search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அவனின்றி அணுவும் அசையாது- ஆன்மிக கதை
    X

    அவனின்றி அணுவும் அசையாது- ஆன்மிக கதை

    • ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை
    • அப்படி ஒரு பாடத்தை நந்தியம்பெருமான் பெற்ற கதையை இங்கே பார்ப்போம்.

    ஆணவம் என்பது மனிதன் கடக்க வேண்டிய முதல் கடினமான பாதையாகும். ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை. அது மனிதர்களின்றி, தேவர்களாக இருந்தாலும் சரி, சிவனின் உடலில் பாதியைப் பெற்ற சக்தியாக இருந்தாலும் சரி.. பாடம் புகட்டப்பட்டே தீரும். அப்படி ஒரு பாடத்தை நந்தியம்பெருமான் பெற்ற கதையை இங்கே பார்ப்போம்.

    கயிலாயத்தின் வாசல் காப்போனாக இருந்தாலும், சிவபெருமானை சுமக்கும் பெரும் பேறு பெற்றவர், நந்தியம்பெருமான். சிவபெருமான் தான் இந்த உலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு முறை உலக உயிர் களுக்கு படியளப்பதற்காக சிவபெருமான் புறப்பட்டார். நந்தி அவரை சுமந்து சென்றார்.

    செல்லும் வழியில் நந்திக்கு ஒரு சிந்தனை உருவானது. 'உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் சிவபெருமானையே நாம் சுமக்கிறோம் என்றால், நம்முடைய சக்தி எப்படிப்பட்டதாக இருக்கும்' என்று அவர் நினைத்தார். சிவனே ஜீவனாக இருக்கிறார் என்பது சிவனடியார்களின் கூற்று. அனைத்து உயிர்களின் ஆன்மாவாக, சிவபெருமானே இருப்பதாக சொல்லப்படுகிறது.

    அப்படி இருக்கையில் நந்தியம்பெருமான் நினைத்த அந்த ஆணவமான சிந்தனை, சிவபெருமானுக்கு தெரியாமல் போய்விடுமா என்ன?. நந்திக்கு தகுந்த பாடம் கற்பிக்க நினைத்தார் சிவபெருமான். உலகை வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், தன்னுடைய சடைமுடியில் இருந்து ஒரே ஒரு முடியை மட்டும் எடுத்து, நந்தியின் மீது வைத்து விட்டு கீழே இறங்கிக்கொண்டார், ஈசன்.

    அதுவரை உலகத்தின் பரம்பொருளான சிவபெருமானையே சுமந்து கொண்டிருந்த நந்திக்கு, தன் மேல் இருந்த ஒரே ஒரு முடியை சுமக்க முடியவில்லை. பாரம் தாங்காமல் தள்ளாடினார். ஒரு அடி கூட அவரால் முன் எடுத்து வைக்க முடியவில்லை. தன்னுடைய இந்த இயலாமை அவரை கலங்கடித்தது. இதுவரை அவர் நெஞ்சில் குடிகொண்டிருந்த ஆணவம் எங்கு சென்றதென்றே தெரியவில்லை.

    அவர் தன் அருகில் நின்று கொண்டிருந்த சிவபெருமானை கலங்கும் கண்களோடு பார்த்தார். அவரது அந்தப் பார்வை, 'எனக்கு ஏன் இந்த நிலை?' என்பது போல் இருந்தது. இப்போது சிவபெருமான் கூறினார். "நந்தியே.. உன்னுடைய மனதில் இருந்த ஆணவத்தை அழிக்கவும், நானே உலக உயிர்களின் ஆன்மாவாக, உலக உயிர்களின் இயக்கமாக இருக்கிறேன் என்பதை நீ உணர்ந்து கொள்ளவும்தான் இப்படிச் செய்தேன்.

    நான் உன் மேல் இருக்கும் வரைதான், உன்னால் என்னை சுமக்க முடிந்தது. உன்னில் ஆணவம் குடிவந்ததும், நான் உன்னை விட்டு விலகிவிட்டேன். நான் விலகியதால், உன்னுடைய இயக்கமும் நின்றுபோனது" என்றார். உண்மையைப் புரிந்துகொண்ட நந்தியம்பெருமான், எல்லாம் இறைவனின் செயலால் நடப்பவை என்ற எண்ணத்தை தன் மனதில் ஆழ வேரூன்றிக் கொண்டார்.

    Next Story
    ×