search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையின் கண்களுக்கு மை தீட்டலாமா?
    X

    குழந்தையின் கண்களுக்கு மை தீட்டலாமா?

    குழந்தைக்கு வளைவாக மை தடவினால் புருவத்தில் அதே போல வளைவாக முடி வளரும் என்று பெற்றோர்கள் நம்புகின்றனர்.
    நிச்சயம் கூடாது! வளைவாக மை தடவினால் புருவத்தில் அதே போல வளைவாக முடி வளரும் என்று பெற்றோர்கள் நம்புகின்றனர். இது தவறு. முடியின் காம்பு, மற்றும் தோலின் எண்னெய் சுரப்பியின் (Pilo sebaceous unit) துவாரங்கள் மை தடவினால் அடைபடும். அதனால் கிருமித்தொற்று ஏற்பட ஏதுவாகிறது. முடி வளருவதும் குறையும். தோலில் அழற்சி ஏற்படுவதால் முளைத்த முடியானது கொட்டவும் வாய்ப்பு உண்டு.

    காரீயம் கலந்த மை தோலுக்கு பொருந்தாது என்றால் தோலை விட மென்மையுள்ள கண்களுக்கு அது எப்படி பொருந்தும்? மை தடவும் போது தாய் தன் நகங்களால் குழந்தையின் கண்களில் சிறு காயங்களை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. நுண்ணிய நோய்க் கிருமிகள் கண்களுக்கு உள்ளே செல்லலாம். மூக்கிற்கு அருகில் இருக்கும் பகுதியில் கண்களின் கண்ணீர்ப் பை, சுரப்பிகள், நாளங்கள் உள்ளன. இவை அடைபட்டு அழற்சி ஏற்படலாம். காரீயம் கலந்த மை நெடுநாட்கள் தோலில் தங்கி மெதுவாக அது உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தில் கலந்து நச்சுத் தன்மை (chronic lead poisoning) ஏற்படுத்தக் கூடும்.

    வேதிப் பொருட்கள் கலக்காமல் வீட்டிலேயே கண் மை தயாரிக்கலாம். அடி கனமான பித்தளை அல்லது வெங்கலம் அல்லது சொம்பு அல்லது பானை ஒன்றை எடுத்துக் கொள்ளவும். சந்தனக் கல்லில் சந்தனக் கட்டையால் அரைத்துத் தயாரிக்கப்பட்ட சந்தனத்தை பாத்திரத்தின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக லேசாக அப்பிவிடவும்.

    செங்கற்களை அடுப்பு மாதிரி அமைக்கவும். கெட்டியான நூல் அல்லது பஞ்சுத் திரிபோட்டு நல்லெண்ணை அல்லது விளக்கெண்ணை ஊற்றி ஒரு அகண்ட விளக்கை ஏற்றி வைக்கவும். 2-3 நாட்கள் நிதானமாக கொழுந்துவிட்டு தீபம் எரிய வேண்டும். அதற்குத் தகுந்தவாறு விளக்கு தயார் படுத்திக் கொள்ளவும்.

    சந்தனம் அப்பிய பாத்திரத்தில் முக்கால் பாகம் சாதாரண தண்ணீர் நிரப்பி இந்த செங்கல் அடுப்பில் வைக்கவும். தீபம் அடுப்பு போல் பயன்படும். 2-3 நாட்கள் எண்ணெய் தீராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எரியும் தீ பட்டு சந்தனம் நன்கு கறுத்து உதிர ஆரம்பிக்கும்.

    அப்போது முழுவதும் கரிந்து போன அந்த சந்தனத்தை சுத்தமாக சேகரித்து கலப்படமில்லாத விளக்கெண்ணை சிறிது சேர்த்து சுத்தமான பாத்திரத்தில் சுத்தமான விரல்களால் கை பதத்திற்கு இழைத்து வைத்துக் கொள்ளலாம். இதில் அதிக வேதிப் பொருட்கள் இல்லை. நெற்றி பொட்டுக்கும் பயன்படுத்தலாம். சுத்தமான விரல்களால் நகம் படாமல் கொஞ்சமாக கண்களுக்குத் தீட்டலாம்.
    Next Story
    ×