search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    உள்ளத்தின் கவன சக்தியைக் கூர்மையாக்கும் பிராணாயாமம்
    X

    உள்ளத்தின் கவன சக்தியைக் கூர்மையாக்கும் பிராணாயாமம்

    • பிராணன் என்பது உயிர்ச்சக்தி.
    • பிராணாயாமம் சுவாசத்தை கட்டுப்படுத்துகிறது.

    நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஹதயோகம் உதவுகிறது. ஆரோக்கியமான உடலில் இருக்கும் உள்ளமும் உறுதியாக இருக்கிறது. யோகாசனங்களின் மூலமாகவும், பிராணாயாமத்தைக் கொண்டும் அந்த உள்ளத்தின் கவன சக்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளலாம்.

    நாம் பார்க்கும் காட்சிகளும், காதால் கேட்பவைகளும் நமது சிந்தனையைக் கவனமாக ஊன்ற விடாமல் தடுக்கின்றன. மற்ற புலன்களும் இப்படி கவனத்தைக் கலைக்கத் தூண்டுகின்றன. மனம் இப்படி அலைபாயாமல் தடுப்பதற்கு உதவும் ஹதயோகம் ,பிராணாயாமத்தையும் அதை ஒட்டிய மூச்சுப் பயிற்சிகளையும் குறிப்பிடுகிறது.

    ஓர் அலாரம் கடிகாரத்தை எடுத்து உங்கள் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற சிந்தனை எதுவும் இன்றி, 'டிக் டிக்' என்ற அதன் சப்தத்தைக் கவனமாகக் கேளுங்கள். இப்படி நீங்கள் முயலும்போதே, பிற சிந்தனைகள் வந்து உங்கள் மனதை அலைக்கழிக்கக்கூடும். பிடிவாதமாக மனதைக் கட்டுப்படுத்தி இந்தப் பயிற்சியைத் தொடருங்கள். முதலில் சில நிமிடங்களுக்கு இப்படி இருக்க முடியும். பிறகு தொடர்ந்து இவ்வாறு இருக்கவும் பழகி விடுவீர்கள்.

    இப்படி நீங்கள் கவனிக்க முயலும்போது என்ன நடக்கிறது? உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய மூச்சைக் கட்டுப்படுத்துகிறீர்கள். மிக மெதுவாகவும், அடக்கியும், ஆழ்ந்தும் மூச்சு விடுகிறீர்கள். இது எதைக் காட்டுகிறது? மனம் கவனமாக ஊன்றும்போது மூச்சு விடுவதின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

    பிராணன் என்பது உயிர்ச்சக்தி. அது உலகெங்கும் காற்றாகவும், நீராகவும், உணவாகவும் பரவிக் கிடக்கிறது. இப்படி வெவ்வேறு பொருட்களில் பரவி நிற்கும் பிராணசக்தியை, பிராணாயாமத்தின் மூலம் நாம் உடல் முழுவதும், எல்லா நரம்புகளிலும் நாடிகளிலும் இயங்க வைக்கிறோம். சிந்தனையிலிருந்து சாதாரண உடல் அசைவு வரை ஒவ்வொன்றையும் இது கவனித்துக் கொள்ளுகிறது. அதனாலேயே பிராணாயாமம் நம்முடைய உடலைப் பிணிகள் பீடிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்று சொல்லுகிறோம்.

    மனித உடலில் பிராணன் செய்யும் மிக நுட்பமான இயக்கம், மனதைச் செயற்பட வைப்பதுதான். இதைப் பிராணாயாமம் சிறப்பாக ஆக்குகிறது. மனித உடலில் மிக முக்கியமான இயக்கம், சுவாசத்துக்கு உதவும் சுவாசப் பைகள்தாம். அது சரியாக இல்லாவிட்டால் இதயம் உட்பட எல்லாமே சீர்கெட்டுப் போகும். பிராணாயாமம் சுவாசத்தை கட்டுப்படுத்துகிறது. அதன் மூலம் உடல் முழுவதையுமே பிராண சக்தியினால் கட்டுப்படுத்துகிறது. இதனால் நோய்நொடியில்லாத வாழ்க்கையை நாம் பெற முடிகிறது.

