search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    காது கேளாமைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள்
    X

    காது கேளாமைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள்

    • காதுகளில் இருந்து திரவம் வடியும்போது இரு காதுகளும் அடைப்பட்டது போன்று உணரலாம்.
    • காது கேளாமைக்கான ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் இவை.

    பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் காதுகேளாமை பிரச்சினையை எதிர்கொள்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர் பலரும் காதுகேளாமைக்கு ஆளாகிறார்கள். சிகரெட்டில் படிந்திருக்கும் ரசாயனங்கள், தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களில் இருந்து வெளிப்படும் அதிக ஓசை போன்றவை இளைஞர்களை பொறுத்தவரை காதுகேளாமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. ஆரம்பக்கட்டத்தில் வெளிப்படும் ஒருசில அறிகுறிகளை கவனத்தில் கொண்டு சிகிச்சை அளித்தாலே காதுகேளாமை பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். காது கேளாமைக்கான ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் இவை.

    1. காதுகளில் சத்தம் கேட்பது:

    காதுகளில் இரைச்சல் ஏற்படுவது, திடீரென காதுகளில் சத்தம் கேட்பது என காதுகளில் வெவ்வேறு விதமான சப்தங்கள் எழுவது 'டின்னிடஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது தைராய்டு பாதிப்பு, இதய நோய், காதுகளில் தொற்று போன்ற பிரச்சினைகளை குறிக்கும். பொதுவாக வயதானவர்கள்தான் டின்னிடஸுடன் தொடர்புடைய காதுகேளாமை பிரச்சினைக்கு ஆளாவார்கள். இது போன்ற அறிகுறிகளை அனுபவித்தால் உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது.

    2. ஒலிகள் சத்தமாக கேட்பது:

    திடீரென்று உரத்த குரலில் சத்தம் எழுவதை கேட்டு திடுக்கிடுகிறீர்களா? அப்படி உரத்த ஒலியை கேட்கும்போது உடலில் உள்ள செல்கள் அதிர்வடைந்து தூண்டப்படும். எனவே அத்தகைய சத்தங்கள் திடுக்கிட வைக்கும். அல்லது காதுகளை சிதைத்துவிடும்.

    3. நெரிசலான இடங்களில் பேசுவதில் சிக்கல்:

    அமைதியான சூழல் கொண்ட இடத்தில் மற்றவருடன் பேசுவதில் எந்த சிரமமும் இருக்காது. ஆனால் உணவகம், கிளப் போன்ற மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மற்றவருடன் பேசும்போது அசவுகரியத்தை எதிர்கொண்டால் காதுகளை பரிசோதிக்க வேண்டியது அவசியமானது. மற்றவர்கள் பேசும் வார்த்தைகள் சரியாக கேட்காவிட்டாலோ, ஓரிரு வார்த்தைகள் புரியாமல் போனாலோ செவிப்புலன் பாதிக்கப்பட்டிருப்பதாக அர்த்தம். பிறர் பேசுவதை சரிவர புரிந்து கொள்ள முடியாமல், பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானால் காதுகளை பரிசோதித்தாக வேண்டும்.

    4. காது அடைப்பது போன்ற உணர்வு:

    காதுகளில் இருந்து திரவம் வடியும்போது இரு காதுகளும் அடைப்பட்டது போன்று உணரலாம். வயது அதிகரிக்கும்போது சில ஒலிகள் துல்லியமாக கேட்காமல் போகலாம். சிலருக்கு எந்த ஓசையும் கேட்காமல் போகலாம். குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் அதிகம் இறங்கினாலும் காது அடைப்பட்டது போன்ற உணர்வு ஏற்படும். இதே பிரச்சினை நீடித்தால் காதுகளை பரிசோதிப்பது நல்லது.

    5. மறதி

    சில விஷயங்களை தெளிவாக கேட்க முடியாதபோது அதனை நினைவில் கொள்வது கடினமாகிவிடும். சில நேரங்களில் மறதி ஏற்படுவதற்கு கூட, காது கேளாமை காரணமாக இருக்கலாம். மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கு செவிவழி தூண்டுதல் தேவை. இல்லாவிட்டால் அல்சைமர் அல்லது டிமென்ஷியா பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய அறிகுறிகளில் சிலவற்றை சந்தித்தால் காதுகளை உடனடியாக பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

    Next Story
    ×