என் மலர்
வழிபாடு

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் தீமிதி திருவிழா
- பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தினமும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 29-ந் தேதி விநாயகர் சித்தி, புத்தி திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று உப்பூர் கிருஷ்ணன் மண்டகபடியார் நிகழ்ச்சியில் விநாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காலை 9 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி விநாயகர் வெள்ளி ரதத்தில் உப்பூர் கடற்கரைக்கு எழுந்தருளினார். பின்னர் கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் அங்கிருந்து பக்தர்கள் புடைசூழ கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பகல் 12 மணிக்கு ராமநாதபுரம் தேவஸ்தானம் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு சேதுபதி மகன் நாகேந்திரன் சேதுபதி, தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. வெட்டுக்குளம் வாசுதேவன் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் விநாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரவு 10 மணிக்கு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.