என் மலர்

  ஆரோக்கியம்

  வயிற்றுக்கு இதம் தரும் கடுக்காய்
  X

  வயிற்றுக்கு இதம் தரும் கடுக்காய்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடுக்காயின் கடினமான தோல் பகுதியில்தான் மருத்துவ சக்தி இருக்கிறது.
  சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது, கடுக்காய். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்குவதால் அமிர்தம் என்ற சிறப்பு பெயரும் இதற்கு உண்டு.

  அறுசுவையில் ஒன்றான உப்பு தவிர்த்து இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய சுவைகள் இதில் அடங்கியிருப்பது சிறப்பு. இது வாத, பித்த, கபத் தன்மை மூன்றையும் சமநிலையில் வைத்து உடலில் உள்ள ஏழு வகை தாதுகளையும் பலப்படுத்துவதால் இது முக்கியமான காயகற்ப மருந்தாக திகழ்கிறது.

  நாவறட்சி, தலைநோய், ஈரல் நோய், வயிற்றுவலி, தொழுநோய், மூச்சிரைப்பு, தொண்டைநோய், புண், கண்நோய், வாதம், வயிற்று வலி, காமாலை  போன்ற நோய்களை குணப்படுத்த கூடிய ஆற்றல் கடுக்காய்க்கு உண்டு.

  ‘அடுக்கடுக்காய் வந்த பிணியாவும் சுடுக்காய் கண்டு காணாமல் போகும்’ என்ற சொல்வழக்கு இதன் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.

  கடுக்காயின் கடினமான தோல் பகுதியில்தான் மருத்துவ சக்தி இருக்கிறது. அதனால் கொட்டையை நீக்கிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்.

  பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

  கண்களை சுற்றியுண்டாகும் கருவளையத்தை போக்க கடுக்காய் சிறந்தது. கடுக்காய் பொடியை பன்னீரில் கலந்து கண்களை சுற்றி பூசவேண்டும். பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். சில முறை செய்தால் நல்ல பலன் கிட்டும். கண் நோய்களுக்காக தயாரிக்கப்படும் சில மருந்துகளில் கடுக்காய் சேர்க்கப்படுகிறது.  

  கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஆறாத புண்கள் மற்றும் தோல் நோய் இருக்கும் இடங்களில் கழுவினால் பலன் கிடைக்கும்.

  200 மி.லி. தண்ணீரில் கடுக்காய் பொடி 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்கவைத்து தினமும் காலை, மாலை குடித்துவந்தால் உடல் எடை குறையும். ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு நீங்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறையும்.

  100 கிராம் கடுக்காய் பொடியுடன், 50 கிராம் வீதம் சுக்கு, திப்பிலி தூள் கலந்து, ஒரு தேக்கரண்டி இந்துப்பு பொடியும் சேர்த்து, நன்றாக கலந்து பாட்டிலில் அடைத்துவைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு தேக் கரண்டி எடுத்து காலையும், மாலையும் சாப்பிட்டுவரலாம். தேன் அல்லது சுடுநீர் கலந்து சாப்பிடவேண்டும். உணவுக்கு பின்பு இதனை சாப்பிடுங்கள். இதனை சாப்பிட்டு வந்தால் பசியின்மை, வயிற்று உப்புசம், ருசியின்மை, புளித்த ஏப்பம், மலச்சிக்கல் போன்றவை குணமாகும்.

  இரண்டு கடுக்காயை இடித்து, அத்துடன் 5 கிராம் கிராம்பு, 10 கிராம் லவங்கப்பட்டை சேர்த்து 200 மி.லி. நீரில் கொதிக்கவைத்து அதிகாலையில் பருகவேண்டும். இரண்டு மூன்று முறை மலங் கழியும். இயற்கையான முறையில் வயிறு முழுமையாக சுத்தமாகும்.

  கோடை காலத்தில் சிறிதளவு வெல்லத்தூளுடன், அரை தேக்கரண்டி கடுக்காய் பொடி கலந்து சாப்பிடலாம். தினமும் இரவு படுக்கச்செல்லும் முன்பு 5 கிராம் கடுக்காய்தூளை சூடான நீரில் கலந்து பருகலாம். இஞ்சி– சுக்கு– கடுக்காய் பொடியை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் முறையே காலை, மதியம், இரவு சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும். ஜீரணமும் நன்றாகும். மலமும் முழுமையாக வெளியேறும். இதனால் உடல் இயக்கம் சீரடையும். நோய் அண்டாது. இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.

  கடுக்காய், புளித்தமோர், சுக்கு, இந்துப்பு, மிளகு, ஒமம் போன்றவைகளை கலந்து ‘பாவன கடுக்காய்’ என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இது அஜீரணம், புளித்த ஏப்பம், வயிற்றுப் புண், மூலம், ஈரல் நோய்கள், சைனஸ் தலைவலி, பசியின்மை போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.

  பிஞ்சு கடுக்காயுடன், விளக்கெண்ணெய் கலந்து மூலகுடார தைலம் என்பது தயாரிக்கப்படுகிறது. இது மூல நோய்களுக்கு மிக சிறந்த மருந்து. தினம் 10 மி.லி. வீதம் இரவு சாப்பிடவேண்டும். இது அனைத்து வகையான மூலம் மற்றும் மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து.

  கடுக்காய் கலந்த மருந்துகள் சித்த மருந்து விற்பனை நிலையங்களிலும், கடுக்காய் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

  கருவுற்றிருக்கும் பெண்கள் கடுக்காயை எந்த விதத்திலும் சாப்பிடக்கூடாது.

  Next Story
  ×