல்லி, சாக்லேட் சிப்ஸ் அல்லது பழங்கள் என்று நீங்கள் விரும்பும் ஐட்டங்களுடன், இந்த பான்கேக்கை சாப்பிடலாம்.

    குறிப்பு :

    * எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரைத்தூள் சேர்த்து டாப்பிங் செய்தால் அருமையாக இருக்கும்.

    * பான்கேக் கலவையை கல்லில் ஊற்றப்போகும் முன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு, கொஞ்சம் சர்க்கரையை சேர்க்கலாம்.

    * டாப்பிங்கிற்கு பயன்படுத்தும் சாக்லேட் சிப்ஸ், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழத்துண்டுகள், ப்ளூபெர்ரி போன்றவற்றை நேரடியாக பான்கேக் மாவிலேயே கலந்துவிடலாம்.

    * பான்கேக் கல்லில் ஒட்டாமல் வரவேண்டுமெனில் சன்ஃப்ளவர் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×