search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வேளாங்கண்ணி உத்திரியமாதா ஆலய தேர்பவனி: திரளானோர் பங்கேற்பு
    X

    தேர்பவனி நடந்ததையும், அதில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.

    வேளாங்கண்ணி உத்திரியமாதா ஆலய தேர்பவனி: திரளானோர் பங்கேற்பு

    • புனித உத்திரிய மாதா தேரினை கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.
    • வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த ஆலயமானது கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் வங்கக் கடலோரம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தேரை புனிதம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து பேராலயத்தில் இருந்து புனித உத்திரிய மாதா தேரினை மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.

    தேரானது வேளாங்கண்ணி கடற்கரைசாலை, ஆரியநாட்டு தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக பவனி வந்தது. அப்போது சாலையின் இருபுறமும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் புனித உத்திரியமாதா, செபஸ்தியார், மிக்கேல் ஆண்டவர் ஆகிய தேர்கள் மீது மலர்களை தூவி தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

    தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர். வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா கோவில் ஆண்டு திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொங்கனி மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    தேர்பவனியில் உதவிபங்கு தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள் சகோதரர்கள், சகோதரிகள் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×