search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறிய தேர்பவனி
    X

    வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் சிறிய தேர்பவனி நடந்த போது எடுத்த படம். (உள்படம்: மாதா சொரூபம்).

    வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறிய தேர்பவனி

    • திருவிழா வருகிற 8-ந்தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் மிக முக்கியமான ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

    இதனால் இந்த பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கோவா, மும்பை, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாதாவை பயபக்தியுடன் வணங்கி செல்கின்றனர்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழா வருகிற 8-ந்தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் குவிந்துள்ளனர். இன்னும் பல பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(புதன்கிழமை) நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்று வருகிறது.

    மேலும், விழாவையொட்டி மாதாவின் சொரூபம் தாங்கிய சிறிய தேர்பவனி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று இரவு 8 மணிக்கு மாதாவின் சிறிய தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனிக்கு முன்னதாக மிக்கேல் ஆண்டவர், புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சூசையப்பர் தேர்களும் அதனைத் தொடர்ந்து ஆரோக்கிய மாதாவின் தேரும் புறப்பட்டு சென்றன.

    தேர்பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக சென்று பின்னர் ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மரியே வாழ்க, மரியே வாழ்க என்று கோஷமிட்டவாறு சென்றனர்.

    Next Story
    ×