search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 26-ந்தேதி வருஷாபிஷேகம்
    X

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 26-ந்தேதி வருஷாபிஷேகம்

    • கோவிலில் ஜெனரேட்டர் அமைக்கப்படவில்லை.
    • மின்தடை ஏற்படும்போது கோவில் இருளில் மூழ்குகிறது.

    திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி 418 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அதை கணக்கில் கொண்டு ஆனி மாத உத்திரம் நட்சத்திர நாளான வருகிற 26-ந்தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்றைய தினம் அதிகாலை கோவில் நடை திறப்பு, நிர்மால்ய தரிசனம், சாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதிஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து ஆதிகேசவபெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ணசாமி, அய்யப்பசாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவகலச அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, மதியம் அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. கும்பாபிஷேகத்தின் போது ரூ.17 லட்சத்தில் வெளிப்புறத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. ஆனால், கோவிலில் ஜெனரேட்டர் அமைக்கப்படவில்லை. இதனால் திடீரென மின்தடை ஏற்படும்போது கோவில் இருளில் மூழ்குகிறது. கோவிலில் பூஜைகளின்போது தவில், நாதஸ்வரம் இசைக்காமல் நடைபெறுவது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

    எனவே தவில், நாதஸ்வரக்கலைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும், 25-க்கும் மேற்பட்ட பூசாரிகள் வேலை பார்த்த இடத்தில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் பக்தர்கள் வெகுநேரம் வழிபாட்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கருவறையை சுற்றி மியூரல் ஓவியங்கள் ரூ.75 லட்சத்தில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் அரைகுறையாக நடைபெற்று கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆதிகேசவப்பெருமாளின் மூலவர் விக்கிரகத்தின் மீது அணிவிக்க புதியதாக தங்க அங்கி செய்து சார்த்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் வருஷாபிஷேகம் நடைபெறுதற்கு முன்பு கிடப்பில் போடப்பட்ட புனரமைப்பு பணிகளை முழமையாக முடித்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×