search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்
    X

    பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து வந்த காட்சி.

    திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

    • பரிவட்டம் கட்டப்பட்டு, கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டது.
    • கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவையொட்டி ஆந்திர மாநில அரசு சார்பில் தாயாருக்கு பட்டு வஸ்திரம், மங்கல பொருட்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரசு சார்பாக துணை முதல்-மந்திரி நாராயணசாமி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க பத்மாவதி தாயார் கோவிலுக்கு வந்தார். கோவிலுக்கு வந்த துணை முதல்-மந்திரியை தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைபடி வரவேற்றனர்.

    கோவில் வாசலில் துணை முதல்-மந்திரியின் தலையில் பரிவட்டம் கட்டப்பட்டு, கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. ஒரு வெள்ளித்தட்டில் பட்டு வஸ்திரம், மங்கல பொருட்களை வைத்து துணை முதல்-மந்திரியின் தலைமீது வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து மேளதாளம் மற்றும் மங்கல இசை முழங்க ஊர்வலமாகக் கோவிலுக்குச் சென்று மூலவர் பத்மாவதி தாயாரிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து, அம்பாளை தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவிலில் இருந்து வெளியே வந்ததும், துணை முதல்-மந்திரி நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பத்மாவதி தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தது தனது கடந்த பிறவிக்குக் கிடைத்த புண்ணியமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவையொட்டி பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய திருச்சானூருக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் பசுமையாக இருக்கவும், மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டியும் தாயாரிடம் வேண்டி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×