    பிராணாயாமப் பயிற்சியின் மூலம், நம் உடலில் பிராணசக்தி இயங்குவதையும் நாம் நுட்பமாக உணரமுடியும். உடலில் ஒரு பகுதியில் அது அதிகமாகவும், இன்னொரு பகுதியில் குறைவாகவும் இருப்பதையும் புரிந்து கொள்ளலாம். குறைவாக உள்ள பகுதிக்கு, அதிகமாக உள்ள பகுதியிலிருந்து திருப்பிவிடும் ஆற்றலையும் நாம் பெறமுடியும். இப்படி பிராணசக்தி சமச்சீராகப் பரவும்போது, உடம்பின் எல்லாப் பகுதிகளும் வலுப்பெறுகின்றன; சிந்தனையும் கூர்மையாக ஆகிறது.

    பிராணசக்தி இயற்கையில் எங்கும் நிறைந்திருக்கிறது. அதன் பலனை எல்லோருமே பெறமுடியும். ஆனால் அதை அடையும் வல்லமை பிராணாயாமத்தை முறைப்படி செய்து மனவலிமை பெறும் யோகியருக்கே உரியதாக ஆகிறது. அவர்களிடம் ஒரு சமூகத்தையே வழிப்படுத்தக்கூடிய அளவுக்கு மனோபலம் சேருகிறது. தன்னலமின்றி அவர்கள் அதைப் பயன்படுத்தும்போது, அதனால் உடல்நலம் பெறுவோர் பலர், மனம் திருந்துவோர் பலர், பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவோர் பலர். நாம் ஓர் ஆயுட்காலத்தில் செய்யமுடியாத காரியத்தை சில நொடிகளில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலும் அவர்களுக்கு இருக்கிறது.

    முதலில் உடல்வலிமையைப் பெறுவதற்காகவும், ரத்தஓட்டம் - உடல் நரம்புகளின் இயக்கம் ஆகியவற்றைச் சீராக்குவதற்காகவும்தான் பிராணாயாமப் பயிற்சியைத் தொடங்குகிறோம். ஆனால் போகப்போக அதுவே நமது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தவும், சிந்தனையை வளப்படுத்தவும், ஆன்மிக முன்னேற்றத்தை நாடவும் வழி செய்து கொடுக்கிறது. தன்னை உணருவதற்கும், தன்னை மறந்து ஆழ்ந்த தியானத்தில் இருக்கவும் அது பயன்படுகிறது. உடல்வலிமைக்காகச் செய்யும்போது ஹதயோகமாக இருந்தது. பின் மனவலிமைக்காகப் பயன்படும்போது ராஜயோகமாக மாறிவிடுகிறது. இவை இரண்டும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவைதாம்.

    பெரும்பாலான மக்கள் பிராணாயாமத்தை, ஹதயோகம் குறிப்பிடும் அளவுக்கு உடற்பயிற்சியாகவே செய்து முடித்து விடுகிறார்கள். அப்போது அது உடற்பிணிகள் தீருவதற்கு மட்டும் வழிகாட்டுகிறது. ஆனால் அவர்களில் சிலர் பிராணாயாமத்தை ராஜயோக அடிப்படையிலும் செய்கிறார்கள். அப்போது அது மனதின் வலிமையையும் கூர்மையையும் உணர்த்துகிறது. அந்த நிலையில் பக்திமார்க்கத்தில் ஈடுபடவும், ஆன்மிக முன்னேற்றம் பெறவும் அவர்களால் முடிகிறது.

    இப்படி இருவிதமாகவும் பலன் தரும் பிராணாயாமத்தை முறைப்படி கற்க வேண்டும். தன்னலமில்லாத ஞானாசிரியரிடம் அதைக் கற்கும்போது அது நமக்கு மேலும் மேன்மை பெற வழிகாட்டுகிறது.

    Next Story
    ×