search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பங்குனி உத்திரம் பற்றிய 20 அரிய தகவல்கள்
    X

    பங்குனி உத்திரம் பற்றிய 20 அரிய தகவல்கள்

    • பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
    • பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள்.

    1. மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்தது பங்குனி நாளில்தான். ஆண்டுதோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

    2. சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.

    3. முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.

    4. மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.

    5. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.

    6. இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

    7. காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.

    8. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன் - சீதை, லட்சுமணன் - ஊர்மிளா, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - சுருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    9. அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.

    10. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

    11. பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக் கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான்.

    12. காரைக்கால் அம்மையார் முக்தி யடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

    13. திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாசேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல் வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திரு மழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

    14. பங்குனி உத்திரவிரதம் மேற்கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.

    15. பங்குனி உத்திரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இன்று ( 5-ந்தேதி) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங் குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக் கல்யாணம் நடக்க உள்ளன.

    16. நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலை பங்குனி உத்திரம் நடைபெற உள்ளது.

    17. பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

    18. பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும். பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்ளன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.

    19. பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வரமளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று புராணங்கள் சொல்கின்றன.

    20. கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்றுதான் பூக்கும்.

    Next Story
    ×