search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஏக பாத ராஜகபோதாசனம்
    X

    தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஏக பாத ராஜகபோதாசனம்

    • முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
    • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    வடமொழியில் 'ஏக' என்றால் 'ஒன்று', 'பாத' என்றால் 'கால்', 'இராஜ' என்றால் 'அரசன்' மற்றும் 'கபோட' என்றால் 'புறா' என்று பொருள். இவ்வாசனம் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு சவால் விடும் ஆசனங்களில் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில் One-Legged King Pigeon Pose என்று அழைக்கப்படுகிறது.

    ஏக பாத இராஜகபோடாசனத்தில் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, குரு மற்றும் சகஸ்ரார சக்கரங்களைத் தூண்டப் பெற்று அவற்றின் செயல்பாடுகள் மேம்படுத்துகின்றன. சகஸ்ரார சக்கரம் தூண்டப்படும் போது, பிரபஞ்ச பேராற்றலை ஆழ்ந்துணர முடிகிறது, மூளையின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றன. ஆக, உருவ அமைப்பு ஒத்திருத்தலையும் தாண்டி, மிகவும் அறிவான புறாவோடு இவ்வாசன நிலையை ஒத்துக் கூறுவதற்கான காரணமாகவும் இது அமைந்திருக்கலாம்.

    பலன்கள்

    முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகமாக்குகிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியை விரிவடையச் செய்வதுடன் இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

    வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. கால்களை நீட்சியடையச் செய்கிறது. சையாடிக் பிரச்சினையைப் போக்குகிறது.

    உடல் சோர்வை நீக்குகிறது. மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் போக்குகிறது

    செய்முறை

    விரிப்பில் தவழும் நிலைக்கு வரவும். மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு வலது முட்டியைக் கால்களுக்கு இடையில் கொண்டு வரவும். வலது கணுக்கால் இடது மணிக்கட்டின் அருகே இருக்க வேண்டும். இடது காலைப் பின்னால் நீட்டி இடது முட்டியைத் தரையில் வைக்கவும். இடது பாதத்தின் உள்பக்கம் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

    வலது புட்டத்தைத் தரையில் வைக்கவும். கீழ் முதுகை நன்றாக நிமிர்த்தவும்.

    மூச்சை உள்ளிழுத்தவாறு இடுப்புப் பகுதியை மேலும் நன்றாகக் கீழிறக்கவும். இடது கையைத் தலைக்கு மேல் உயர்த்தவும். இடது உள்ளங்கை உடலை நோக்கி இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றவும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு தலையையும் மேல் முதுகையும் சற்று பின்னோக்கிச் சாய்க்கவும்.

    மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு இடது காலை மடக்கி இடது கணுக்காலை இடது கையால் பிடிக்கவும். இப்போது இடது உள்ளங்கை கீழ் நோக்கி திரும்பி இருக்கும். உங்கள் இடது பாதத்தில் தலையை வைக்கவும். அல்லது, இடது கையால் இடது கால் விரல்களைப் பற்றி இருந்தால் போதுமானது. வலது கையைத் தரையில் வைக்கலாம். அல்லது சின்முத்திரையில் தொடை மீது வைக்கலாம். 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்நிலையில் இருக்கவும்.

    முதுகுத்தண்டில் தீவிர பிரச்சினைகள், இடுப்பு, முட்டி, கணுக்கால் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்க வேண்டும்.

    Next Story
    ×