search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கண்களைக் காக்க..
    X
    கண்களைக் காக்க..

    காக்க.. காக்க.. கண்களைக் காக்க..

    தொடர்ந்து அதிக நேரம் மின்னணுத் திரைகளை பார்த்து வருவதால், பார்வைத் திறன் குன்றுவது, தற்காலிக பார்வைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
    மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் இன்றைய சூழலில், அவர்கள் செல்பேசி, கணினி, தொலைக்காட்சி என்று மின்னணுத் திரைகள் முன் கழிக்கும் நேரம் அதிகரித்து வருகிறது.

    இதனால், இந்தத் திரைகளில் இருந்து வெளியாகும் அதிசக்தி நீல ஒளி அலைகளின் தாக்கம் கண்களில் அதிகரிக்கும் அபாயமும் கூடியிருக்கிறது.

    இதனால், பார்வைத்திறன் பாதிப்பு மட்டுமின்றி, மெலடோனின் சுரப்புக் குறைவால் சீரான தூக்கத்திலும் சீர்குலைவு ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து, மன அழுத்தம், கவனக்குறைபாடு பிரச்சினை போன்றவை உண்டாகின்றன.

    மருத்துவ ஆய்வாளர்களின் கருத்துப்படி, 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு பாதுகாப்பான மின்னணுத் திரை நேரம் 2 மணி நேரம்தான். ஆனால் இன்று பலரும் இதைப் போல பல மடங்கு நேரத்தை மின்னணு ஒளித்திரைகள் முன் கழிக்கின்றனர்.

    அதனால், நம்மையும் அறியாமல், நாம் மின்னணுத் திரைகளை அதிக நேரம் உற்றுப் பார்க்கிறோம், கண் ஈரப்பதத்தைக் காக்கும் கண் சிமிட்டல் அளவு குறைகிறது. அதனால் கண்களில் உறுத்தலும், வலியும் ஏற்படுகின்றன. விழித்திரை பாதிப்புக்கு உள்ளாகிறது.

    தொடர்ந்து அதிக நேரம் மின்னணுத் திரைகளை பார்த்து வருவதால், பார்வைத் திறன் குன்றுவது, தற்காலிக பார்வைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    சரி, பணிக்காக அதிக நேரம் கணினித் திரையைப் பார்க்க வேண்டியிருப்பவர்கள் என்ன செய்வது?

    இதோ, சில டிப்ஸ்...

    கூடியமட்டும், அடிக்கடி கண் சிமிட்டுவதை கவனமாக வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் கண் வறட்சியைத் தவிர்க்க முடியும்.

    20 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வையை டிஜிட்டல் திரையில் இருந்து விலக்கி, சுமார் 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 நொடிகள் பார்க்க வேண்டும்.

    கணினியில் பணிபுரிவதற்கு உரிய கண்ணாடியை அணியலாம். இதைப் பயன்படுத்தும்போது, ஒளித்திரையானது நம் கண்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறைவதை உணரலாம்.

    உங்கள் மின்னணுத் திரையின் வெளிச்சத்தை சரியான அளவுக்கு அமைத்துக்கொள்ளலாம். சூழல் வெளிச்சத்தை விட, நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனத்தின் வெளிச்சம் அதிகமாக இருக்கக்கூடாது.

    மின்னணுத் திரைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிக நேரத்தைச் செலவழிப்பது, உடல் நலத்துடன், நம் மனநலத்தையும் பாதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அது, ஒருவித பதற்றம், மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறதாம்.

    ஆக, நம் உடல் நலம், மன நலம் கருதி, கணினி, செல்பேசி, தொலைக்காட்சியில் செலவழிக்கும் நேரத்தை முடிந்த அளவு குறைத்துக்கொள்வோம்.
    Next Story
    ×