என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    உணர்ச்சிக்கு ஏற்ப விரியும் கருவிழி
    X

    உணர்ச்சிக்கு ஏற்ப விரியும் கருவிழி

    நம் கருவிழி ஒளிக்கு மட்டுமல்லாது, உடலின் உள்ளே நடக்கும் உணர்ச்சி மற்றும் மன மாற்றங்களாலும் விரிகிறது.
    நம் கருவிழி ஒளிக்கு மட்டுமல்லாது, உடலின் உள்ளே நடக்கும் உணர்ச்சி மற்றும் மன மாற்றங்களாலும் விரிகிறது. கருவிழியின் அளவைக் கொண்டு உளவியல் சார்ந்த விஷயங்களை விஞ்ஞானிகள் அலசுகின்றனர். கண்கள் விரிவதற்கான காரணம் தெரியாமலேயே இவையனைத்தும் செய்து கொண்டிருக்கின்றன.

    நாம் பார்க்கும் படங்களைப் பின்னந்தலையில் இருக்கும் பார்வைப்புறணி என்ற பகுதி ஒன்று சேர்க்கிறது. நரம்பு மண்டலத்தின் மற்றொரு பகுதி, கருவிழியை சரிப்படுத்தும் பணியைச் செய்கிறது. இந்தப் பகுதி, இதயத் துடிப்பு, வியர்த்தல் போன்று நம் உணர்வுக் கட்டுப்பாட்டில் அல்லாத செயல்களை செய்கிறது. மேலும் ஒளியின் அளவைப் பொருத்து கருவிழிப்படலத்தின் இயக்கத்தை நிர்ணயிக்கும் பணியையும் செய்கிறது.

    கருவிழிப்படலம் இரு வகை தசைகளால் ஆனது. முதலாவது வெளிச்சமான சூழலில், கருவிழியைச் சுற்றியிருக்கும் வட்ட வடிவ இறுக்குத் தசை. இத்தசை 2 மில்லி மீட்டர் வரை சுருங்கக் கூடியது. இரண்டாவது, இருட்டில் பார்க்க உதவும் விரிவுத் தசைகள். இவை கருவிழியை 8 மில்லி மீட்டர் வரை விரிய உதவுகின்றன. கருவிழி விரியும் அளவையும் சுருங்கும் அளவையும் அளப்பது ப்யூபில்லோமெட்ரி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த அளவு மனிதனின் உணர்வு சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கு விடையளிக்கிறது. புரிதல்சார் நிகழ்வுகளும் உணர்வுப் பூர்வமான நிகழ்வுகளும் கருவிழிச்சுருங்குவதற்கும், விரிவதற்கும் காரணமாக இருக்கின்றன. சில மில்லி மீட்டர் அளவே நடக்கும் இந்தச் செயல்பாட்டை அகச்சிவப்பு புகைப் படக்கருவி கொண்டு கண்காணிக்க முடியும். இதன் மூலம் மனம் சார்ந்த பிரச்சினைகளை கண்டுபிடிக்க முடியும்.

    கருவிழி விரியும் அளவைக் கொண்டு ஆட்டிசம், மன இறுக்கம், மனச் சோர்வு போன்ற பல பிரச்சினைகளைக் கண்டுபிடிக்க முடியும். கருவிழி விரிதலைக்கொண்டு ஒருவர் எடுத்திருக்கும் முடிவை முன் கூட்டியே தெரிந்து கொள்ளமுடியும் என்று உல்ப்கேங் ஐன்ஹாசர்டிரேயர் எனும் நரம்பியல் நிபுணர் மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மனியின் பிலிப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கு பெற்றவர்களை 10 நொடிக்குள் ஒரு பொத்தானை அழுத்தச் சொன்னார்கள். பொத்தானை அழுத்தும் முன்பு கருவிழி விரிய ஆரம்பித்ததென்றும் அழுத்திய 2 விநாடிகளுக்கு பின் அதீத விரிவு நிலையை அடைந்தது என்றும் பதிவானது.

    “ப்யூபில்லோமெட்ரியின் செயல்பாடு வரையறுக்கப்பட்டது என்பதால் அதைக் கொண்டு அனைத்து புரிதல் சார்ந்த செயல்களையும், உணர்ச்சி சார்ந்த செயல்களையும் அடையாளம் காண முடியாது. எனினும் உளவியல் ஆய்விற்கு மிகுந்த உதவியாக இருக்கும்” என்று, பிட்ஸ்பர்க் மருத்துவக் கல்லூரியின் உயிர் அளவியல் ஆராய்ச்சிக் கூடத்தின் மேலாளர் ஸ்டூவர்ட் ஸ்டீன்ஹார் கூறுகிறார்.
    Next Story
    ×