search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரம் மாரியம்மன் திருத்தலத்தின் சிறப்பு
    X

    சமயபுரம் மாரியம்மன் திருத்தலத்தின் சிறப்பு

    • தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத்தலமாக விளங்கி வருகிறது.
    • அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது.

    திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி, கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன- மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.

    அதர்மம் அழிந்து, தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்திகளின் வேண்டுகோளுக்கிணங்க மாயா சூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்களது தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமை களிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது இக்கோவில்.இன்றும் கருவறையில் உள்ள அம்மனின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.மேலும் இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத்தலமாக விளங்கி வருகிறது.

    ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது செழிப்பையும், வளத்தையும் உணர்த்துவதாகக் கூறுவர். கோவில் முகப்பில் உள்ள நீண்ட பெருமண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என்றழைக்கப்படுகிறது. மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோவிலின் கிழக்கிலுள்ள சன்னதித் தெருவில் அருள்மிகு விநாயகர் திருக்கோவிலும், தெற்கில் அருள்மிகு முருகன் திருக்கோவிலும் அமைந்துள்ளன. தேரோடும் வீதியின் வடக்கே மீண்டும் ஒரு விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் அருள்மிகு ராஜகோபால சுவாமி பிரதிஷ்டை செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    திருவிழாக்கள்

    தைப்பூசத் திருவிழா, பூச்சொரிதல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலிலிருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது. மகிசாசுரனை வதம் செய்து பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதமிருந்து சாந்த சொரூபியாய் மாரியம்மன் என்று பெயர் கொண்டு மக்களுக்கு காட்சியளிக்கிறாள்.

    Next Story
    ×