search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தமிழ்க்கடவுள் முருகன்
    X

    தமிழ்க்கடவுள் முருகன்

    • முருகன் கோவில்கள் எல்லாம் சிறந்த பிரார்த்தனை தலங்களாக விளங்குகின்றன.
    • ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வம் முருகன். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என விளங்கி அடியார்களுக்கெல்லாம் முருகன் அருள் செய்து வருகின்றான். முருகன் என்றதுமே மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன் பால் மக்களுக்கு எல்லையில்லாத பக்தி உண்டு.

    தமிழ்நாட்டில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் முருகனுக்கு கோவில்கள் அமைத்திருக்கின்றனர்.

    முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி முதலிய சிறப்பு நாட்களில், லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு மகிழ்கிறார்கள். முருகன் கோவில்கள் எல்லாம் சிறந்த பிரார்த்தனை தலங்களாக விளங்குகின்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் முருகன் கோவில்களில் பெருந்திரளாக கூடி வணங்கி மகிழ்கிறார்கள்.

    இன்றைக்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் பண்டைப் பெருந்தமிழ் நூலிலும், முருகன் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.

    மேலும் சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதிநூலை பாடியிருக்கின்றார். அதன் மூலம் ஆறு திருத்தலங்கள் முருகனின் ஆறுபடை வீடுகள் என்ற சிறப்பு பெற்றுள்ளன.

    சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் முருகன் வழங்கப்படுகிறார். புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு. ஓம் என்பது அ,உ,ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பெ£ருள்படும். அ,உ,ம, என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது. முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ,உ,ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.

    முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்த தாகவும் கூறப்படுகிறது. முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    வளம் மிகுந்த வாழ்வு அமைய வரம் மிகுந்த

    சிறுவை முருகனை வழிபட வாருங்கள்.

    சிந்தையிலே எப்போதும் குடியிருப்பான்

    சிறுவை முருகன்'

    Next Story
    ×