search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    யோகா
    X
    யோகா

    உடலை, மனதை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் யோகா

    வீடு, தோட்டம், பொது இடம், பூங்கா என விருப்பமான இடங்களில் யோகா பயிற்சி மேற்கொள்ளலாம். தினமும் யோகாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்ப்போம்.
    உடலை ஆரோக்கியமாகவும், மனதை அமைதியாகவும் வைத்திருப்பதற்கு யோகா சிறந்த வழியாகும். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவும். கவனிக்கும் திறனை மேம்படுத்தும். சுய நம்பிக்கையை அதிகரிக்கச்செய்யும். யோகாசனம் செய்வதற்கு பிரத்யேக இடவசதி தேவையில்லை. வீடு, தோட்டம், பொது இடம், பூங்கா என விருப்பமான இடங்களில் யோகா பயிற்சி மேற்கொள்ளலாம். தினமும் யோகாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்ப்போம்.

    1. மன அழுத்தத்தை நீக்கும்: யோகா, தியானம் மற்றும் குறிப்பிட்ட சுவாச பயிற்சிகளை மேற்கொள்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மனச்சோர்வு மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சினைகளை குறைக்க யோகா உதவியாக இருக்கும். மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோனின் அளவை குறைக்கும். தினமும் தவறாமல் யோகா பயிற்சி செய்தால், மன அழுத்தத்தில் இருந்து மீண்டுவிடலாம்.

    2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: யோகாசனத்தில் மேற்கொள்ளப்படும் பயிற்சி நிலைகள் நுரையீரல், இதயம் மற்றும் செரிமான அமைப்பைத் தூண்டி, நோய் எதிர்ப்பு மண்டல ஆரோக்கியத்தையும், உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. போதுமான அளவு சாப்பிடவும் ஊக்குவிப்பதால் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்திவிடும்.

    3. அழற்சியை போக்கும்: நாள்பட்ட அழற்சி ஏற்படுவது நீரிழிவு, புற்றுநோய், இதய நோய்கள் போன்ற கடுமையான நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். தினமும் யோகாசனம் செய்வது அழற்சியை தடுக்க உதவும்.

    4. நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்: உடல் தசைகள் நெகிழ்வுத்தன்மை அடைவதற்கு யோகாசனம் உதவும். தினமும் யோகா பயிற்சி மேற்கொண்டால் கை, கால்களை வளைப்பது, தொடுவது, நீட்டுவது போன்ற செயல்முறைகள் எளிதாகிவிடும். தசைகளும் வலுப்படும். அடிக்கடி தசைவலி ஏற்படுவதும் குறையும்.

    5. முதுகெலும்பை பலப்படுத்தும்: உட்கார்ந்திருந்து வேலைபார்ப்பவர்கள் சரியான நிலையில் அமராவிட்டால் முதுகெலும்பு பாதிப்புக்குள்ளாகும். உடலும் சோர்வுக்குள்ளாகும். யோகாசனம் மேற்கொண்டு வருவது எலும்புகளின் நலனை மேம்படுத்தி, முதுகெலும்பில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்க உதவும். கழுத்து, முதுகில் ஏற்படும் வலியை போக்குவதற்கு பல்வேறு யோகாசனங்கள் இருக்கின்றன. அவற்றை மேற்கொள்வது பலனளிக்கும். உடல் எடையைக் குறைப்பதற்கும் யோகா சிறந்த வழியாகும். உடல் எடை அளவை சீராக பராமரிக்கவும் உதவும்.

    6. இதய ஆரோக்கியம் காக்கும்: யோகாசனம் மேற்கொள்ளும்போது இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும். அதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் குறையும். ரத்த அழுத்தத்தையும் சீராக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்க வழிவகை செய்யும்.

    தினமும் யோகா பயிற்சி செய்தால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படலாம். யோகா பயிற்சி செய்யும் போது அதிக ஆக்ஸிஜனை உள்ளிழுப்பதால் ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். சோர்வின்றி புத்துணர்வுடன் செயல்படலாம்.
    Next Story
    ×