என் மலர்
சமையல்

நம்ம ஊரு ஸ்பெஷல் முந்திரிகொத்து
- முந்திரி கொத்தில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன.
- முந்திரி கொத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பண்டம்
பிரசித்திபெற்ற இனிப்புகளில் ஒன்று தான் முந்திரிகொத்து. பாசிபருப்பை கொண்டு செய்யக்கூடிய இந்த இனிப்பு பண்டம் மிகவும் சுவையாக இருக்கும். இதனால் அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு பண்டமாக முந்திரி கொத்து விளங்குகிறது.
முந்திரி கொத்தில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. அவற்றை உண்பதால் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கின்றன. அந்தவகையில் முந்திரி கொத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பண்டமாக திகழ்கிறது.
பண்டிகை நாட்களில் இந்த முந்திரி கொத்து ரெசிபியை நிறைய பேர் வீடுகளில் செய்வார்கள். சாதாரணமாக இருக்கும் நாட்களில், ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் தேவை என்றால் கூட இதை செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். 15 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.
தேவையான பொருட்கள்:
பச்சைபயறு- ஒரு கப்
ஏலக்காய் - 5
தேங்காய் துருவல்- ஒரு கப்
எள்ளு- 2 ஸ்பூன்
வெல்லம்- ஒருகப்
மேல்மாவிற்கு:
அரிசி மாவு- ஒரு கப்
கான்பிளவர் மாவு - ஒரு ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, பச்சை பயிறு போட்டு வறுக்க வேண்டும். பச்சை பயிறு நிறம் மாறி பொன்னிறம் வரும் வரை வறுபட்டு வர வேண்டும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். வருபட்ட பச்சைப் பயிரை ஒரு தட்டில் மாற்றி நன்றாக ஆர வைக்க வேண்டும். ஆறிய பின்பு இந்த பச்சை பயிரை மிக்சி ஜாரில் போட்டு கூடவே மூன்று ஏலக்காய்களை போட்டு, கொரகொரப்பாக அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும். பச்சை பயிறு 90 சதவிகிதம் அரைபட்டால் போதும்.
அடுத்து அதே கடாயில் ஒரு கப் அளவு தேங்காய் துருவல், எள்ளு போட்டு பிரவுன் கலர் வரும் அளவிற்கு கைவிடாமல் வறுக்க வேண்டும். தேங்காய் நன்றாக வறுபடவில்லை என்றால், தயார் செய்த முந்திரிக்கொத்து சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.
பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பச்சைபயறு பொடியை அதோடு கொட்டி, தேங்காய், எள் கொட்டி கலந்து கொள்ளுங்கள். இப்போது ஒரு பவுலின் வறுத்து அரைத்த பச்சை பயிறு, தேங்காய், எள்ளு சேர்த்த கலவை தயாராக உள்ளது.
இந்த மூன்று பொருட்களையும் ஒரு கரண்டியை போட்டு கலந்து அப்படியே வைத்து விடுங்கள். இதில் வெல்லப்பாகு கரைசலை ஊற்றி பிசைய வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெல்லம் போட்டு, கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கரைத்து, வெல்லம் லேசாக பிசுபிசுப்பு பக்குவம் வந்ததும் இந்த வெல்லம் சூடாக இருக்கும்போதே பச்சை பயிறு தேங்காய் துருவல் கலவையில் ஊற்றி ஒரு கரண்டியை வைத்து கலக்க வேண்டும்.
ஓரளவுக்கு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் சிறிய சிறிய உருண்டைகளாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறிவிட்டால் இது உருண்டை பிடிக்க வராது. இப்போது இந்த உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து அப்படியே ஆற வைத்து விட்டால், உருண்டைகள் எல்லாம் உடையாமல் கமர்கட்டு போல கட்டி பிடித்து வரும்.
இப்போது முந்திரி கொத்துக்கு, மேல் மாவு தயார் செய்ய வேண்டும். ஒரு அகலமான பவுலில் அரிசி மாவு 1 கப், கான்பிளவர் மாவு அல்லது மைதா மாவு உங்கள் வீட்டில் எது இருக்கிறது அது 2 ஸ்பூன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், போட்டு எல்லா பொருட்களையும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை கரைக்க வேண்டும்.
மாவு கொஞ்சம் கட்டி பதத்தில் தான் இருக்க வேண்டும். ரொம்பவும் தண்ணீராக கரைத்து விடக்கூடாது. இப்போது தயார் செய்து வைத்திருக்கும் பாசிப்பயறு உருண்டைகள் இருக்கிறது அல்லவா, அதில் மூன்றை ஒன்றாக எடுத்து இந்த மாவில் தோய்த்து சுட சுட எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அதனால் தான் இதன் பெயரே முந்திரிக்கொத்து. தயார் செய்து வைத்திருக்கும்
உருண்டைகளை கொத்தாக எடுத்து தான் மாவில் போட வேண்டும். உங்களுக்கு மூன்று உருண்டைகளை ஒன்றாக எடுத்துப் போட முடியவில்லை என்றால் இரண்டு உருண்டைகளாக மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான். பாரம்பரிய சுவையில் முந்திரிக்கொத்து தயார்.






