என் மலர்
சமையல்

மண்ணின் பொக்கிஷம் "பருப்பு கீரை"
நாம் தினந்தோறும் அன்றாட வேலைகளை செய்ய நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்வோடும் வைப்பதற்கு நம் உடலில் உள்ள சத்துகளின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், நம் உடலில் சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க நாம் உண்ணும் உணவில் தினமும் காய்கறிகளுடன் கீரை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
ஆம்.. அப்படி கீரைகளில் அதிக சத்து உள்ள பருப்பு கீரை பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்..!
கிராமங்களில் சாதாரணமாக வீட்டைச்சுற்றி பருப்பு கீரை வளர்ந்து கிடப்பதை பார்க்கலாம். இதற்கு கங்கா வள்ளி என்ற பெயரும் உண்டு. ஏராளமான சத்துக்கள் இந்த கீரையில் உள்ளன.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒமேகா-3 சத்தானது பருப்பு கீரையில் ஏராளம். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஒமேகா-3 தேவை. இது, ஆட்டிசம் போன்ற வளர்ச்சி குறைபாடுகளை தடுக்க உதவுகிறது. இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், இதயத்தை சுற்றி படியும் கொழுப்பையும் தடுக்கிறது.
வைட்டமின்-ஏ சத்தும் இருப்பதால் தோல் எப்போதும் பொலிவுடன் இருக்கவும், சருமம் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தவும், கண் பார்வை தெளிவாக இருக்கவும் இந்த கீரை உதவுகிறது.
வைட்டமின்-சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் தீரும். உடல் எடையை குறைக்கும் மற்றும் குடல் நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது.
ஆஸ்டியோபோரோசிஸ், சொரியாசிஸ் போன்ற நோய்களுக்கு பருப்பு கீரை அருமருந்தாக உள்ளது, என்று நாட்டு மருத்துவ நூல்கள் கூறுகின்றன. எலும்புகள் மற்றும் தசைகளுக்கு வலிமை தரும் கால்சியமும் இந்த கீரையில் ஏராளம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாமல் தவிர்க்க இந்த கீரை உதவுகிறது. தமிழ்நாட்டில் சாதாரணமாக எங்கும் முளைத்து கிடக்கும் இந்த கீரை இந்த மண்ணின் பொக்கிஷம் என்றே உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..!






