search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முதியவர்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு என்ன காரணம்?
    X
    முதியவர்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு என்ன காரணம்?

    முதியவர்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு என்ன காரணம்?

    முதியவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களின் தனிமையைப் போக்க உதவுவோம். அவர்கள் நம்மிடம் கோருவதெல்லாம் அன்பான சில வார்த்தைகள். அக்கறையுடன் கூடிய அரவணைப்பு.
    மதுரை மாநகராட்சிப் பூங்கா. ஒரு மூதாட்டியும் அவருடைய நடுத்தர வயது இளைய மகனும் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்கள். மூதாட்டியின் முகத்தில் அப்படி ஒரு சோகம். இருவரும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள். மனைவி சொல்கேட்டு அம்மாவை மதுரையிலிருக்கும் அண்ணன் வீட்டில் விடுவதற்காக அவன் வந்திருந்தான். வந்த இடத்தில்தான், அண்ணன் கொடைக்கானலுக்குக் குடிபோய்விட்டது தெரிகிறது. பழைய வீட்டிலிருந்தவர் அண்ணனின் தொலைபேசி எண்ணைத் தருகிறார்.

    தம்பி மொபைல் போனில் பேச, அண்ணன்காரன், “இங்கேயெல்லாம் அம்மாவைக் கொண்டு வந்து விட்டுவிடாதே...” என்கிறான். அம்மா, போனை வாங்கி அவனிடம் பேச, “இந்தப் பக்கம் வரவே வராதே” என்கிறான். இப்போது இருவரும் என்ன செய்வதெனத் தெரியாமல் பூங்காவில் அமர்ந்திருக்கிறார்கள். அம்மா, ‘ரொம்பப் பசிக்குதப்பா...“ என்கிறார். மகன் சாப்பாடு வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு எழுந்து போகிறான். அம்மா பெஞ்சிலேயே சாய்ந்து அமர்ந்திருக்கிறார். வெயில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இருள் கவிகிறது. எரிகின்றன. மகன் திரும்பி வரவேயில்லை. அவன் சென்னைக்குப் போகும் பேருந்தில் போய்க்கொண்டிருக்கிறான். காத்திருந்து பார்த்துவிட்டு, அம்மா மெல்ல எழுகிறார். பக்கவாதத்தால் வளைந்துபோன வலது கையுடன், அடியெடுத்தே வைக்க முடியாத இடது காலுடன் தளர்ந்து போய் மெல்ல நடக்கிறார்.

    இது, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த “கழுவேற்றம்” என்ற குறும்படம். எழுத்தாளர் தமயந்தியின் “அனல் மின் மனங்கள்” என்ற சிறுகதையைத் தழுவி, ராஜா என்ற இயக்குநர் இயக்கியிருந்தார். இது வெறும் கதை மட்டுமல்ல... நம்மைச் சுட்டுப் பொசுக்கும் உண்மையும்கூட. பெற்ற தாய், தந்தையே ஆனாலும் முதுமை வந்ததும், அவர்களைப் புறக்கணிப்பது, வீட்டைவிட்டுத் துரத்துவது, அவர்களை ஒன்றுக்கும் உதவாத ஜந்துக்களாக நடத்துவது... இவையெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டன. அதிகபட்ச இரக்கம் உள்ளவர்களாக இருந்தால், அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகிறார்கள். அங்கு வாழும் முதியவர்களின் ஈமச்சடங்குகளைக் கூட இல்ல நிர்வாகிகளே செய்யும் கட்டாயமும் கூட தரப்பட்டு விடுகிறது.

    முதியவர்கள் இப்படி ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு என்ன காரணம்? மாறிவரும் வாழ்க்கைமுறை, அருகிப்போன கூட்டுக் குடும்ப வாழ்க்கை, கடந்த தலைமுறையில் ஒன்றிரண்டு பிள்ளைகளோடு குழந்தைப்பேற்றை நிறுத்திக்கொண்ட பெற்றோர், வருமானத்துக்காகப் பிள்ளைகள் ஊர்விட்டு... நாடுவிட்டுச் செல்லும் நிலை, மாமியார் மருமகள் பிரச்சினை என்று இப்படி எத்தனையோ காரணங்கள். தனித்து வாழும் முதியவர்களைக் கண்காணித்து கொலை, கொள்ளையில் ஈடுபடும் குழுவினரும் உள்ளனர்.

    அதற்கான சமீபத்திய உதாரணம் ஆவடி ஐயப்பன் நகரைச்சேர்ந்த ஜெகதீசன், விலாசினி தம்பதியினர் கொலை சம்பவம். பிள்ளைகளே பெற்றோரை அல்லது தந்தை மற்றும் தாயை மட்டும் கொடூரமாகக் கொலை செய்யும் பிள்ளைகள் அதிகரித்து வருகிறார்கள். இதில் சாராயம் வாங்க காசு தராத தந்தை, குடிக்காதே என்று சொல்லும் தாய், போதைப் பழக்கத்துக்கு தேவையான பணத்தைத் தரமறுக்கும் பெற்றோர், சொத்து எழுதி வைப்பதை தாமதிக்கிற பெற்றோர் என்று பலப்பல காரணங்களால் பெற்ற பிள்ளைகளாலேயே தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிர் துறக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    படித்தவர்கள், பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் கூட தங்கள் முதுமைப் பருவத்தில் இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்கிறார் கள். இது ஒரு வியப்பு தான். ஓய்வு பெறும் இறுதி வாரத்தில் கூட பயிற்சிக்காக பணியாளர்களை அனுப்பி வைக்கும் அரசும், நிறுவனங்களும் பணியாளர்களை தங்கள் முதுமைக் காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை கற்பிக்க எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை.

