search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பட்டாணி, மிளகாய் தூளில் கலப்படம்
    X
    பட்டாணி, மிளகாய் தூளில் கலப்படம்

    உணவுப்பொருட்களில் இப்படியெல்லாம் கலப்படம் செய்ய முடியுமா?

    உணவுப்பொருட்களில் இப்படியெல்லாம் கலப்படம் செய்ய முடியுமா? என்று அதிர்ச்சியடையும் அளவுக்கு பொருட்களின் தோற்றம் மாறாமல் கலப்படம் செய்கிறார்கள். எந்த உணவுப் பொருளில் எதை கலக்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க...
    நெய்: இதில் வனஸ்பதி, வெஜிடபிள் ஆயில், ஸ்டார்ச் போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன. அப்படி கலப்படம் செய்யப்பட்டிருப்பின் எளிமையான இரு சோதனைகள் மூலம் கண்டறிந்துவிடலாம்.

    சோதனை 1: உள்ளங்கையில் சிறிதளவு நெய்யை வையுங்கள். சிறிது நேரத்தில் அது தானாகவே உருகினால் அது சுத்தமானது. கலப்படமற்றது.

    சோதனை 2: அகன்ற பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி லேசான தீயில் வையுங்கள். நெய் உடனடியாக உருகி அடர் பழுப்பு நிறமாக மாறிவிட்டால் அது சுத்தமானது. அது உருகி வெளிர் மஞ்சள் நிறமாக மாறினால் கலப்படமானது.

    பட்டாணி: வெதுவெதுப்பான நீரில் பட்டாணியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு அழுத்தி தேய்க்கவும். அப்போது நீர் பச்சை நிறத்திற்கு மாற தொடங்கினால் அதில் செயற்கை நிற கலவை சேர்க்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.

    மஞ்சள் தூள்: பல்வேறு மருத்துவ குணம் நிரம்பிய மஞ்சளில் கலப்படம் சேர்ப்பது துரதிருஷ்டவசமானது. மெட்டானில் எனும் ஒருவகை மஞ்சள் தூள், குரோமேட் எனும் மஞ்சள் நிற பவுடர், சுண்ணாம்பு தூள் போன்றவை கலக்கப்படுகின்றன. ஒரு கண்ணாடி டம்ளரில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதனுள் சிறிதளவு மஞ்சள் தூளை போட்டுவிட்டு சுமார் 20 நிமிடம் கழித்து பாருங்கள். மஞ்சள் தூள் அடியில் தங்கினால் மஞ்சள் சுத்தமானது. மேகமூட்டம் போல் நீரின் நிறம் மாறி இருந்தால் அது கலப்படமானது.

    குங்குமப்பூ: விலை மதிப்புள்ள குங்குமப்பூவில் சோளாக்கதிர் கலப்படம் செய்யப்படுகிறது. மக்காச்சோள கதிரை சர்க்கரை பாகில் ஊறவைத்து நிலக்கரி தார் நிறத்துடன் சேர்த்து செயற்கை குங்குமப்பூ தயாரிக்கப்படுகிறது. அத்தகைய கலப்பட குங்குமப்பூவை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். தூய குங்குமப்பூவாக இருந்தால் 20 நிமிடங்களுக்கு பிறகு நீரின் நிறம் மஞ்சள் அல்லது பொன்னிறமாக மாறும். ஆனால் குங்குமப்பூவை போட்டதும் தண்ணீரின் நிறம் உடனடியாக மாறினாலோ அல்லது நிறம் மாறாமல் இருந்தாலோ அது கலப்பட குங்குமப்பூ என்பதை அறிந்துவிடலாம்.

    மிளகாய் தூள்: இதில் பெரும்பாலும் செயற்கை நிறங்களும், செங்கல் பவுடரும் கலக்கப்படுகின்றன. ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் நிரப்பி அதில் சிறிதளவு மிளகாய் தூள் போட்டு கலக்கலவும். கலப்பட தூளாக இருந்தால் கண்ணாடியின் அடிப்பகுதியில் கலப்படப்பொருட்கள் படிந்துவிடும்.

    தேன்: குளுக்கோஸ், சர்க்கரை பாகு, பிரக்டோஸ் கார்ன் சிரப் போன்றவை தேனில் முக்கியமாக கலப்படம் செய்யப்படுகின்றன. ஒரு டம்ளர் தண்ணீருக்குள் ஒரு டீஸ்பூன் தேனை ஊற்ற வேண்டும். தேன் உடனடியாக கரைந்துவிட்டால் அதில் குளுக்கோஸ்/ சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். தூய தேன் என்றால் அடர்த்தியாக இருக்கும். கரைவதற்கு பதிலாக அடிப்பகுதியை நோக்கி இறங்க தொடங்கும்.
    Next Story
    ×