search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தமிழ் புத்தாண்டையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் விஷூ கனி காணும் நிகழ்ச்சி
    X
    சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவிலில் விஷூ கனி காணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் புத்தாண்டையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் விஷூ கனி காணும் நிகழ்ச்சி

    • தமிழ் புத்தாண்டு சுபகிருது ஆண்டு இன்று பிறந்துள்ளது.
    • பக்தர்களுக்கு காய், கனிகள் கை நீட்டம் வழங்கப்பட்டது.

    தமிழ் புத்தாண்டு சுபகிருது ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் இன்று விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் காய், கனிகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

    கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தனர். பக்தர்களுக்கு காய், கனிகள் கை நீட்டம் வழங்கப்பட்டது.

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை கனி காணும் நிகழ்ச்சியையொட்டி பல்வேறு விதமான காய்கறிகள், இளநீர்கள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர். சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமிபதியில் காலையில் நடை திறக்கப்பட்டு பணிவிடைகள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து வாகன பவனி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது. வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலிலும் காய்கறிகள் பெருமாளுக்கு படைத்து வைக்கப்பட்டது. பெருமாள் கோவிலில் பக்தர்கள் காலையிலிருந்து தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்த பக்தர்களுக்கு கை நீட்டமும், காய்கறிகளும் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணசாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது.

    குடும்ப குடும்பமாக வந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில்களில் கைநீட்டம் வழங்கப் பட்டது. வீடுகளிலும் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் காய்கனிகள் படைத்து வைத்து பொது மக்கள் வழிபட்டனர். வீடுகளில் உள்ள பெரியவர்கள் கால்களில் விழுந்து புதுமண தம்பதியினர் மற்றும் குழந்தைகள் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

    Next Story
    ×