search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் ஊக்கசக்தியை அதிகரிக்கும் துள்ளு பந்து விளையாட்டு
    X
    குழந்தைகளின் ஊக்கசக்தியை அதிகரிக்கும் துள்ளு பந்து விளையாட்டு

    குழந்தைகளின் ஊக்கசக்தியை அதிகரிக்கும் துள்ளு பந்து விளையாட்டு

    துள்ளுபந்துகள் மற்ற பந்துகளைவிட அதிக உந்துசக்தி கொண்டவை என்பதால் அவை மற்ற பந்துகளைவிட அதிகமாகவே குழந்தைகளுக்கு ஊக்கசக்தியை அதிகரித்து திறமைகளையும் வளர்க்கிறது என்று நம்பலாம்.
    குழந்தைகளே, பந்துகளைக் கொண்டு விளையாடும் எல்லா விளையாட்டுகளும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அல்லவா? கிரிக்கெட் பந்து, கால்பந்து, கைப்பந்து, விளையாட்டுப் பந்து என எத்தனையோ பந்துகள் இருந்தாலும் துடிப்பான குழந்தைகள் விரும்புவது துள்ளிக் குதிக்கும் ‘துள்ளு பந்து’களைத்தான். இதை ‘ஜம்பிங் பால்’ என்றும் ‘பவுன்சிங் பால்’ என்றும் அழைப்பது உண்டு. வண்ண மயமாகவும், வினோத வடிவங்களுடனும் துள்ளிக் குதிக்கும் வேகத்தில் இந்தப் பந்துகள் சிறுவர்களை மட்டுமல்லாமல் எல்லோரையும் கவர்ந்துவிடும். துள்ளுபந்துகளைப் பற்றிய சங்கதிகளை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

    துள்ளுபந்துகள் (பவுன்சிங் பால்) மற்ற பந்துகளைப் போல தோல் மற்றும் ரப்பர் மூலம் இடையில் காற்று நிரப்பி உருவாக்கப்படுவதில்லை. இவை நவீன ரக பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படுகிறது. இவற்றில் காற்று நிரப்பப்படாமலே இவை துள்ளிக்குதிக்கும் திறன் கொண்டவை. ஏனெனில் இவை அந்த அளவு மீள்தன்மை கொண்ட பிளாஸ்டிக் ஆகும். இவற்றின் பெயர் செக்ட்ரான் எனப்படும். வேறுசில பிளாஸ்டிக் கலவையிலும் இந்த வகை பந்துகள் தயாராகின்றன.

    துள்ளுபந்துகளை உருவாக்கிய பெருமைக்குரியவர் நார்மன் ஸ்டிங்லி என்பவர் ஆவார். வாயில் போட்டு மெல்லும் சூயிங்கங்களை பந்துபோல உருட்டி விளையாடும் வழக்கம் பொதுமக்களிடம் இருந்தது. இதன் தாக்கத்தில்தான் துள்ளுபந்துகள் பிறந்ததாக கூறப்படுவது உண்டு.

    துள்ளுபந்துகளுக்கான பிளாஸ்டிக், மேற்கிந்திய ரப்பர் தாவரங்களில், மங்கோலிய பிளம் மரத்தை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. ஆனால் அதில் உண்மையில்லை. கோல்ப் பந்துகளின் உள்ளடாக இருக்கும் பாலிபுடாடையின் போன்ற மீள்தன்மை கொண்ட பிளாஸ்டிக் வகைதான் செக்ட்ரான் ஆகும்.

    துள்ளுபந்துகள் இவ்வளவு புத்துணர்ச்சியுடன் துள்ளிக்குதிக்க காரணம் என்ன தெரியுமா? அதன் மீள்தன்மை கொண்ட பிளாஸ்டிக் மட்டுமல்ல அதனுள் ஒரு சதுர அங்குலத்தில் 1200 பி.எஸ்.ஐ. அளவு அழுத்தம் இருப்பதே அவை ஆக்ரோஷத்துடன் துள்ளிக்குதிக்கக் காரணமாகும்.

