என் மலர்

  ஆரோக்கியம்

  இன்று ரத்த தானம் வழங்குவோர் தினம்
  X

  இன்று ரத்த தானம் வழங்குவோர் தினம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒருவர் கொடுத்த ரத்த தானத்தால் ஒரே நேரத்தில் நான்கு பேர் பயனடைகிறார்கள்.
  ஒரே நேரத்தில் நான்கு பேர்களின் உயிரை காப்பாற்றலாம்..

  எந்த செலவும் செய்யாமல், எந்தவிதமான சிரமங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றால் அது எவ்வளவு பெரிய வாய்ப்பு? அதுவும் ஒரே நேரத்தில் நான்கு பேர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என்றால் அதை யாராவது தவிர்ப்பார்களா என்ன?

  சென்னைஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலராக பணிபுரிபவர் மருத்துவர் பெ.தமிழ்மணி. ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவர் இயக்கிய ‘உயிர்த்துளி’ என்ற குறும் படத்திற்கு தமிழக அரசு, பரிசு வழங்கி பாராட்டியிருக்கிறது. இன்று (14-ந் தேதி) சர்வதேச ரத்த தானம் வழங்குவோர் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி அவர் அளித்த பேட்டி..

  ‘‘தானமாக பெறப்பட்ட ரத்தம் அதன் முழுமையான வடிவத்திலேயே மற்றொருவருக்கு வழங்கப்படுவதும் உண்டு. அல்லது திரவம் நீக்கப்பட்ட ரத்தம், பிளாஸ்மா, தட்டு அணுக்கள், கிரையோபிரிசிபிடேட் என்று நான்கு விதமாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு ஆட்களுக்கு வழங்கப்படுவதும் உண்டு. இந்த முறையில் ஒருவர் கொடுத்த ரத்த தானத்தால் ஒரே நேரத்தில் நான்கு பேர் பயனடைகிறார்கள்’’.

  ‘‘யார் யாரெல்லாம் ரத்த தானம் கொடுக்கலாம் என்பதற்கு ஒரு சில வரிகளிலேயே பதில் சொல்லிவிடலாம். ஆனால் யார் யாரெல்லாம் ரத்த தானம் கொடுக்கக்கூடாது என்பதற்கு மிகவும் நீண்ட பட்டியலே இருக்கிறது’’.

  ‘‘18 வயதிலிருந்து 65 வயதுவரை உள்ளவர்கள் ரத்த தானம் கொடுக்கலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு அதிகமாக இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 என்ற அளவுக்கும் அதிகமாக இருக்க வேண்டும்’’.

  ‘‘புற்றுநோய் இருப்பவர்கள், வலிப்பு சிக்கல் இருப்பவர்கள், தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள், காயம் ஏற்பட்டால் ரத்தம் உறையாத பிரச்சினை இருப்பவர்கள், காச நோய், எச்.ஐ.வி., எச்.சி.வி, பால்வினை நோய்கள், மஞ்சள் காமாலை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டவர்கள், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆகியோர் ரத்த தானம் கொடுக்க முடியாது. மேலும் நீரிழிவுக்காக இன்சுலின் ஊசி போடுபவர்களும் ரத்த தானம் செய்யக்கூடாது. ரத்த அழுத்தம் வழக்கமான அளவைக்காட்டிலும் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருந்தாலும் ரத்த தானம் பெறப்படுவதில்லை’’.

  ‘‘டி.டி. தடுப்பூசி போட்டவர்கள், பல் சிகிச்சை செய்து கொண்டிருப்பவர்கள் ஆகியோர் நான்கு வாரங்கள் வரையிலும் ரத்த தானம் கொடுக்கக்கூடாது. வெளிநாடு செல்வதற்காக ‘யெல்லோ பீவர்’ தடுப்பூசி போட்டவர்களும் டைபாய்டு, மலேரியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் ஓராண்டு வரையிலும் ரத்த தானம் கொடுக்கக்கூடாது’’.

  ‘‘பெண்களைப் பொறுத்தவரையில் பால் ஊட்டும் தாய்மார்களும் கருவுற்ற பெண்களும் ரத்த தானம் கொடுக்க கூடாது. மாதவிடாய் காலத்திலும் ரத்த தானம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் முடிந்து ஐந்து நாட்களுக்கு பிறகு ரத்த தானம் கொடுக்கலாம். பெண்களின் உடல் நலத்தை முன்னிட்டே இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன’’.

  ‘‘இந்த லிஸ்ட் இவ்வளவு பெரியதாக இருக்கிறதே.. இதையெல்லாம் முறையாக பின்பற்றித்தான் ரத்த தானம் பெறப்படுகிறதா என்று சந்தேகம் வரலாம். மருத்துவ கல்லூரி மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரத்த தானத்திற்கு தனிப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. அங்கு ஆலோசகர் ஒருவர் இருப்பார். அவர் மேற்கண்ட அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டபிறகுதான் ரத்த தானம் அளிப்பதற்கு பரிந்துரை செய்வார்’’.

  ‘‘ரத்தத்தை சேகரிப்பதற்கு பத்து நிமிடங்களே போதுமானது. சேகரிக்கப்பட்ட ரத்தத்தை பற்றிய அனைத்து சோதனைகளும் ஆறு மணி நேரத்திற்குள் முடிந்துவிடும். எச்.ஐ.வி, எச்.சி.வி, மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள், மலேரியா ஆகிய ஐந்து சோதனைகளும் முடிந்தபிறகுதான் தானமாக கொடுக்கப்பட்ட ரத்தம் மற்றொருவருக்கு அளிக்கப்படுகிறது. இந்த சோதனைகளை ஒருவர் செய்ய வேண்டும் என்றால் சாதாரணமாக 1500 ரூபாய் வரையிலும் செலவாகும். ரத்த தானம் செய்பவர்களுக்கு இந்த சோதனைகள் இலவசமாகவே செய்யப்படுகின்றன’’.

  ‘‘தனது பிறந்தநாளில் ரத்த தானம் செய்பவர்களும் இருக்கிறார்கள். தனக்கு பிடித்த அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆகியோரின் பிறந்த நாட்களில் தானம் செயபவர்களும் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் எத்தனை பேர் ரத்த தானம் செய்தாலும் அவற்றை பாதுகாப்பதற்கான வசதிகள் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ளன.

  ஆனால் தானம் கொடுப்பவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட வேண்டும். தானம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்தும் ஊழியர்கள் வந்து ஒத்துழைப்பார்கள்’’.

  ‘‘தானம் செய்யப்பட்ட ரத்தத்தை அதே குரூப் உள்ளவருக்கு உடனே செலுத்துவதில்லை. தானம் கொடுப்பவர், பெறுபவர் இரண்டு பேரின் ரத்தமும் ஒன்று சேர்கிறதா என்பதை ‘கிராஸ் மேட்சிங்’ என்ற சோதனை செய்து உறுதி செய்த பின்னரே ரத்தம் செலுத்தப்படும். இந்த மேட்சிங் சோதனையை செய்வதற்கு அடிப்படையாக இருப்பது கரோல் லான்ட்ஸ்டெய்னர் என்பவர் கண்டறிந்த ஏ, பி, ஓ என்ற குரூப்பிங் முறைதான். அந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது பிறந்தநாளில்தான் ரத்த தானம் வழங்குவோருக்கான சிறப்பு தினம் கொண்டாடப்படுகிறது’’.

  இவ்வாறு பெ.தமிழ்மணி கூறினார்.
  Next Story
  ×