search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பச்சிளம் குழந்தைகள் அடிக்கடி வாயில் கை வைப்பதற்கான காரணங்களும்...  தடுக்கும் முறைகளும்..
    X

    பச்சிளம் குழந்தைகள் அடிக்கடி வாயில் கை வைப்பதற்கான காரணங்களும்... தடுக்கும் முறைகளும்..

    • குழந்தையின் தேவையை அறிந்து தாய் உணவளிக்க வேண்டும்
    • குழந்தைகள் என்பவர்கள் புதிதாய் பூத்த மலர்கள்

    பெரும்பாலான ஏன் அனைத்துக் குழந்தைகளிடமும் பொதுவாக காணப்படும் ஒரு பழக்கம் வாயில் கையை வைப்பது; எப்பொழுது பார்த்தாலும் எந்நேரம் ஆகினும் வாயில் கையை வைத்துக் கொண்டே திரிந்து கொண்டு இருப்பர். குழந்தைகள் வாயில் கை வைப்பதற்கான காரணங்களும் அதை தடுக்கும் முறைகள் பற்றியும் படித்து அறியலாம்.

    அனைத்து மாற்றங்களும், புதிய பொருட்களும் குழந்தையின் மனதில் பய உணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த பய உணர்வை போக்க குழந்தைகள் தங்கள் கையை வாயில் வைத்துக் கொள்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு எது கை எது வாய் என்று கூட தெரியாது; ஏதோ பயத்தில் தானாக இது மாதிரி வைத்துக் கொள்கின்றன.

    பய உணர்வை போன்று குழந்தைகளுக்கு பசி என்ற உணர்வு ஏற்பட்டாலும் குழந்தைகள் தங்கள் கையை வாயில் வைத்துக் கொள்வர்; குழந்தைகளின் அழுகை, வயிற்றின் அளவு, இம்மாதிரி கையை வாயில் வைத்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் குழந்தையின் தேவையை அறிந்து தாய் உணவளிக்க வேண்டும்; பசி நீங்கினால், குழந்தைகள் கையை வாயில் வைக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும்.

    குழந்தைகள் தூங்கும் பொழுது கையை அடிக்கடி வாயில் வைத்துக் கொள்வர்; ஏனெனில் அவர்களுக்கு தூங்கும் பொழுது ஒருவித பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும்; நீங்கள் எத்தனை முறை கையை எடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் குழந்தைகள் வாயில் கையை வைத்துக் கொண்டு இருப்பதற்கு அவர்கள் மனதில் உள்ள பயம், பசி போன்ற உணர்ச்சிகளே!

    குழந்தைகளை அதிக நேரம் தனித்து விட்டாலோ, அதிக நேரம் பிரிந்து வேறு எங்கும் சென்று விட்டாலோ குழந்தை பயம், பதட்டம் மற்றும் அன்னையை காணவில்லை என்ற ஏக்கம், குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படல் போன்ற காரணங்களால் கையை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும். இந்த உணர்வு தனித்து விடப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடியதே! ஏன் இத்தனை வளர்ந்த நாமே தனித்து விடப்பட்டால் நகத்தை கடிப்பது, உதடை பிய்ப்பது என எதையாவது செய்து கொண்டிருப்போம்.

    குழந்தைகளுக்கு பல் முளைக்கும் சமயத்தில் அதையாவது கடித்துக் கொண்டே இருக்க வேண்டும்; மெல்ல வேண்டும் போன்று இருக்கும்; அதனால் அந்த சமயத்தில் குழந்தைகள் தங்கள் கையை முழுவதுமாக வாய்க்குள் விட்டு கொள்கின்றனர். தங்களுக்கு ஏற்படும் உணர்வுகளின் அர்த்தம் மற்றும் என்ன செய்வது என்று அறியாமல் குழந்தைகள் குழந்தைத் தனமாக செய்யும் விஷயம் தான். இதற்கு குழந்தைகளை அடித்து திட்டாமல் அன்பு காட்டி அவர்களின் பய மற்றும் மற்ற உணர்வுகளுக்கு நிவாரணம் அளிக்க முயலுங்கள்!

    குழந்தைகளின் இந்த கையை வாயில் வைக்கும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று பார்க்கலாம்.

    குழந்தைகள் கை சூப்புவதை தவிர்க்க அவர்தம் கையில் ஏதேனும் பொம்மையை அளித்து, அவர்களை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும்; தூங்கும் பொழுதும் குழந்தையின் கையில் பிடித்துக் கொள்ள பொம்மை அல்லது உங்களை கட்டி அணைத்துக் கொள்ளுமாறு குழந்தையை தூங்க வைக்கலாம். பல் முளைத்தலின் பொழுது குழந்தைக்கு அதற்கென விற்கப்படும் பொம்மைகளை குழந்தையின் கையில் அளிப்பது, பழங்களை அளித்து கடிக்க செய்வது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    குழந்தைகள் என்பவர்கள் புதிதாய் பூத்த மலர்கள்; ஒரு செடியை நட்டு வைத்து அது நன்கு வளர்ந்து பூத்துக் குலுங்க எத்தனை கவனம், பராமரிப்பு தேவையோ அதைவிட பல நூறு மடங்கு கவனத்தை உங்கள் குழந்தையை வளர்த்து பெரிய ஆளாக்குவதில் இருக்க வேண்டும். குழந்தைகள் பிறந்த தருணம் முதல் அவர்களின் செய்கைகளுக்கு அர்த்தம் அறிந்து செயல்படுங்கள்!

    Next Story
    ×