    துள்ளுபந்துகளை ஒருமுறை அழுத்தம் கொடுத்து குதிக்க வைத்தால் அது எத்தனை முறை குதிக்கும் தெரியுமா? சுமார் 12 முதல் 15 தடவை அவை சிறுசிறு துள்ளல்களை வெளிப்படுத்தும். ஏனெனில் அவை ஒவ்வொரு முறையும் 8 சதவீத அளவுக்கு ஆற்றலை இழந்து கொண்டே வரும். முதல் முறை ஒரு துள்ளுபந்து ஒரு மீட்டர் உயரம் எழும்பினால் அடுத்த முறை அது 92 சென்டிமீட்டர் உயரம் எழும்பும், அடுத்தமுறை மேலும் அதன் எழும்பும் வேகம் குறைந்து கொண்டே வந்து சுமார் 15 முறையில் அது தரையில் உருள ஆரம்பித்துவிடும்.

    துள்ளுபந்துகள் இன்று 5 ரூபாய் மலிவு விலையில் கூட கிடைக்கிறது. ஆனால் அவை அறிமுகமான காலகட்டத்தில் சுமார் 100 டாலர் விலை வரை விற்றது.

    துள்ளுபந்துகளைக் கொண்டு வேடிக்கையாக விளையாடலாமே தவிர கிரிக்கெட் போல விளையாடுவது சிரமமாக இருக்கும். ஏனெனில் இந்த பந்தைக் கொண்டு கிரிக்கெட் விளையாடினால் பவுன்சர்கள் பேட்ஸ்மேன்களால் தொட முடியாத அளவுக்கு மிக உயரத்திற்கு சென்றுவிடும். அதாவது சாதாரணமாக பந்துவீசுபவர்கூட பவுன்சிங் பால் கொண்டு பந்துவீசினால் சுமார் பனை அளவு உயரத்திற்கு பந்து எழும்பி ஓடிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஆச்சரியமாக துள்ளிக் குதிப்பதால்தானே துள்ளுபந்துகள் குழந்தைகளை மகிழ்விப்பதுடன், உங்களை ஈர்த்து வைத்துள்ளன.

    துள்ளுபந்துகளின் வடிவமைப்பும் குழந்தைகளை ஈர்க்க முக்கிய காரணமாகும். ஒளிஊடுருவும் திறன், பளிச்சிடும் வண்ணங்கள், மற்றும் வண்ணங்களின் கூட்டுக்கலவையில் தோன்றும் வினோத வடிவங்கள், துளி, துகள் போன்ற உருவங்களின் உள்ளடு, நியான் ஒளிவீச்சு ஆகியவை துள்ளுபந்துகளை ஈர்ப்புடையதாக வைத்துள்ளன.

    எல்லா வயது குழந்தைகளையும் துள்ளுபந்துகள் மகிழ்விக்கும் என்றாலும், 3 வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் துள்ளுபந்துகளை விளையாட கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அந்த வயதுக் குழந்தைகள் எல்லாப் பொருட்களையும் வாயில் வைத்து விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். துள்ளுபந்துகள் ஈர்ப்புடைய வண்ணங்களில் இருப்பதும், மென்மையான திறனுடன் இருப்பதுவும் குழந்தைகளை வாயில் வைத்து சுவைப்பதையும், கடிக்கும் ஆர்வத்தையும் தூண்டலாம். ஆனால் அது ஆபத்தானது என்பதால் துள்ளுபந்துகளை வாயில் வைத்து விளையாடக்கூடாது.

    1971-ல் துள்ளுபந்தில் இசையை இணைத்து வெளியிட்டார்கள். அதாவது அந்த பந்தின் குறிப்பிட்ட பகுதியை தேய்க்கும்போது ஒருவகை இசையை கேட்க முடிந்தது. இந்த துள்ளுபந்துகளுக்கு ‘சூப்பர் பால்’ என்ற பெயரும் உண்டு. இந்த பெயருடைய நிறுவனம்தான் அதிக அளவில் துள்ளுபந்துகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தது.

    குழந்தைகள் பந்துகளுடன் விளையாடுவதால் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். பந்துகளின் பின்னால் ஓடுவதால் அவர்களின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. வண்ணம் அறிதல், வடிவம் அறிதல், இணைந்து விளையாடும் திறன் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் வளர்கின்றன. துள்ளுபந்துகள் மற்ற பந்துகளைவிட அதிக உந்துசக்தி கொண்டவை என்பதால் அவை மற்ற பந்துகளைவிட அதிகமாகவே குழந்தைகளுக்கு ஊக்கசக்தியை அதிகரித்து திறமைகளையும் வளர்க்கிறது என்று நம்பலாம். துள்ளுபந்துகளுடன் துள்ளி விளையாடி மகிழ்வோம்!
    Next Story
    ×