search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    யோக முத்திரைகள்
    X
    யோக முத்திரைகள்

    எதிர்மறை எண்ணங்கள், மன பயம் போக்கும் யோக முத்திரைகள்

    நமது ஆழ்மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அழிக்கவும், மீண்டும் வராமல், எழாமல் தடுக்கவும் முத்திரைகளை மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிலுங்கள்.
    இன்று உலகில் நிறைய மனிதர்களுக்கு பயம் உள்ளது. மனதில் பல வகையான பய உணர்வுகள் உள்ளது. இந்த பய உணர்வு, பய எண்ணங்களினால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக சுரக்காது. அதனால் உடலில் பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதற்கு மேல் மன அழுத்தத்தினால் நுரையீரல், இதயம் பாதிப்பு ஏற்படுகின்றது. எல்லா மனிதர்கள் போல் அவர்களால் எல்லோரிடமும் பழக, பேசக்கூட முடிவதில்லை. தனிமையில் பய உணர்வினால் பல நபர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். வாழ்வில் ஏற்கனவே நடந்த ஏதாவது ஒரு சோகமான சம்பவம் மீண்டும், மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருக்கும். அல்லது, நாளை வாழ்வில் ஏதாவது விபரீதமாக நடந்துவிடுமோ என்று பயம் இருக்கும்.

    இந்த பயத்தினால்தான் இதயத்துடிப்பு சரியாக துடிப்பதில் மாற்றம் ஏற்படுகின்றது. இதய வாழ்வில் ரத்தம் சரியாக செல்லாமல் தடை ஏற்படுகின்றது. இதய வலி ஏற்படுகின்றது. நுரையீரலின் செயல் திறனும் பாதிக்கப்படுகின்றது. நல்ல காற்றை உள் வாங்குவதில் பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால் சிறுகுடல் பாதிப்பு ஏற்படுகின்றது. ஜீரண மண்டலம் பாதிப்படைகின்றது. அதனால் பசி சரியாக எடுப்பதில்லை. பத்து விதமான வாயுக்களும் பய உணர்வினால் ஒழுங்கான விகிதத்தில் இருப்பதில்லை.

    இதிலிருந்து நாம் உணர வேண்டியது உடலில் ஏற்படும் நிறைய பிரச்சினைகளுக்கு மூல காரணமாய் இருப்பது மனதில் ஏற்படும் பயம். இதற்காக பல மருந்துகள் மாத்திரைகள் சாப்பிடுகின்றனர். ஆனால் இது மனம் சம்பந்தமானது. மனதை செம்மைப்படுத்த மருந்து முழுப்பலன் தராது. இதற்கு தீர்வு நம்மிடமே உள்ளது. அதுவே யோக முத்ரா சிகிச்சையாகும்.

    நமது ஆழ்மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அழிக்கவும், மீண்டும் வராமல், எழாமல் தடுக்கவும் முத்திரைகள் பயிலுங்கள். மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிலுங்கள் காலை / மாலை சாப்பிடுமுன் ஒவ்வொரு முத்திரையும் இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள்.

    முதல் முத்திரை - சின் முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல், ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற மூன்று விரல்களும் படத்தில் உள்ளதுபோல் தரையை நோக்கி இருக்கவும். அந்த விரல் நுனியில் சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

    பிராண முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் சுண்டு விரல், மோதிரவிரல் அதன் மத்தியில் கட்டை விரல் நுனியை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். அதிகம் மனோ பயம் உள்ளவர்கள் ஐந்து நிமிடங்கள் மூன்று முறை காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    சங்கு முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் வலது கை இடது கை விரல்களை கோர்த்து கட்டைவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் சேர்த்து முன்னால் வைக்கவும். படத்தை பார்க்கவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும். ஒரு மனம் மூச்சிலும், மற்றொரு மனம் விரலில் கொடுத்த அழுத்தத்திலும் லயிக்கட்டும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    பத்மாசனம்

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். இரு கால் களையும் நீட்டவும். வலது காலை மடித்து இ டது தொடையில் போடவும். இ டது காலை மடித்து வலது தொடையில் வைக்கவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்கவும். மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுக்கவும். மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து கவனிக்கவும். ஐந்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடங்கள் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். இவ்வாறு மூச்சை கவனிக்கும் பொழுது நமது எண்ணங்கள் சாந்தமாகும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும். அனைவராலும் முதலில் பத்மாசனத்தில் ஐந்து நிமிடங்கள் இருக்க முடியாது. எனவே முப்பது வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக ஒரு நிமிடமிருக்க முயற்சிக்கவும். தொடர்ந்து பயின்றால் ஐந்து நிமிடங்கள் இருக்க முடியும். பத்மாசனத்தில் இருக்கும் பொழுது எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நேர்முக எண்ணங்கள் வளரும்.

