search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி வரலாறு
    X

    ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி வரலாறு

    • பெரும்பாலான வைணவ கோவில்களில் பரமபதவாசல் என்று ஒரு சன்னதி இருக்கும்.
    • ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்த கதவுகள் திறக்கப்படும்.

    ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவை பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கை யாழ்வாரின் பக்தியிலும், திருப்பணியிலும் மகிழ்ச்சியடைந்த ரெங்கநாதர் அவர் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு திருமங்கையாழ்வார், பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியை பெருவிழாவாக கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்காக திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதனை ரெங்கநாதரும் ஏற்றுக்கொண்டு அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

    மற்றொரு தகவலும் உண்டு. என்னவென்றால், கலியுகம் பிறந்ததால் வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடினார்கள். இதனை கண்ட பெருமாள் காவலர்களிடம் வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்? என்று கேட்டார். அதற்கு காவலர்கள் கலியுகம் பிறந்துவிட்டது, இனிமேல் அதர்மம் தலை தூக்கும், தர்மம் நிலைகுலையும், பாவங்கள் பலவிதங்களில் பெருகும். அந்த சூழலில் இருந்து மானிடர்கள் யாரும் தப்ப முடியாது.

    அதனால் வைகுண்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள் என்றனர். உடனே பெருமாள் சொன்னார், கலியுகத்தில் பக்தி பெருகும். தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும் என்று அருளினார். இப்படி பெருமாள் அருளியது மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில்தான். இப்படி பல புராண வரலாறுகள் இருந்தாலும் வைகுண்ட ஏகாதசியன்று சாஸ்திர, சம்பிரதாயப்படி விரதம் கடைபிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெரும்பாலான வைணவ கோவில்களில் பரமபதவாசல் என்று ஒரு சன்னதி இருக்கும். இந்த வாசல் வடக்கு நோக்கி இருப்பதை காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்த கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    வேணு சீனிவாசன் தலைவர், டி.வி.எஸ். குழுமம்

    Next Story
    ×