search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி அமாவாசை: பேரூர் ஆற்றங்கரையில் பக்தர்கள் திரண்டு பலிகர்ம பூஜை
    X

    ஆடி அமாவாசை: பேரூர் ஆற்றங்கரையில் பக்தர்கள் திரண்டு பலிகர்ம பூஜை

    • நொய்யல் ஆற்றங்கரையில் புரோகிதர்களை கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • இன்று பேரூரில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடி அமாவாசை தினம். இந்த நாளில் இந்துக்கள் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் நீராடி தங்கள் முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்வது வழிபடுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக ஆடி அமாவாசை தினத்தில் நீர் நிலைகளில் கூடுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைவு காரணமாக பக்தர்கள் நீர்நிலையில் கூடி தர்ப்பணம் கொடுக்க தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் திரண்டு ஆடி அமாவாசை வழிபாடு செய்தனர்.

    கோவையில் உள்ள பக்தர்கள் பேரூர் சென்று அங்குள்ள நொய்யல் ஆற்றங்கரையில் புரோகிதர்களை கொண்டு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பக்தர்கள் நொய்யல் ஆற்றங்கரையில் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

    ஆற்றங்கரையில் தயார் நிலையில் இருந்த புரோகிதர்களை கொண்டு பக்தர்கள், முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் தர்ப்பை புல், காய்கறி, அரிசி, எள், சாதம் உள்ளிட்டவற்றைகளை படைத்து பூஜை செய்தனர். பின்னர் அவற்றை எடுத்துச் சென்று ஆற்றில் போட்டு மூதாதையரை வணங்கினர். தொடர்ந்து இலையில் சூடன் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

    அதன்பின் ஆற்றங்கரையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரையும், சப்த கன்னியரையும் வணங்கினர். அங்கிருந்து பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதன்பிறகே வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இதனால் நொய்யல் ஆற்றங்கரை மற்றும் பேரூர் கோவில் முன்பு இன்று காலை பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. ஏராளமான வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. காலை வேளையில் அங்கு போதுமான அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. இதன்காரணமாக மெயின் ரோட்டில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்ல பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    அதன்பிறகே ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். ஆங்காங்கே பேரிகார்டுகள் அமைத்து வாகனங்கள் மற்றும் பக்தர்கள் செல்ல வழிவகை செய்தனர். இதேபோல செல்வபுரம் பகுதியிலும் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று பேரூரில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆலாந்துறை மற்றும் மாதம்பட்டியில் இருந்து வந்த வாகனங்கள் பேரூர் செட்டிப்பாளையத்தில் இருந்து சுண்டாக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாக திருப்பி விடப்பட்டன. கோவை மாநகரில் இருந்து பேரூர் சென்ற வாகனங்கள் ஆண்டிப்பாளையம் கல்லூரி அருகே பக்தர்களை இறக்கி விட்டு திரும்பிச் சென்றன.

    பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றங்கரையிலும் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு ஆடி அமாவாசை வழிபாடு செய்தனர்.

    இதனால் அம்பாரம்பாளையம் ஆற்றங்கரை பகுதியிலும் இன்று பக்தர்கள் கூட்டமும், வாகன நெரிசலும் காணப்பட்டது.

    Next Story
    ×