search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குளிர்கால உடல் நல பராமரிப்பு
    X

    குளிர்கால உடல் நல பராமரிப்பு

    மார்கழி மாதம் கடந்த பின்னும் குளிர் இன்னும் விட்டபாடில்லை. இந்த குளிருக்கு ஏற்றவாறு நமது உடல் நலத்தை காக்க வேண்டும்.
    மார்கழி மாதம் கடந்த பின்னும் குளிர் இன்னும் விட்டபாடில்லை. இரவு மற்றும் விடியற்காலையில் குளிர் அதிகமாகவே இருக்கிறது. இந்த குளிருக்கு ஏற்றவாறு நமது உடல் நலத்தை காக்க வேண்டும். பனிக்காலத்தில் வெந்நீரில் குளிப்பது இதமாகத்தான் இருக்கும். ஆனால், மிகவும் சூடான வெந்நீர் தலைமுடியின் வேர்க்கால்களை சேதமாக்கி விடும். அதன் விளைவாக தலைமுடி வறண்டு காணப்படும். அதனால் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே முடிக்கு பாதுகாப்பு.

    குளிப்பதற்கு முன் உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து அதன்பின்பு குளிப்பது நல்லது. இதன் மூலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவை மசாஜுக்கு சிறந்தவை. முகம் மற்றும் உடலுக்கு சோப்பு போடுவதை தவிர்த்து கடலை மாவு, பாசிப்பயறு மாவு போன்றவற்றை உபயோகிக்கலாம்.

    குளிர் காலத்தில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். அதிகாலையில் எழுந்து வியர்க்கும் வகையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் ரத்த ஓட்டம் சுறுசுறுப்பு அடைவதோடு, உடல் சூடும் இயல்பான அளவுக்கு இருக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் சுரப்பிகள் தூண்டிவிடப்பட்டு தோலுக்கு ஈரத்தன்மையும் எண்ணெய்ப்பசையும் கிடைக்கும்.

    பனிக்காலத்தில் உடலின் வெப்பம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக வழக்கத்தைவிட சற்றுக் கூடுதலாக சாப்பிட வேண்டி வரும். ஆரோக்கியமான மனிதர்களுக்கு குளிர்காலத்தில் அதிகமாக பசி எடுப்பதற்கு இதுவே காரணம். உணவு, சத்துடனும் சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கவும் ஆரோக்கியமாக உடல் நலத்தை காக்கவும் இதன் மூலம் முடியும்.

    காய்கறி சூப் குடிப்பது நல்ல வெப்பத்தைத் தரும். பாதாம் பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கப்படும். ஒமேகா 3 சத்து நிறைந்த மீன் உணவை அதிகம் உண்ணுவது உடலின் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும். வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள்சூடு பாதுகாக்கப்படும். கமலா ஆரஞ்சு குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும். இதுவும் சருமம் வறண்டு போகாமல் தடுக்க உதவும்.
    Next Story
    ×