    காவல்துறை போன்ற அரசுத் துறைகளும் கார்ப்பரேட்டுகளும் பெரிய நிறுவனங்களும் முன்னாள் படை வீரர் நல வாரியங்களைப் போல முன்னாள் பணியாளர்களுக்காக நல வாரியங்கள் அமைக்கலாம். இதில் நாம் அச்சப்பட வேண்டிய ஓர் அம்சமும் உண்டு. அது, நாளுக்கு நாள் அதிகரித்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை. உலக அளவில் 6 வயதும் 60-ஐத் தாண்டியவர்களும் 90 கோடிக்கும் மேல் என்கின்றன சில ஆய்வுகள். வரும் 2050-ம் ஆண்டில் 200 கோடிக்கும் அதிகமான முதியவர்கள் இருப்பார்களாம். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் 60 அல்லது 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பார்களாம். அண்மையில், பாராளுமன்றத்தில் இந்திய அரசு, 2050-ம் ஆண்டு 60வயதைக் கடந்தவர்கள் இந்தியாவில் 34 கோடி பேர் இருப்பர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, தற்போதைய மொத்த அமெரிக்க மக்கள் தொகைக்கு ஈடான எண்ணிக்கை இது. ஐ.நா.வின் மக்கள்தொகை நிதியகம் அண்மையில் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் அதிக முதியவர்களைக் கொண்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்திலிருக்கிறது தமிழகம். முதலிடம் கேரளாவுக்கு என்ன செய்யப் போகிறோம்?

    முதியவர்கள்மேல் அக்கறைகொண்ட நாடுகளே இல்லையா? இருக்கின்றன. முதியவர்கள் வாழத் தகுந்தவையாக 96 நாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதல் 10 இடங்களைப் பிடித்திருப்பவை, சுவிட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி, கனடா, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 71-வது இடம். ஆனாலும் இந்த இடம் நமக்கு வலியைத்தான் ஏற்படுத்துகிறது. முதியோர் பென்ஷன் வாங்க அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்கும் முதியவர் கள் கண்முன் வந்து போகிறார்கள்.

    முதுமையில் ஏற்படும் சில பிரத்யேகப் பிரச்சினைகள்தாம் அவர்களின் தளர்ச்சியை இன்னும் அதிகமாக்குகின்றன. அவை, ஆரோக்கியம் சீர்குலைதல், ஊட்டச்சத்துக்குறைவு, தங்குவதற்கு இடம் இல்லாமல் போவது, பயம், மன அழுத்தம், முதுமை, தனிமை, சலிப்பு, வறுமை. இவற்றை எதிர்கொள்ள, 50 வயதிலேயே பயிற்சி கொடுத்து, இவர்களைத் தயார்ப்படுத்திவிட்டால் போதும்... முதுமையைக் கடப்பது சுலபம். உதாரணமாக, சுவீடனை எடுத்துக்கொள்வோம். அந்த நாட்டுச் சட்டப்படி, முதியவர்களுக்குப் பிறரைப்போல் அத்தனை வசதிகளோடும் வாழ சம உரிமை உண்டு. விருப்பப்பட்டால், அவர்கள் நல்ல வசதியுடன்கூடிய தனி வீடுகளில் வசிக்கலாம். முதியவர்களுக்கு உதவுவதற்காகவே அங்கே பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென பிரத்யேகப் பயிற்சிகளும் உண்டு. தனியாக வாழ முடியாதவர்கள், முனிசிபாலிட்டி அமர்த்தியிருக்கும் பிரத்யேகப் பணியாளர்களை உதவிக்கு வைத்துக்கொள்ளலாம். முதியவர்களுக்காகத் தனிப் போக்குவரத்து, இலவச மருத்துவம், கணிசமான உதவித்தொகை... என நம்மை மிரளவைக்கிறது சுவீடன்.

    முதியவர்களால் நமக்கு என்ன நன்மை? ஏராளம். அவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். நம் சந்ததிக்கு நீதியை, பண்பாட்டை, சரியான வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுப்பார்கள். அவர்களின் பரிபூரணமான ஆசிகள் நமக்குக் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல் அவர்களைக் காக்க வேண்டியது நம் கடமை.

    “முதுமை வரமா... சாபமா?” என்று பட்டிமன்றமெல்லாம் வைக்கத் தேவையில்லை. ஏனென்றால், அது இயற்கை. பிறக்கிற ஒவ்வொரு குழந்தையுமே எதிர்காலத்தில் முதுமையை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும். முதியவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்குத் தேவை முதுமையில் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்கான சிகிச்சை. அதற்கு உத்தரவாதம் கொடுப்போம். சமூகக் குற்றவாளிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாப்போம். அவர்களின் தனிமையைப் போக்க உதவுவோம். அவர்கள் நம்மிடம் கோருவதெல்லாம் அன்பான சில வார்த்தைகள். அக்கறையுடன் கூடிய அரவணைப்பு. சமூகப்பாதுகாப்பு. “இவற்றைக் கொடுப்போம்” என்று இன்றே உறுதி ஏற்போம்.

    திலகவதி, ஐ.பி.எஸ், முன்னாள் காவல்துறை தலைவர்.
    Next Story
    ×