search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    தட்டம்மை
    X
    தட்டம்மை

    தட்டம்மை: கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..

    தட்டம்மை நோயைப் பற்றி பலர் தவறான எண்ணங்களை கொண்டுள்ளனர். இந்த நோய்த்தொற்றின் பின்னணியில் உள்ள சில கட்டுக் கதைகள் பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
    அம்மை நோய் எனப்படும் தட்டம்மை ஒருவித தொற்றுநோயாகும். தும்மல் மற்றும் இருமல் மூலம் காற்றில் வேகமாக பரவக்கூடும். முகம், பாதங்கள் உள்ளிட்ட உடல் பகுதிகளில் சிறிய தடிப்புகளை ஏற்படுத்தும். மூளையில் வீக்கத்தை உருவாக்கும். இது குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை உண்டாக்கிவிடும். சிலருக்கு இருமல், மூக்கு ஒழுகுதல், காய்ச்சல், கண்கள் சிவத்தல், தொண்டை புண் போன்ற பாதிப்புகளும் உண்டாகலாம். தட்டம்மை நோயைப் பற்றி பலர் தவறான எண்ணங்களை கொண்டுள்ளனர். இந்த நோய்த்தொற்றின் பின்னணியில் உள்ள சில கட்டுக் கதைகள் பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

    கட்டுக்கதை - 1: குழந்தைகளுக்கு மட்டும் அம்மை நோய் வரும்.

    உண்மை: தட்டம்மை நோய்த்தொற்றுக்கு குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஏனெனில் குழந்தை களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். அவர்களிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே அதற்கு காரணம். அதற்காக குழந்தைகளுக்கு மட்டுமே தட்டம்மை நோய் ஏற்படும் என்பது உண்மையல்ல. பெரியவர்களுக்கும் தட்டம்மை தொற்று ஏற்படலாம். குழந்தைகளை ஒப்பிடும்போது அவர்களிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பல ஆண்டுகளாக உருவாகி இருக்கும். தடுப்பூசி போடுவது நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும். அதேவேளையில் தட்டம்மை தொற்று நோயால் பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது.

    கட்டுக்கதை - 2: அனைவரும் தட்டம்மை தடுப்பூசி போட வேண்டும்.

    உண்மை: அனைவரும் தட்டம்மை தடுப்பூசி போட வேண்டும் என்பது கட்டாயமில்லை. தட்டமைக்கான எம்.எம்.ஆர். தடுப்பூசியை 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு போடக்கூடாது. மேலும் 1957-ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அவர்களில் பலருக்கு ஏற்கனவே தட்டம்மை தொற்று இருந்தது. அந்த நேரத்தில் பலருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒருசில நோய் பாதிப்புக்குள்ளாகி மருந்துகளை உட்கொள்பவர்களும் எம்.எம்.ஆர். தடுப்பூசியை தவிர்க்க வேண்டும். அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

    கட்டுக்கதை - 3: அம்மை நோயைத் தடுக்க இயற்கை வழிகள் உள்ளன.

    உண்மை: வீட்டு வைத்தியம் அல்லது இயற்கை முறைகளை பயன் படுத்தி தட்டம்மையை குணப்படுத்த முடியும் என்று பலர் நம்புகிறார்கள். அது உண்மையல்ல. குழந்தைகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டால் அதனை குணப் படுத்த முறையான இயற்கை சிகிச்சை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதே அம்மை நோயை தடுக்கும் ஒரே வழி. தட்டம்மை தடுப்பூசி தொடர்பாக பரவும் தவறான தகவல்களால் பலரும் தடுப்பூசி போடுவதற்கு தயங்குகின்றன. எம்.எம்.ஆர். தடுப்பூசி பாதுகாப்பானது. இந்த கடுமையான தொற்றுநோயை தடுக்க தடுப்பூசிதான் ஒரே வழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    கட்டுக்கதை-4: தட்டமைக்கான எம்.எம்.ஆர். தடுப்பூசி ஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்தும்.

    உண்மை: எம்.எம்.ஆர். தடுப்பூசி பற்றி பரவும் தவறான வதந்திகளில் இதுவும் ஒன்று. அதனை போடுவதால் ஆட்டிசம் ஏற்படாது. ஆட்டிசம் தடுப்பூசி போடப்படும் அதே நேரத்தில் இந்த தடுப்பூசி போடப்பட்டாலும், இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தட்டம்மை என்பது மாறுபட்ட வைரஸ் தொற்று. இது ஒருவகை தொற்றுநோய். ஆனால் ஆட்டிசம் என்பது நரம்புக் கோளாறு களால் ஏற்படும் நோயாகும்.

    கட்டுக்கதை - 5: இளம் குழந்தைகள் தட்டம்மைக்கான தடுப்பூசியை போடக்கூடாது.

    உண்மை: ஒரு வயது குழந்தைக்கு தட்டம்மை தடுப்பூசி போட கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இது உண்மையல்ல. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தை பிறந்த 12 முதல் 15 மாதங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. எனினும் 6 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போடக்கூடாது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளை பொறுத்தமட்டில் அவர்களது உடல் போதுமான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யாது. அந்த சமயத்தில் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்காது.

    கட்டுக்கதை - 6: கை கழுவும் பழக்கம் அம்மை நோயை தடுக்கும்.

    உண்மை: துரதிஷ்டவசமாக இது உண்மையல்ல. கைகளை பல முறை கழுவுவது தட்டம்மை நோய் பரவும் அபாயத்தை குறைக்கும். ஆனால் கைகளை கழுவுவதன் மூலம் தட்டம்மை பரவுவதை தடுக்க முடியாது. தட்டம்மை நுண் துகள்கள் மூலம் பரவக்கூடிய தொற்றுநோயாகும். இது அறைக்குள் பல மணி நேரம் இருக்கலாம். அறையை நன்கு சுத்தம் செய்து வைத்திருந்தாலும் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடலாம். எம்.எம்.ஆர். தடுப்பூசி போடுவதுதான் சிறந்தது.

    கட்டுக்கதை - 7: ஒருவருக்கு தட்டம்மை பல முறை ஏற்படலாம்.

    உண்மை: ‘சிக்கன் பாக்ஸ்’ எனப்படும் சின்னம்மை போல் தட்டம்மை மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஒருமுறை தட்டம்மை வந்து விட்டால், மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வீர்கள். எனவே இது கட்டுக்கதை. அதனால் தட்டம்மை மீண்டும் மீண்டும் வருவதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

    கட்டுக்கதை - 8: தட்டம்மை தடுப்பூசி போட்ட பிறகு ‘பூஸ்டர் ஷாட்’ தேவையில்லை.

    உண்மை: ‘பூஸ்டர் ஷாட்’ என்பது உண்மையில் பூஸ்டர் அல்ல. ஆனால் அது ஆபத்தை குறைப்பதற்கான தடுப்பு வழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தட்டம்மைக்கான முதல் தடுப்பூசி ஷாட்டின் செயல்திறன் சுமார் 93 சதவீதமாகும். அதே சமயம் 4 வயதில் இரண்டாவது தடுப்பூசி போட்ட பிறகு செயல்திறன் 97 சதவீதமாக கூடும். இது தட்டம்மை நோய்த்தொற்றைத் தவிர்க்க சிறந்த வழியாகும். இது முற்றிலும் பாதுகாப்பானது.
    Next Story
    ×