என் மலர்tooltip icon

    வழிபாடு

    விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி தரும் ஐதீக திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    விபசித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் காட்சி தரும் ஐதீக திருவிழா நடந்த போது எடுத்த படம்.


    விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி தரும் ஐதீக திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    • ஞாயிற்றுக்கிழமை பஞ்ச மூர்த்திகள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
    • 7-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது.

    6-ம் நாள் விழாவான நேற்று, விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி தரும் ஐதீக திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரிஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள, விபசித்து முனிவர் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கும், விபசித்து முனிவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனைகள் காட்ட திரை விலக்கப்பட்டு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் நேர் எதிரே உற்சவ மண்டபத்தில் அமர்ந்திருந்த விபசித்து முனிவருக்கு காட்சி தந்தனர்.

    அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் விபசித்து முனிவருக்கு காட்சி அளித்தபடி சன்னதி வீதி கோபுர வாசல் வழியாக வெளியே வந்தனர். அப்போது விபசித்து முனிவருக்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் பக்தர்கள் மலர் தூவி தரிசனம் செய்தனர். பின்னர் விபசித்து முனிவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.

    இதில் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) பஞ்ச மூர்த்திகள் தேரோட்ட நிகழ்ச்சியும், 6-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 7-ந் தேதி தெப்ப உற்சவமும், 8-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×