    மனோபயமும் மூச்சும்

    பொதுவாக பய உணர்வு இருக்கும் பொழுது உடலில் மூச்சோட்ட மண்டலம் சரியாக இயங்காது. பிராணன் உடல் உள் உறுப்புக்கள் அனைத்திற்கும் சரியாகக் கிடைக்காது. அதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆழ்ந்த மூச்சு எடுத்து விடவும். இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள் செய்யவும். அப்பொழுது பிராண சக்தி உடல் முழுவதும் நன்கு பரவும். மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் நன்கு இயங்கும். மன அமைதி கிடைக்கும்.

    மந்திரமும் மன அமைதியும் - ஓம்

    இந்த பிரபஞ்சமே “ஓம் “ என்ற அதிர்வலையில் இயங்குகின்றது. நமது உடலில் ஓம் என்ற ஒலி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. நமது புலன்களின் வழி பிராணன் வெளி செல்வதால், மன ஒருமைப்பாடு இல்லாததால் அதனை உணர முடியவில்லை. ஓம் என்ற ஒலியை நன்கு நீட்டி பத்து முறைகள் உச்சரித்தால் மனோ பயம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். இது அனாகத ஒலி என்று அழைக்கப்படுகின்றது. அதிக மனோபயமுள்ளவர்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் ஓம் என்ற மந்திரத்தை நன்கு நீட்டி உச்சரிக்கவும். பத்து முறைகள். யார் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் உங்கள் மத வழிபாடு தினமும் தவறாமல் செய்து வாருங்கள். அதில் மனோபயம் நீங்கும்.

    மணிப்பூரக சக்கரா தியானம்

    நிமிர்ந்து அமரவும். தரையில் விரிப்பு விரித்து அதில் காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் மேற்கு திசை நோக்கியும் அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
    பத்து முறைகள். பின் உங்களது மூச்சோட்டத்தை வயிற்று உள் பகுதியில் நிலை நிறுத்தவும். உங்களது மூச்சோட்டத்தை வயிற்று உள் பகுதியில் கூர்ந்து தியானிக்கவும். நல்ல பிராண சக்தி வயிற்று உள் உறுப்புகளில் கிடைப்பதாக எண்ணவும்.

    ஐந்து நிமிடங்கள் காலை / மாலை இவ்வாறு தியானிக்கவும்.பய உணர்வால் பிராண சக்தி உடல் முழுவதும் சரியாக செல்லாமல் இருக்கும். இந்த மணிப்பூரக சக்கரா தியானத்தால் பிராண ஆற்றல் உடல் முழுக்க நன்கு இயங்கும். மனோ பயம் நீங்கும். மன தைரியம் கிடைக்கும். நேர்முக எண்ணங்கள் வளரும். இதயத்துடிப்பு சீராகும். உடல் முழுக்க இந்தப் பகுதியில் சக்தி ஓட்டம் குறைவாக இருந் தாலும் மணிப்பூரக சக்கரா தியானம் தொடர்ந்து ஐந்து நிமிடம் தினம் செய்தாலே உடல் இயக்கம், மனோ இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். எனவே தினமும் இடைவிடாமல் காலை / மாலை இந்த தியானத்தை செய்யுங்கள்.

    தீப தியானம்

    தினமும் காலை / மாலையில் உங்கள் முன்பு ஒரு விளக்கு தீபம் ஏற்றி வையுங்கள். அந்த தீபத்தை ஒரு ஐந்து நிமிடங்கள் உற்று கவனிக்கவும். பின்பு கண்களை மூடி இரண்டு நிமிடங்கள் இருக்கவும். இதனை தினமும் செய்ய முடியாவிட்டாலும் வாரம் இரு முறைகள் பயிற்சி செய்யவும்.

    காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இதே போல் கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள். பின் இந்த உணவு எனக்கு ஆரோக்கியத்தையும், அமைதியையும் தரும் உணவாக அமையட்டும் என்று பிரார்த்தித்து விட்டு பின் சாப்பிடவும்.
    மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். நிச்சயமாக மனோபயம் நீங்கி, தைரியமாக, வளமாக வாழலாம்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440

    Next Story
    ×