search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    எம்.சூரக்குடியில் செகுட்டு அய்யனார் கோவிலுக்கு தயாராகும் புரவிகள்
    X

    புரவிகள் தயாரிக்கப்பட்டு வருவதை படத்தில் காணலாம்.

    எம்.சூரக்குடியில் செகுட்டு அய்யனார் கோவிலுக்கு தயாராகும் புரவிகள்

    • விழா வருகிற 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • 6-ந்தேதி புரவி பொட்டலுக்கு முறைப்படி கொண்டு செல்லப்படுகிறது.

    சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குட்பட்ட செகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார், படைத்தலைவி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழாவையொட்டி புரவி எடுப்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா வருகிற 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக புரவிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து செகுட்டு அய்யனார் கோவில் கவுரவ கண்காணிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் கூறுகையில், புரவி எடுப்பு விழாவிற்காக கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி குயவர்களிடம் புரவிகள் செய்ய பிடி மண் வழங்கப்பட்டது. 30 குயவர்கள் புரவி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 2 அரண்மனை புரவிகள் மற்றும் 280 நேர்த்திக்கடன் புரவிகள் என 282 புரவிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 20 புரவிகள் செய்யப்பட்டு வருகிறது.

    செகுட்டு அய்யனார் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடன் புரவிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தென் தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு எம்.சூரக்குடியில் 282 புரவிகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட உள்ளது. மேலும் சுமார் 20 அடி உயரம் கொண்ட அரண்மனை புரவிகளை தூக்குவதற்கான பிரமாண்டமான தூண்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார். குயவர் மணிகண்டன் கூறுகையில், முறையாக புரவிகள் தயாரிக்கப்படுவதற்காக 30-க்கும் மேற்பட்ட குயவர்கள் விரதம் இருந்து மண் எடுத்து புரவிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தயாரித்து வைக்கப்படும் புரவிகள் கை, கால்கள், தலை போன்றவை தனித்தனியாக தயாரிக்கப்பட்டு ஒட்டப்பட்டு குதிரை பொட்டலில் சூலை வைத்து எரியூட்டி காய வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து குதிரை பொட்டலில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தலை ஒட்டப்பட்டு வர்ணம் பூசும் பணி தொடர்ந்து நடைபெறும்.

    குதிரைப் பொட்டலில் இருந்து கிராமத்தார்கள் சார்பிலும் நேர்த்திக்கடன் பக்தர்கள் சார்பிலும் 6-ந் தேதி புரவி பொட்டலுக்கு முறைப்படி கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து புரவி பொட்டலில் முறையாக பூஜை செய்யப்பட்டு புரவி பொட்டலில் இருந்து கோவிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்படுகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×