search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    யோகா
    X
    யோகா

    ஊரடங்கில் உடலை பாதுகாக்கும் யோகா

    இந்த ஊரடங்கில் நாம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் கலையான யோகப்பயிற்சிகள் செய்து உடலையும் மனதையும் பக்குவப்படுத்தினால், ஊரடங்கு முடிந்தவுடன் ஊருக்குள் திடமாக வலம் வரலாம்.
    இன்று நமது நாட்டில் தொற்றுக் கிருமியின் பரவல் அதிகமாக உள்ளதால், நாட்டு நலன் கருதி ஊரடங்கு அமலில் உள்ளது.  தனிமைப்படுத்தியுள்ளோம்,  இந்த தனிமை நிறைய நபர்களுக்கு சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடில்லாமல் மன அழுத்தத்தை தருவதாக உள்ளது.  இந்த ஊரடங்கில் நாம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் கலையான யோகப்பயிற்சிகள் செய்து உடலையும் மனதையும் பக்குவப்படுத்தினால், ஊரடங்கு முடிந்தவுடன் ஊருக்குள் திடமாக வலம் வரலாம்.

    நுரையீரலை வலுப்படுத்தும் முறை

    குடும்பத்துடன் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் தினமும் கீழ்கண்ட எளிய யோகப்பயிற்சிகளை  செய்யுங்கள்.  சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கலாம். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.  காலையில் 5 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி, விரிப்பு விரித்து குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் கிழக்கு நோக்கி அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கைகள் சின் முத்திரையில் இருக்கவும்.  கண்களை மூடி இரு மூக்கு துவாரத்தின் வழியாக மெதுவாக, நிதானமாக மூச்சை இழுக்கவும்,  உடன் மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  இது போல் பத்து முறைகள் செய்யவும்.  பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் ஒரு ஐந்து நிமிடம் கூர்ந்து கவனிக்கவும். இது நுரையீரலுக்கு நல்ல சக்தியை தரும்.  உடல் முழுக்க பிராண ஆற்றல் நன்கு இயங்கும்.

    உட்கட்டாசனம்:

    எழுந்து நில்லுங்கள். இருகால்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.  கைகளை முன்னாள் ஒரு அடி இடைவெளியில் நீட்டவும்.  மெதுவாக ஒரு நாற்காலியில் அமர்வது போல் படத்தில் உள்ளது போல் நிற்கவும். பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும்.  பின் நேராக நிமிர்ந்து நிற்கவும்.  இதே போல் மூன்று முறைகள் பத்து வினாடிகள் செய்யவும்.

    பலன்கள்:

    நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.  மூச்சு திணறல் வராது, மூட்டுவலி வராது, மூட்டுக்கள் பலம் பெறும்.

    புஜங்காசனம்:  

    விரிப்பில் குப்புறபடுக்கவும்.  இரு கால்களும் சேர்ந்திருக்கட்டும்.  இரு கைகளையும் இதயம் பக்கத்தில் கைவிரல் தரையில் படும்படி இருக்கவும்.  மெதுவாக மூச்சை இழுத்து, முதுகை, தலையை பின்னால் வளைத்து இடுப்பிற்கு மேல் உயர்த்தவும்.  படத்தில் உள்ளபடி ஒரு பத்து வினாடிகள் மூச்சடக்கி இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரைக்கு வரவும்.  இதே போல் மூன்று முறைகள் செய்யவும்.

    முக்கிய குறிப்பு:

    முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய பலவீனம் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்ய வேண்டாம்.
    பலன்கள்:

    நுரையீரல் நன்கு இயங்கும்.  கழுத்துவலி, முதுகு வலி வராது.  ஆஸ்துமா, சைனஸ் நீங்கும். நீரிழிவு வராது, மன அமைதி கிடைக்கும், உடல் எடை அதிகமாகாது. இடுப்பு வலி வராது, மூட்டுக்கள், தோள்பட்டை எலும்புகள் வலுப்பெறும்.

    பத்மாசனம்:

    தரையில் விரிப்பு விரித்து அமரவும்.  ஒவ்வொரு காலாக மடித்து தொடைமேல் படத்தில் உள்ளபடி போடவும்.  இரு கைகளும் சின் முத்திரையில் வைக்கவும்.  கண்களை மூடி சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    பலன்கள்:

    மன அழுத்தம் நீங்கும்.  ரத்த அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும்.  நேர்முகமான எண்ணங்கள் வளரும்.  இதயம் பாதுகாக்கப்படும்.  இதய வால்வுகள் நன்கு இயங்கும். மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் நன்றாக இயங்கும்.  சுறுசுறுப்பாகவும்.  உற்சாகமாகவும் இருக்கலாம்.

    பசியறிந்து பசிக்கும் பொழுது அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடமிருக்க வேண்டும்.  இவ்வாறு சாப்பிடுங்கள்.  பகலில் தூங்க வேண்டாம்.  இரவு 9.30  மணிக்குள் படுத்துவிடுங்கள்.  காலை 4 மணிக்கு எழுந்து இந்த யோகப் பயிற்சியை செய்யுங்கள்.  மாலையிலும் பயிற்சி செய்யுங்கள், நல்ல அறிவு சார்ந்த புத்தகங்களை படியுங்கள். உடல், மனதை உறுதிப்படுத்தி ஊரடங்கு முடிந்தவுடன் உற்சாகமாக நோய் எதிர்ப்பாற்றல் பெற்று வளமாக வாழுங்கள்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி T M.A.(Yoga)
    6369940440
    Next Story
    ×