
குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் அவர்கள் விரும்பும் துரித உணவுகளான பிரைட் ரைஸ், நூடுல்ஸ், புலாவ் ரைஸ் மற்றும் நாக்கில் எச்சில் ஊறும் சுவையான பலவிதமான உணவுகளை வாங்கித் தருகிறார்கள்.
அதை உட்கொள்ளும் குழந்தைகள் சிறுவயது முதலே அதற்கு அடிமையாகி வளர வளர அந்த உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கம் ஆக்கிக் கொள்கிறார்கள். இந்த துரித உணவுகளில், எம்.எஸ்.ஜி எனப்படும் மோனோ சோடியம் குளூட்டாமேட் எனப்படும் உப்பானது அதிகளவில் சுவைக்காக சேர்க்கப் படுகிறது. இது வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
இதை சாப்பிடும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்று வலி, தலைவலி, வாந்தி மற்றும் நரம்புக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்தத் துரித உணவுகளை இரவு நேரங்களில் குழந்தைகள் உட்கொள்ளும் போது அது விஷ உணவாக (புட் பாய்சன்) ஆக மாறி உடலில் அதிகளவு கேடு விளைவிக்கும். இது போன்ற துரித உணவுகள் குழந்தைகள் விரும்பினால் பெற்றோர்கள் மாதத்துக்கு ஒரு முறை பகல் வேலையில் கொடுக்கலாம்.
ஆனால் அதுவே தவறு என்பது தான் எனது கருத்து. மேலும் தற்போது கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில், சூலூர் வட்டார பகுதிகளில் இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் உணவுகளை தயாரிக்கும் ஓட்டல்கள், தள்ளுவண்டி பாஸ்ட் புட் கடைகள் மற்றும் இதர உணவு கடைகளில் அவ்வப்போது சோதனைகள் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தொடர்ந்து செயல்படும் கடைகளுக்கு வரும் காலத்தில் சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிலையில், பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்கவே கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.