search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவன் கோவில்களில் நாளை மறுநாள் ஆருத்ரா தரிசனம்
    X

    சிவன் கோவில்களில் நாளை மறுநாள் ஆருத்ரா தரிசனம்

    • சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடுவதையே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கின்றனர்.
    • சிவன் கோவிலில்களில் நாளை இரவு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை நட்சத்திரத்தில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் வருடத்திற்கு 6 முறை அபிஷேகம் நடைபெறும். சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடுவதையே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கின்றனர்.

    நடராஜர் கங்கையை தன் முடி மீது வைத்துக் கொண்டதால் அம்மன் கோபித்து கொண்டு திருவானைக்காவல் கோவிலின் தெற்கு வாசல் அருகே நின்றார். இந்த ஊடலை சரிசெய்ய சிவபெருமானின் பிம்பமான மாணிக்கவாசகர் திருவெம்பாவை 12-வது பாடலில் `ஆர்த்த பிறவித் துயர் கெட' என்னும் பாடலை பாடி இருவரையும் சேர்த்து வைத்ததாக ஐதீகம். இந்த ஊடல் காட்சி திருவாதிரையன்று திருவானைக்காவல் கோவிலில் ஓதுவார் பாட ஊடல் உற்சவம் என்ற பெயரில் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருவாதிரை திருவிழா நடைபெறுகிறது. விழாவைமுன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு ஏத்தி, இறக்கும் நிகழ்ச்சி, 9 மணிக்கு பச்சைபார்த்தல் நடைபெறும் தொடர்ந்து இரவு 10 மணிக்கு நடராஜர் சன்னதியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. கோவில் 4-ம் பிரகாரத்தில் நடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து காலை 9 மணிக்கு ஊடல் உற்சவம் நடைபெறுகிறது.

    இதுபோல் உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் நாளை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடராஜர்- சிவகாமி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதைதொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், சுவாமி புறப்பாடு கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும்.

    மேலும் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நாளை இரவு 10 மணிக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் நடராஜர்- சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மறுநாள் காலை 8 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. உள் மற்றும் வெளி வீதிகளில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதுபோல் லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர், துவாக்குடி அடுத்த திருநெடுங்களநாதர் கோவிலில், நம்பர்-1 டோல்கேட் பகுதியில் உள்ள உத்தமர்கோவில், முசிறியில் உள்ள கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோவில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில், திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் கோவில், திண்ணக்கோணம் பசுபதீஸ்வரர் கோவில், திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோவில், தொட்டியம் அனலாடீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

    Next Story
    ×