search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    தலைவலி வராமல் தடுக்கும் முத்திரைகள்
    X
    தலைவலி வராமல் தடுக்கும் முத்திரைகள்

    தலைவலியால் அவதியா? இந்த முத்திரைகளை செய்யுங்க...

    தலைவலி வந்தால் அதில் இருந்து மீள்வதற்கு பயிற்சிகள் உடல் சார்ந்த பயிற்சிகள், மனம் சார்ந்த பயிற்சிகள் உள்ளது. நாம் தலைவலி வராமல் வாழும் எளிய யோகா நெறிமுறைகளை தெளிவாகக் காண்போம்.
    வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் உடல் ஆரோக்கியமாக வாழத்தான் விரும்புகின்றனர். எனினும் நமது பழக்க வழக்கங்கள், உணவு முறை, எண்ணத்திற்கேற்ப உடலில் சில குறைபாடுகள் ஏற்படுகின்றது. இதனை நோய் என்று சொல்கிறோம். அந்த வகையில் நிறைய நபர்களுக்கு தலைவலி வருகின்றது. அது சிலருக்கு ஒற்றைத்தலைவலியாக வரும். இடது பக்கம் மட்டும் வலி இருக்கும். சிலருக்கு வலது பக்கம் மட்டும் வலி இருக்கும். சில நபர்களுக்கு இரு பக்கமும் தலைவலி இருக்கும். பலவகையான மாத்திரைகள் எடுத்தும் முழுமையான தீர்வு இல்லாமல் இருப்பர்.

    யோகாவில் இதற்கு நிச்சயமாக தீர்வு உண்டு. தலைவலி வராமலும் வாழலாம். தலைவலி வந்தால் அதில் இருந்து மீள்வதற்கு பயிற்சிகள் உடல் சார்ந்த பயிற்சிகள், மனம் சார்ந்த பயிற்சிகள் உள்ளது. நாம் தலைவலி வராமல் வாழும் எளிய யோகா நெறிமுறைகளை தெளிவாகக் காண்போம்.

    சின் முத்திரை: விரிப்பு விரித்து கிழக்கு நோக்கி நிமிர்ந்து அமரவும். தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் ஆள் காட்டி விரல், பெருவிரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை உள் இழுக்கவும். மிக, மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். மூச்சை இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை இழுப்பதாக எண்ணவும். மூச்சை வெளிவிடும் பொழுது நமது உடல், மனதில் உள்ள டென்‌ஷன், கவலை, மன அழுத்தம் வெளியேறுவதாக எண்ணவும். பத்து முறைகள் இவ்வாறு செய்யவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கவனிக்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை மதியம் மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    முகுள முத்திரை: விரிப்பு விரித்து கிழக்கு நோக்கி நிமிர்ந்து அமரவும்.தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி நான்கு விரல்களையும் குவித்து வானத்தைப் பார்க்கும்படி வைக்கவும். மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக, மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் மூச்சை இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் வாங்குவதாக எண்ணவும். மூச்சை வெளியிடும் பொழுது நமது உடல், மனதில் உள்ள டென்‌ஷன், கவலை, கோபம், மன அழுத்தம் வெளியேறுவதாக எண்ணவும். பத்து முறைகள் இவ்வாறு செய்யவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து தியானிக்கவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் சாதாரண மூச்சில் இருக்கவும்.

    ஆதி முத்திரை: விரிப்பு விரித்து கிழக்கு நோக்கி நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற் காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கட்டை விரலை உள்ளங்கையில் மடித்து மற்ற நான்கு விரல்களை கட்டை விரலின் மேல் வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். மூச்சை இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை இழுப்பதாக எண்ணவும். மூச்சை வெளிவிடும்பொழுது உடல், மனதில் உள்ள கவலை, டென்‌ஷன், வெளியேறுவதாக எண்ணவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் கவனிக்கவும்.

    பத்மாசனம்: விரிப்பில் நிமிர்ந்து அ ம ர வு ம். இருகால் களையும் நீட்டவும். இடது காலை மடித்து வலது தொடை மேல் போடவும்.பின் வலது காலை மடித்து இடது தொடை மீது போடவும். கைகள் சின் முத்திரையில் வைக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளி விடவும். மூச்சை வெளிவிடும் பொழுது நமது உடல், மனம், உள்ளத்தில் உள்ள டென்‌ஷன், கவலை, வெளியேறுவதாக எண்ணவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து கவனிக்கவும். நெற்றிப் புருவ மத்தியில் உங்களது மூச்சோட்டதை கூர்ந்து கவனிக்கவும். ஐந்து நிமிடங்கள் மூச்சை கூர்ந்து கவனிக்கவும்.

    எளிய நாடி சுத்தி:தரையில் விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். இடது கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். வலது கை பெரு விரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளி விடவும். மீண்டும் இடது நாசியில் இழுத்து இடது நாசியில் வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    பின் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    இப்பொழுது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். இப்பொழுது உங்களது மூச்சை நெற்றிப் புருவ மையத்தில் கூர்ந்து அமைதியாக தியானிக்கவும். ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும்.

    நெற்றிப் புருவ மையத்தில் நமது மூச்சை தியானிக்கும் பொழுது நமது உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மசக்தி உடல் முழுக்க பரவும். நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும். உடலில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் நீக்கும். மன அமைதி கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும். நேர்முகமான எண்ணங்கள் வளரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். வலது மூளை நன்கு இயங்கும். பிட்யூட்டரி - பினியல் சுரப்பி நன்கு சரியான அளவில் சுரக்கும். தலைவலி வராமல் வாழலாம்.

    மேற்கூறிய பயிற்சிகளை தலைவலி வருபவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் பயிற்சி செய்யுங்கள். தலைவலிக்கு மாத்திரை சாப்பிடாமல் தலைவலி வராமல் வாழலாம்.
    Next Story
    ×